இலங்கையில் நிலவும் மிகவும் மோசமான சமூகப் பொருளாதார நெருக்கடி குறித்து யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் பெர்னார்ட் ஞானப்பிரகாசம் கடுமையாகச் சாடியுள்ளார். வடக்கு கிழக்குப் பகுதியிலிருந்து சிறுபான்மை மக்களின் மதத் தலைவர்கள் யாரும் நாட்டில் தற்போது நிலவும் நிலைமை குறித்து இதுவரை கருத்து வெளியிடாத நிலையில் யாழ் ஆயரின் கருத்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரியளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
“நமது நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றிய பெருமை தற்போதைய ஆட்சியாளர்களையே சேரும்” என்று கனடா உதயனிடம் ஆயர் ஞானப்பிரகாசம் தெரிவித்தவுடன் அந்த கருத்து சமூக ஊடகங்களில் தீயாகப் பரவியது. ஆஸ்திரேலியா தொடக்கம் கனடா வரை பல நாடுகளில் உள்ளவர்கள் அது தொடர்பிலான டிவீட்களை பகிர்ந்தனர். புலம்பெயர் தமிழர்களுக்கு அப்பாற்பட்டு இலங்கைவாழ் சிங்கள மக்களும் கூட இதை மறுட்வீட் செய்துள்ளனர்.
போர்க்காலத்தில் கூட இல்லாத வகையில், இலங்கையில் வாகனங்களுக்கான எரிபொருள், வீட்டில் சமையல் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் ஆகியமைக்காக மக்கள் கடந்த பல மாதங்களாக அல்லும் பகலும் தெருவில் அல்லாடும் காட்சிகள் சர்வதேச அளவில் பரவியுள்ளன. அந்த காணொளிகளை பன்னாட்டு ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.
போர்க்காலத்திற்குப் பிறகு யாழ் ஆயரிடமிருந்து வந்துள்ள மிகவும் கடுமையான விமர்சனமாக இது பார்க்கப்படுகிறது என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
நாட்டில் பணவீக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளது மேலும் பன்னாட்டளவில் மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் முதல் பத்து நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளது என்று சர்வதேச நிதிநிலை நிர்வாகம் தரவுகள் காட்டுகின்றன.
இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளும், ஐ எம் ஃப் போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் கடன் மற்றும் நிதியுதவிகளை நிறுத்தி வைத்துள்ளன அல்லது மட்டுப்படுத்தியுள்ளன. அதன் காரணமாக மக்களின் அன்றாட வாழ்வு பெரும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கிறது. உலக உணவு திட்டம் மற்றும் ஐ நாவும் இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை மிகப்பெரியளவில் அதிகரித்துள்ளது, இந்த நிலை தொடர்ந்தால் பட்டினிச் சாவுகள் தவிர்க்க இயலாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதன் பின்புலத்தில் “நாட்டை ஆட்சியாளர்கள் பிச்சைக்கார நாடாக மாற்றியுள்ளனர்” என்று தெரிவித்துள்ள கருத்து மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். கடந்த ஆறு மாத காலத்தில் நாட்டில் உணவுப் பொருட்களுக்குத் தொடர்ந்து கடும் தட்டுப்படு நிலவி வரும் சூழலில், விலைகள் பன்மடங்கு உயர்ந்துள்ளன.
மக்கள் படும் துன்பங்கள் குறித்து இலங்கை கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஏற்கனவே கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். இப்போது யாழ் ஆயரும் மக்களின் நிலை குறித்து தனது விசனத்தை தெரிவித்துள்ளார்.
ஆட்சியாளர்கள் மக்களை வாக்கு வங்கி அரசியலிற்காகவும் தமது சுயநலத்திற்காகவும் பயன்படுத்தினார்கள் என்றும் யாழ் மறைமாவட்ட ஆயர் கவலை வெளியிட்டார்.
”கடந்த 74ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்டவர்கள் மக்களை தம்முடைய வாக்குகளுக்காகப் பாவித்தார்கள். ஆனால் இந்த நாட்டிலிருந்த வளத்தை எல்லாம் சுரண்டி விட்டார்கள். ஒருவிதமாக கடைசியில் மிகப் பாரதூரமான சுரண்டல்களுடன் இன்று நாடு பிச்சை எடுக்கின்ற நாடாக வந்துவிட்டது”.
ஆட்சியாளர் நாட்டின் சிறப்புகள் மற்றும் பெருமைகளை மழுங்கடித்துவிட்டனர் என்று அவர் மனம் வருந்தினார். “இந்து சமுத்திரத்தின் முத்து என்று சொல்லப்பட்ட இந்த இலங்கை நாடு இன்று பிச்சை எடுக்கின்ற இலங்கை நாடாக மாறி உள்ளது. இதற்குக் காரணமான அனைவருமே மறுமொழி சொல்ல வேண்டியவர்களாகவே இருக்கின்றார்கள். ஏனென்றால் மக்களை இந்த நாட்டின் குடிமக்களாக ஆட்சியாளர்கள் பார்க்கவில்லை. மாறாக தமது வாக்குவங்கியாக பாவித்துள்ளார்கள்”.
அதிகாரத்தில் இருப்பவர்கள் தம்மை இந்த நாட்டின் உண்மையான பிரதிநிதிகள் என்று கூறினால் தங்களுடைய பிரச்சனை எல்லாம் தீர்ப்பதற்கு வழிமுறையை கண்டிருப்பார்கள், அவற்றைச் செய்யாமல் மக்களை வாக்குகளுக்காக ஆட்சியாளர்கள் பாவித்து இருக்கின்றார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.
”மக்களை ஏமாற்றி வாக்கினைப் பெற்றிருக்கின்றார்கள். அவ்வாறு நாட்டு மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுநாடு சுரண்டப்பட்டதனால் இன்று நாடு படுகுழியில் விழுந்துள்ளது”.
அண்மையில் IMF நிறுவனம் இலங்கையிடம் பல கேள்விகளைக் கேட்க இருந்தது. அதேபோன்று முன்னாள் பிரதம மந்திரியிடம் 37 கேள்விகள் ஐ.எம்.எவ்வால் கேட்கப்பட இருந்தது. அதாவது ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பிலேயே அவர்கள் கேள்வி கேட்க இருந்தார்கள்.
ஆனால், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன. அதனால் ஐ.எம்.எவ் கேட்க வேண்டிய கேள்வியினை கேட்காது திரும்பிச் சென்று விட்டார்கள் எனவும் அவர் கூறினார்.
”எந்த நாடும் எமக்கு உதவி செய்யத் தயாராக இருக்கின்றார்கள். ஆனால் மோசடி, ஊழல் நிறைந்த இந்த நாட்டு அரசாங்கத்தை நம்பி எந்த நாடும் நமக்கு உதவுவதற்குத் தயாராக இல்லை.இதனை முதலில் நிவர்த்தி செய்தால் மாத்திரமே எமக்கு ஏனைய நாடுகளின் உதவி கிடைக்கும். அதற்குப் பொறுப்பானவர்கள் ஓடி ஒளிந்து விட்டார்கள். இந்த நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் இந்த நாடு ஒரு பிச்சைக்கார நாடாக மாறிவிட்டது” என யாழ் மறைமாவட்ட ஆயர் ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.