(மன்னார் நிருபர்)
(29-06-2022)
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மன்னார் மாவட்டத்திலும் எரி பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் மன்னார் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கழிவு அகற்றும் நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.
-இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
-மன்னார் மாவட்டத்தில் எரி பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதனால் மன்னார் நகர சபையின் கழிவு அகற்றும் வாகனங்களுக்கான எரிபொருட்கள் உரிய முறையில் கிடைப்பதில்லை.
-இதனால் மன்னார் நகர பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கழிவு அகற்றும் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
-இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (29)கழிவு அகற்றும் வாகனங்களுக்கான எரி பொருட்கள் முழுமையாக கிடைக்கவில்லை.
இதன் காரணமாக கழிவு அகற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்க பாரிய சவாலுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்தும் இவ்வாரான நிலை தொடருமாக இருந்தால் மன்னார் நகர பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சகல விதமான கழிவு அகற்றும் நடவடிக்கைகள் இடை நிறுத்தப்படும்.மக்களும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே உரிய அதிகாரிகள் குறித்த விடையத்தில் கவனம் செலுத்தி மன்னார் நகர சபையின் கழிவு அகற்றும் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படுகின்ற வாகனங்களுக்கு தேவையான எரி பொருட்களை உரிய முறையில் வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டால் கழிவு அகற்றும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியும்.என அவர் மேலும் தெரிவித்தார்.