இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை, இந்தியா தனது நலன்களுக்காகப் பயன்படுத்தி வருகின்றது’ எனும் குற்றச்சாட்டு, இலங்கையில் பல்வேறு தரப்பினராலும் பரந்தளவில் கூறப்பட்டு வருகின்றது. ‘தவித்த முயலை அடிப்பது போல்’ இலங்கை விவகாரத்தில் இந்தியா நடந்து கொள்வதாக இந்தக் குற்றச்சாட்டுக்கள் அமைந்துள்ளன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைப் பயன்படுத்தி, இலங்கை வசமுள்ள கச்சதீவை – இந்தியா கைப்பற்றிக் கொள்ள வேண்டுமென்றும், இதுவே அதற்குப் பொருத்தமான சந்தர்ப்பம் எனவும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்மையில் தெரிவித்திருந்தமையினை, குற்றச்சாட்டினை முன்வைப்போர் – இதற்கு ஓர் உதாரணமாக சுட்டிக்காட்டுகின்றனர். “பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு, நிவாரண உதவிகளை தமிழகம் வழங்கி விட்டு, கச்சதீவை கைப்பற்றிக்கொள்ள முயற்சிப்பது, பசித்த ஒருவருக்கு சாப்பாடு வழங்கி விட்டு, அவரின் கிட்னியைப் பிடுங்கியெடுப்பதைப் போன்றதொரு செயலாகும்” என, வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் காத்தலிங்கம் அண்ணாமலை சமீபத்தில் உள்ளுர் ஊடகங்கள் முன்னிலையில் கூறினார்.
“தற்போதைய சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி – கச்சதீவை மீட்டெடுக்க வேண்டுமென்று தமிழக முதல்வர் கூறுகின்றார். இலங்கைக்கு நிவாரணமாக மாவையும் சீனியையும் பருப்பையும் அனுப்பி விட்டு, கச்சதீவை கைப்பற்ற முயற்சிப்பது, ‘பசித்த ஒருவனுக்கு உணவளித்து விட்டு, அவனின் கிட்னியை பறித்தெடுப்பது’ போன்ற செயல்” என அவர் குறிப்பிடுகின்றார். சில தினங்களுக்கு முன்னர் ‘நியூஸ் பெஸ்ட்’ உள்ளுர் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த – முன்னிலை சோஷலிச கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்ணம்; “இந்தியா மற்றும் சீனா போன்ற பிராந்திய நாடுகள், இலங்கை நெருக்கடியை தமது தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன” என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.
“இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள் உள்ளன. கடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் சீனாவுடன் சேர்ந்தவாறு இலங்கையின் பொருளாதாரத் திட்டங்கள் இருந்தன. தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை, தனது அரசியல் மற்றும் பொருளாதாரத் தேவைகளுக்காக இந்தியா பயன்படுத்திக் கொண்டிருக்கிறது” என, அவர் தெரிவித்திருந்தார். மன்னாரில் – பூநகரியில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை, இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்குமாறு – இலங்கை ஜனாதிபதிக்கு இந்தியப் பிரதமர் அழுத்தங்களைக் கொடுத்ததாக, இலங்கை மின்சார சபையின் தலைவராக இருந்த எம்.எம்.சீ. பெர்டினன்டோ அண்மையில் தெரிவித்திருந்தமையும், அதன் பின்னர் அவ்வாறு கூறியமையினை அவர் வாபஸ் பெற்றமையும் நினைவு கொள்ளத்தக்கது.
எம்.எம்.சீ. பெர்டினன்டோ வெளியிட்ட அந்த தகவல், இலங்கை மற்றும் இந்திய அரசியலரங்கில் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
மறுபுறம், கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் குவாத்ரா தலைமையிலான இந்திய நிதியமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவினர், இலங்கையில் இந்தியா முன்னெடுக்கவுள்ள வேலைத் திட்டங்களை விரைவாக செயற்படுத்துமாறு அழுத்தம் கொடுத்தது இங்கு குறிப்பிடத்தக்கது. மேற்படி இந்தியக் குழுவினர் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்துப் பேசியிருந்தனர். கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வது மற்றும் மன்னார் – பூநகரி பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்பதற்கான திட்டங்கள் இந்தியாவின் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், சம்பூர் அனல்மின் உற்பத்தித் திட்டம் மற்றும் திருகோணமலையில் அதிக எண்ணைத் தாங்கிகளை அமைப்பதற்கான திட்டம் ஆகியவையும் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்தியா மீது சுமத்தப்படும் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கிழக்குப் பல்கலைக்கழக பொருளியல்துறைப் பேராசிரியர் ரி. பவன் “ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு எந்தவித எதிர்பார்ப்புகளுமின்றி கடன்களை வழங்கி – உதவிக் கொண்டிருக்க மாட்டாது. ஒவ்வொரு உதவிக்குப் பின்னாலும் பூகோள அரசியலும், பொருளாதார நலன்களும் இருக்கும்” என்கிறார்.
“ஒரு நாட்டில் இயற்கை அனர்த்தமொன்று ஏற்படும்போது, ஏனைய நாடுகள் ஓரிரு தடவை ஏதிர்பார்ப்புகளின்றி உதவிகளை வழங்குவது வேறு விடயமாகும். ஆனால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலின் பொருட்டு, ஏனைய நாடுகள் தொடர்ச்சியாக உதவிகளை வழங்கும் போது, அந்த நாடுகள் சில விடயங்களை இலங்கையிடமிருந்து எதிர்பார்க்கும்”.
“இந்தியாவைப் பொறுத்த வரையில் இலங்கை அண்டை நாடாக இருப்பதால், இலங்கைக்கு உதவ வேண்டிய தார்மீகக் கடமையொன்று உள்ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் வரலாற்றில் நீண்டகாலமாக தொடர்புகள் இருந்து வருகின்றன. இலங்கை – இந்தியா ஒப்பந்தம் அதற்கு ஓர் உதாரணமாகும்”. “இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி, இலங்கையிலிருந்து சீனாவை – வெளியே அனுப்புவதையும் இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரம், முதலீடு மற்றும் வர்த்தகம் போன்ற விடயங்களில் இதுவரையில் சீனாதான் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்த விடயத்தில் இந்தியா பொறுமை காத்து வந்ததோடு, அவற்றினை ‘நாம் அவதானித்துக் கொண்டிருக்கிறோம்’ என, இந்தியா பல தடவை கூறி வந்தது. இப்போது சந்தர்ப்பம் பார்த்து இந்தியா உள்ளே வந்திருக்கிறது” எனக் கூறினார்.
“எந்தவித எதிர்ப்பார்ப்புகளுமின்றி, ஒருநாடு நமக்கு உதவிக் கொண்டிருக்கும் என, நாமும் எதிர்பார்க்க முடியாது. இப்போது வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றில் தனது காலினை இலங்கையில் பதிப்பதற்கு இந்தியா முயற்சிக்கும். மின் சக்தி திட்டம், இல்மனைட் ஏற்றுமதி, கச்சதீவு விவகாரங்களில் இந்தியா உள்நுழையலாம். அதேபோன்று, மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் வளம் உள்ளதாக கூறப்படுகிறது அதிலும் இந்தியா ஆர்வம் காட்டலாம்” என பேராசிரியர் பவன் குறிப்பிட்டார்.
“இலங்கையின் எல்லாத்துறைகளிலும் மற்றைய நாடுகள் முதலீடு செய்ய முடியாது. அவ்வாறானதொரு கட்டுப்பாடு உள்ளது. உதாரணமாக தேயிலை, ரத்தினக்கல் உள்ளிட்ட சில துறைகளில் மற்றைய நாடுகள் முதலீடு செய்ய முடியாது. சுற்றுலா, ஆடை உற்பத்தி போன்ற துறைகளே முதலீடுகளுக்காக ஏனைய நாடுகளுக்கு திறந்து விடப்பட்டுள்ளன. இந்த நிலையில், இவ்வாறு கட்டுப்பாடுகள் உள்ள துறைகளில் முதலீடு செய்வதற்கான கோரிக்கைகளை இலங்கையிடம் இந்தியா முன்வைக்கக் கூடிய சாத்தியம் உள்ளது. மன்னார் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை அதானி நிறுவனத்துக்கு வழங்குமாறு இலங்கை ஜனாதிபதிக்கு இந்தியப் பிரதமர் அழுத்தங்களை வழங்கியதாக மின்சார சபையின் முன்னாள் தலைவர் கூறி விட்டு, பின்னர் அதனை மறுத்திருந்தாலும், தாங்கள் உதவி செய்யும் நாடொன்றுக்கு அவ்வாறான அழுத்தத்தை இந்தியா வழங்குவதற்கான சாத்தியங்கள் உள்ளதையும் மறுக்க முடியாது” எனவும் அவர் கூறினார்.
இதேவேளை வடக்கிலிருந்து இந்தியாவுக்கான போக்குவரத்தை ஆரம்பிப்பதிலும் இந்தியாவின் வர்த்தக நோக்கமே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். வடக்கிலிருந்து இந்தியாவுக்கு கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலமாக இந்தியர்கள் இங்கு வந்து வர்த்தக நடவடிக்கைகளைத் தொடங்கினால், அவர்களுடன் நம்மவர்களால் போட்டியிட முடியாமல் போகும். அதாவது இலங்கையின் உள்நாட்டுச் சந்தையை இந்தியாவுக்கு நேரடியாகத் திறந்து விடும் போது, அது இலங்கைக்கு பாதகத்தை ஏற்படுத்தும். ஆனால், வெளிநாடுகளின் முதலீடுகள் இலங்கைக்குத் தேவைதான். வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிக்கும் போது, அது நூறு வீதம் இலங்கைக்கு சாதமாக அமையும் என எதிர்பாக்க முடியாது. சாதகம், பாதகம் என இரண்டும் இருக்கும். அதற்குள் நாம் எவற்றினைப் பெற்றுக் கொள்ளப் போகிறோம் என்பதுதான் இங்கு முக்கியமானதாகும். இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் நுழைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை மீனவர்கள் போராட்டங்களை நடத்துவதைப் போல், தமிழக மீனவர்களும் இலங்கையர்களால் தடுக்கப்படுவதாகக் கூறி, உண்ணா விரதங்களை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, தமிழக மீனவர்களுக்கு ஒரு தீர்வை – தமிழக முதல்வர் வழங்க வேண்டியுள்ளது, அல்லது ஒரு வாக்குறுதியை கொடுக்க வேண்டியுள்ளது. அதற்காகத்தான் அவர் கச்சதீவை மீட்க வேண்டுமெனக் கூறியிருக்கின்றார்.
மன்னார் காற்றாலை மின் திட்டத்தை வழங்க – திறந்த விலைமனுக் கோராமல், இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளமை இலங்கையில் சர்ச்சைக்குரிய ஒரு விடயமாக மாறியுள்ளது. ஆனாலும், இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில், குறித்த திட்டத்துக்காக, திறந்த விலைமனுக் கோரினாலும் அதற்காக விண்ணப்பிக்க எத்தனை கம்பனிகள் முன்வரும் என்பதும் கேள்விக்குரியதாகும். வெளிநாட்டு முதலீடுகளை உள்வாங்குவதென்றால் அதற்கான சூழ்நிலை சரியாக இருக்க வேண்டும். அதாவது பேரினப் பொருளாதார குறிகாட்டிகள் நிலையான தன்மையுடையவையாக இருக்க வேண்டும். ஆனால் இலங்கையில் பணவீக்கம் உச்சமடைந்துள்ளது, எரிபொருள்கள் இல்லை, மின்சாரத் தடை உள்ளது, அரசியல் மற்றும் சமூக அமைதியின்மை காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில், இலங்கையில் முதலீடு செய்வதற்கு வெளிநாட்டவர் எவரும் முன்வர மாட்டார்கள். எனவே, இவ்வாறானதொரு சூழ்நிலையில் அதானி நிறுவனம் இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்வருகின்றமையினை இலங்கைக்கு சாதகமாகவே நான் பார்க்கிறேன்” என்றும் அவர் கூறினார்.
“1983க்கு முன்னர் இலங்கையில் முதலீடு செய்வதற்கு வெளிநாட்டவர்கள் பலர் முன்வந்தனர். ஆனால், 83 ஜுலை கலவரத்தையடுத்து, அந்த முதலீட்டாளர்கள் திரும்பிச் சென்று, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் அந்த முதலீடுகளைச் செய்தனர். இலங்கை விவகாரத்தில் ‘தவித்த முயலை அடிப்பது’ போன்ற செயலில் இந்தியா ஈடுபட்டாலும் கூட, இப்போதுள்ள நிலையில் இந்தியாதான் இலங்கைக்குள்ள ஒரேயொரு நம்பிக்கையாகும். சீனாவைப் பொறுத்தவரை இலங்கை விவகாரத்தில் வர்த்தக ஈடுபட்டினையே வெளிப்படுத்தி வருகின்றது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கை விவகாரத்தில் வர்த்தக ஈடுபட்டுடன் தார்மீகத்தையும் வெளிப்படுத்தி வருகின்றது. குறிப்பாக, தமிழகத்துக்கும் இலங்கையின் வடக்கு – கிழக்கு மக்களுக்கும் இடையில் ஓர் உறவு உள்ளது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்த வரையில், இலங்கை விவகாரத்தில் அவர்கள் வேறொரு நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுகின்றனர். எனவே, இந்தியாவை இப்போதுள்ள நிலையில் இலங்கையினால் தவிர்க்க முடியாது” என, பேராசிரியர் பவன் தெரிவித்தார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து, இலங்கைக்கு இந்தியா 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான உதவியை வழங்கியுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் கடந்த வாரம் வெளிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்நியச் செலாவணிக்கு ஆதரவாக 2 பில்லியன் டாலர்களும், கடனுதவியாக 1.5 பில்லியன் டாலர்களுமாக மேற்படி உதவியை இந்தியா வழங்கியுள்ளது. மேலும் 3 பில்லியன் இலங்கை ரூபா மதிப்பிலான அரிசி, பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட மனிதாபிமான நிவாரணப் பொருட்களையும் இலங்கைக்கு இந்தியா அனுப்பியது. இவை இந்திய மக்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் 24ஆம் தேதி இந்தப் பொருட்கள் இலங்கையை வந்தடைந்தன. தமிழக அரசினால் வழங்கப்படும் 40000 மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளடங்கிய பாரிய நிவாரணத்தின் இரண்டாம் கட்டமாக – மேற்படி நிவாரணத்தொகுதி அமைந்திருந்ததாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டிருந்தது.