பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுப்பு.
(மன்னார் நிருபர்)
(01-07-2022)
மன்னார் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை(1) காலை 9 மணி முதல் 11.30 மணி வரை பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
நாட்டில் உள்ள சுகாதார சேவையாளர்களுக்கான பிரத்தியேக எரிபொருள் விநியோகம் வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் வழங்கப்படுகின்ற போதும் மன்னார் மாவட்டத்தில் உள்ள சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உரிய முறையில் எரிபொருள் வழங்கப்படாமை யினை கண்டித்தே குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
-குறித்த பணிப்பகிஸ்பு போராட்டம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம் பெற்றது.
-மன்னார் மாவட்ட சுகாதார திணைக்களத்தில் சுமார் 1200 வரையிலான பணியாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கடமையாற்றி வருகின்றனர்.
-இவர்களில் அதிகமானவர்கள் தூர இடங்களில் இருந்து வந்து தமது நிலையங்களில் கடமையாற்றி வருகின்றனர்.
-தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அதனை தொடர்ந்து ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரச பணியாளர்களை சுழற்சி முறையில் கடமையாற்றுவதற்கும்,வீடுகளில் இருந்து கடமையாற்றுவதற்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
-ஆனால் ஜனாதிபதியினுடைய வர்த்தமானி அறிவித்தல் மற்றும் ஏனைய சுற்று நிறுபங்களின் படி சுகாதார திணைக்கள த்தைச் சேர்ந்த அனைவரும் 7 நாட்களும்,24 மணி நேரமும் கடமையாற்ற வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள்.
-ஆனால் வைத்தியசாலை களில் கடமையாற்றுகின்ற பணியாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் தற்போது வரிசைகளில் நின்று எரிபொருளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட சுற்று நிருபங்களின் படி வெள்ளிக்கிழமை தினங்களில் சுகாதார திணைக்கள த்தைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு ஒதுக்கப்பட்ட எரிபொருள் விற்பனை நிலையங்களில் எரிபொருள் வழங்கப்பட வேண்டும்.
-ஆனால் ஏனைய மாவட்டங்களில் உரிய முறையில் எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது.
மன்னார் மாவட்டத்தில் ஒதுக்கப்பட்ட எரிபொருள் விற்பனை நிலையத்தில் கடந்த வாரமும்,இவ் வாரமும் உரிய முறையில் எரிபொருள் வழங்கப்படாமை யை கண்டித்து குறித்த பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
பல்வேறு தொழில் சங்கங்கள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்ததோடு பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது அங்கு சென்ற மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதனிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர்.
அதனைத் தொடர்ந்து வைத்தியசாலையில் இருந்து ஊர்வலமாக சுகாதார சேவை பணியாளர்கள் மன்னார் மாவட்டச் செயலகம் வரை சென்றனர்.பின்னர் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் அரசாங்க அதிபரிடம் கையளிக்கும் வகையில் உதவி அரசாங்க அதிபரிடம் கையளித்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர்.