சிவா பரமேஸ்வரன் – மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்
‘Dynasty rulers die nastily’ என்று ஆங்கிலத்தில் ஒரு செலவடை உண்டு.
டில்லியில் நேரு குடும்பத்தினர், பஞ்சாபில் பாதல் குடும்பத்தினர், உத்திர பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் குடும்பத்தினர், பிஹாரில் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினர், தமிழகத்தில் கருணாநிதி குடும்பத்தினர், காஷ்மீரில் அப்துல்லா குடும்பத்தினர், கர்நாடகாவின் தேவகௌடா குடும்பத்தினர், பாகிஸ்தானில் புட்டோ மற்றும் நவாஸ் ஷெரீஃப் குடும்பத்தினர், வங்கதேசத்தில் முஜிபுர் ரஹ்மான் குடும்பம், இலங்கையில் பண்டாரநாயக்க மற்றும் ராஜபக்ச குடும்பத்தினர் என்று தெற்காசியாவிலுள்ள இவர்கள் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு-குடும்ப கட்சி மற்றும் ஆட்சி.
இவர்களில் சிலரை உங்களுக்குத் தெரியும், பலரை உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் தெரிந்துகொள்வது காலத்தின் கட்டாயம்.
ஆனால் அதற்கு முன்னர், இந்தியாவின் மராட்டிய மாநிலத்தின் தலைநகரம் மற்றும் நாட்டின் நிதித்துறையின் தலைநகரம் என்று அறியப்படும் மும்பையில் கடந்த ஒரு வாரமாக இடம்பெற்ற அரசியல் இழுபறிகளும் அதையடுத்து ஒவ்வாத கூட்டணி மற்றும் குடும்ப ஆட்சி குற்றச்சாட்டுக்கு ஆளான அரசின் ஆட்சி பறிபோனதை நீங்கள் அறிந்திருக்கலாம் அல்லது அறிந்துகொள்ள வேண்டும்.
நேற்று அதாவது இந்த வாரம் புதன்கிழமை (29) மிக அபூர்வமாக இந்திய உச்சநீதிமன்றம் இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் நிலவிய அரசியல் நெருக்கடி தொடர்பான அவசர வழக்கை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை விசாரித்து இரவு 9 மணிக்கு, அங்கு உத்தவ்தாக்ரே தலையில் இருந்த சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், இந்திய தேசிய காங்கிரஸ் ஆகியோரின் கிச்சடி ஆட்சி வியாழன்(30) காலை சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என்று தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து உத்தவ் தாக்ரே இரவோடு இரவாகப் பதவி விலகினார்.
அடுத்த 24 மணி நேரத்தில் சிவசேனை கட்சியிலிருந்து பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களுடன் வெளியேறி கிளர்ச்சி செய்த ஏக்நாத் ஷிண்டே, பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் மராட்டிய மாநிலத்தில் முதலமைச்சராக மும்பையில் பதவி ஏற்றார். இப்படியான அரசியல் கேலிக் கூத்துகள் தெற்காசியாவில் புதிதல்ல. மூன்று கால்களில் நிற்பது என்றுமே ஆபத்தானது. அந்த நான்காவது காலை யார் எப்போது இழுத்து கீழே தள்ளுவார்கள் என்கிற அபாயம் தலைக்கு மேல் கத்தியாகவோ அல்லது கையில் கத்தியாகவோ உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் தெற்காசியாவில் குடும்ப கட்சிகள் மற்றும் ஆட்சிகளுக்கு மக்களிடையே ஆதரவு மிகவும் குறைந்துவிட்டது. இதற்கு அடிப்படையில் அரச நிர்வாகத்தில் குடும்பத்தினரின் தலையீடே முக்கியக் காரணம். வயது மற்றும் அரசியல் அனுபவங்களுக்கு அப்பாற்பட்டு சுய கௌரவத்தை இழந்து கட்சியின் தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக அவர்களிடம் வளைந்து நெளிவது, அரசின் அதிகாரிகளின் நியமனம், அரச வேலைகள், சாதாரண வீட்டுக்கு குழாய் இணைப்பு தொடங்கி பல்லாயிரம் கோடி பெறுமான அரச ஒப்பந்தங்கள் குடும்ப உறுப்பினர்கள் கைகாட்டும் ஆட்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்கிற நிலை ஆகியவையே கட்சி மற்றும் மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்துகிறது.
இதற்கு அண்மைக் காலத்தில் சிறந்த உதாரணமாக மராட்டிய மாநிலத்தில் நேற்று (ஜூன் 30 )ஏற்பட்ட ஆட்சி மாற்றம். கடந்த சட்டமன்ற தேர்தலில், சிவசேனை மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டாகப் போட்டியிட்டு ஆட்சி அமைப்பதற்குத் தேவையான இடங்களைப் பெற்றது. ஆனால் சிவசேனை கட்சியின் தலைவர் தானே ஆட்சி காலம் முழுவதும் முதல்வராக இருக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துயாரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டார்களோ அதே காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணியுடன் ஆட்சி அமைத்தார். இதன் பின்னர் முதல்வர் உத்தவ் தாக்ரே மற்றும் அவரது மகன் ஆதித்ய தாக்ரே ஆகியோர் வைத்ததே ஆட்சியில் சட்டம் என்ற குற்றச்சாட்டு வேகமாகப் பரவியது. இதன் காரணமாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் சிவசேனை சார்பில் ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் ஓரங்கட்டப்பட்டனர். சிவசேனையின் சார்பில் சட்டமன்றத்திற்கு தெரிவாகியிருந்த 55 உறுப்பினர்கள் 40 உறுப்பினர்கள் ஏக்நாத் ஷிண்டே பக்கம் தாவி அவருக்கு ஆதரவளித்தனர். சொந்தக் கட்சியிலேயே கிளர்ச்சி செய்து வெறியேற அவர்கள் கூறிய முக்கிய காரணம் `பட்டத்து இளவரசரை` தாண்டி யாரும் எதுவும் செய்ய முடியாது என்பதே.
இந்தியாவை யார் ஆட்சி செய்வார்கள் என்பதை முடிவு செய்யும் முக்கிய மாநிலமாக இருக்கும் உத்தர பிரதேசத்தில் பலம் வாய்ந்த ஒரு தலைவராக இருந்தவர் முலாயம் சிங் யாதவ். ஆனால் அவர் கட்சியை மகனான அகிலேஷ் யாதவிடம் ஒப்படைத்த பிறகு 2014, 2017, 2019, 2022 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் அவரது சமாஜ்வாதி கட்சி படுதோல்வி அடைந்தது. அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்ற பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கைவிட்டார், அதற்கு கடந்த வாரம் இடைத் தேர்தல் நடைபெற்ற போது அவரது கட்சி அங்கு தோல்வியடைந்தது. அவர் வீட்டைவிட்டு வெளியேறுவதில்லை ஏசி அறையிலிருந்தே அரசியல் செய்கிறார் என்று கட்சிக்காரர்களே கூறுகின்றனர்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆளுமைக்க மிக்க தலைவராக இருந்தவர் பிரகாஷ் சிங் பாதல். இந்திரா காந்தியை எதிர்த்து அரசியல் செய்து, ஜனதா கட்சியின் ஆட்சியில் அமைச்சராகவும், சுமார் 10 ஆண்டுகள் பஞ்சாபின் முதலமைச்சராகவும் இருந்தவர் பாதல். ஆனால் தனக்குப் பிறகு மகன் சுக்பிர் சிங் பாதலை கட்சியின் தலைவராகவும் மாநிலத்தின் துணை முதலமைச்சராகவும் ஆக்கினார். அதுமட்டுமின்றி தனது மருமகளை மத்திய அரசில் அமைச்சராக்கினார். அதிலிருந்து கட்சிக்கு வீழ்ச்சி ஏற்பட்டது மட்டுமின்றி ஆட்சியும் பறி போனது. இன்றளவும் கட்சியால் மீள முடியவில்லை.
காங்கிரஸ் கட்சியின் நிலையே பல ஆண்டுகளாகக் கவலைக்கிடமாகவே உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து சுமார் 50 ஆண்டுகள் ஆட்சியில் கோலோச்சியது. குடும்பம் வைத்ததே கட்சியிலும் ஆட்சியிலும் சட்டம் என்பது காங்கிரஸ் ஆட்சியில் எழுதப்படாத விதி. நேரு, இந்திரா, ராஜீவ் ஆகியோர் பிரதமர்களாக இருந்த போது, அவர்கள் நினைத்த மாத்திரத்தில் மாநிலங்களில் கட்சியின் தலைவர்களை மாற்றுவது, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளை மத்திய அரசின் எதேச்சாதிகாரத்தைப் பயன்படுத்திக் கலைப்பது, கட்சிக்கு கப்பம் கட்டாதவர்களை தூக்கி எறிவது என்பதெல்லாம் அக்கட்சியில் சர்வ சாதாரணம். எனினும் கட்சியின் தலைவராக சோனியா காந்தியும் அதற்கு பின்னர் அவரது மகன் ராகுல் காந்தியும் பதவியேற்றதிலிருந்து கட்சிக்கு தொடர்ந்து இறங்குமுகம் மற்றும் தோல்விகள். ஆனாலும் அதற்கு தாயும் மகனும் பொறுப்பல்ல என்று கட்சியில் உள்ள துதிபாடிகள் தொடர்ந்து கூறி ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி கட்சி இன்று அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக தொடர்ந்து நாடகம், அதைத் தொடர்ந்து `போகாதே போகாதே` என்ற நாடக ஒப்பாரி, பின்னர் மீண்டும் தலைமையேற்பு பிறகு மீண்டும் தோல்வி இதுவே காங்கிரஸ் கட்சியின் இன்றைய நிலை.
இந்தியாவில் நிலவும் குடும்ப ஆட்சி மற்றும் வாரிசு அரசியலுக்கு இலங்கை எந்த வகையிலும் விதிவிலக்கல்ல. இன்று மிகவும் மோசமான நிலையில் நாடு இருப்பதற்கும் மேலும் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதற்கும் ராஜபக்ச குடும்பமே காரணம் என்பது ஊரறிந்த உண்மை. உலகில் எங்கும் இல்லாதபடி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து சகோதரர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளின் கையில் நாடு சிக்கித் தவித்தது. இன்றும் ராஜபக்ச சகோதரர்களுக்கு ஆட்சிக் கட்டிலைவிட்டு இறங்க மனம் வரவில்லை. நாடு முழுவதும் சமைத்து சாப்பிட வசதியில்லை, மக்கள் மண்ணெண்ணெய், பெட்ரோர், டீசல், எரிவாய் போன்றவற்றைப் பெறுவதற்கு மணிக்கணக்குச் சென்று இப்போது நாட்கணக்கில் வரிசையில் நிற்கின்றனர். தற்போது அதுவும் இராணுவத்தின் கைகளுக்குச் சென்றுவிட்டது. போர் வெற்றிக்கு தாங்களே காரணம் என்று கூறி எந்த சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று பேரினவாத கொள்கைகளை முன்னெடுத்தார்களோ, இன்று அதே சிங்கள மக்கள் அவர்களுக்கு எதிராக போராடுகின்றனர். இனி தமக்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்பதை உணர்ந்துள்ள ராஜபக்ச சகோதரர்கள் “வந்தவரை லாபம், கொண்டவரை மோகம்” என்ற சிந்தனையில் உள்ளனர்.
இவை அனைத்திலும் மிகவும் முக்கியமானதொரு கேள்வி உள்ளது. மக்கள் ஏன் வாரிசு அரசியலை வெறுக்கின்றனர் அல்லது குடும்ப ஆட்சியை தூக்கி எறிகின்றனர்?
அதற்கு அடிப்படையாக அரசியல் ஆய்வாளர்கள் கூறும் காரணம், `தகுதியில்லாத அடுத்த தலைமுறையிடம் ஆட்சி மற்றும் கட்சியை ஒப்படைப்பது`. அது மட்டுமின்றி வாரிசு அரசியல் ஜனநாயக விழுமியங்களை நசுக்குகிறது; கட்சியில் நீண்டகாலம் உழைத்தவர்களின் உழைப்பும் அபிலாஷையும் அங்கீகரிக்கப்படுவதில்லை, `கொள்ளையடித்த பணம் குடும்பத்திடம் உள்ளது, பணம் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது, அப்படி செலவு செய்த பணத்தை மீண்டும் எடுப்பதற்கு ஊழல் செய்ய வேண்டும், முறைகேடாகச் சம்பாதித்த பணம் குடும்பத்திடமே இருக்கிறது, தேர்தலில் மீண்டும் போட்டியிடப் பணம் தேவை, அந்த பணத்திற்கு குடும்பத்திடம் கையேந்த வேண்டும், வெளிவர முடியாத இந்த சுழற்சியே குடும்ப ஆட்சி மற்றும் வாரிசு அரசியலிற்குக் காரணம்` என்கிறார்கள் அந்த ஆய்வாளர்கள்.
இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியும் அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முக்கிய காரணமும் அவர்கள் குடும்ப ஆட்சி மற்றும் வாரிசு அரசியலிற்கு எதிராக முன்னெடுத்த மிகப் பெரிய பரப்புரையாகும். அது மக்களிடையே நன்றாக எடுபட்டது. எனவே, அவர்களால் மத்தியிலும் பல மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்ற முடிந்தது.
ஆனால் இலங்கையில் இருபெரும் கட்சிகளான ஐக்கிய(மில்லாத) தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து இப்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவாக செயல்படும் கட்சியும் குடும்ப அரசியலில் ஊறிப்போனவை. எனவே குடும்ப ஆட்சி அல்லது அரசியல் என்று அவர்கள் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்ட முடியாது. தேசியளவில் மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகளோ, சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இன்னும் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்திலேயே உள்ளது. பேரினவாதத்திற்கு மாற்றாக ஒரு சித்தாந்தத்தை முன்வைத்து ஆட்சிக்கு வர முடியவில்லை.
குடும்ப ஆட்சி மற்றும் வாரிசு அரசியல் என்பது ஜனநாயகத்தின் சாபக்கேடு. அது தெற்காசியாவில் தீர்க்க முடியாத ஒரு தொற்று வியாதியாக, கொரோனாவை விட மோசமாக 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. ஆனாலும் தற்போது இந்தியாவின் வாரிசு அரசியலில் ஏற்படும் வீழ்ச்சியானது ஜனநாயக விழுமியங்கள் மீண்டும் துளிர்க்கும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.