மன்னார் நிருபர்
07-03-2022
மன்னார் மாவட்டத்தில் எரிபொருள் பெற்றுக் கொள்வதிலும் வழங்குவதிலும் பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு தொடர்ச்சியாக முரண்பாடுகள் ஏற்பட்டு வருகிறது.
ஒரு சிலர் எரிபொருளை கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாலும் எரிபொருள் வழங்கும் முறையில் தலையீடு செய்வதாலும் தேவையுடைய பல நூற்றுக்கணக்கான மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டோக்கனும் கிடைக்காமல் எரிபொருளும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் காத்திருக்கின்றனர்.
குறிப்பாக மன்னார் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக எரிபொருள் இவ்வாரம் முழுவதும் கிடைக்காத பலர் இன்றைய தினம் வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இருப்பினும் அத்தியாவசிய சேவைகளுக்கு என மாத்திரமே எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக அரச தரப்பால் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மக்களுக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.
பெட்ரோல் வழங்கா விட்டாலும் பெட்ரோலுக்கான டோக்கன் வழங்குமாறு கோரிக்கை மக்களால் முன்வைக்கப்பட்ட போதிலும் வரும் செவ்வாய் முதல் எரிபொருள் வழங்களில் ஏற்படும் சிக்கலை தவிர்பதற்காக கிராம ரீதியாக எரிபொருளை பெற்று கொள்ளும் நடைமுறை மேற்கொள்ளப்பட இருப்பதால் டோக்கன் வழங்க முடியாத நிலை காணப்படுவதாக அப்பகுதி க்கு வருகை தந்த பிரதேச செயலாளர் தெரிவித்த நிலையில் முரண்பாடு அதிகரித்தது.
பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடற்படையினர் இருந்தும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலையில் பிரதேச செயலாளர் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களை வெளியில் செல்ல முடியாத வகையில் மக்கள் தடுத்துள்ளனர்.
இதன் காரணமாக மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாரம் மன்னார் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மூன்று தடவைகளில் 19,800 லீட்டர் எரிபொருள் கிடைக்கப்பெற்றுள்ளது. அதில் 2600 பொது மக்களின் மோட்டார் சைக்கிள்களுக்கும், 905 முச்சக்கர வண்டிகளுக்கும் 150 கார்களுக்கும் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரம் 700 அரச உத்தியோகத்தர்களுக்கு 1500 ரூபா வீதமும் 37 இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு 750 ரூபாய் வீதம் இவ் வாரம் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக நகரசபை ஊழியர்கள், பொலிஸாருக்கு எரிபொருள் வழங்கப்படவில்லை.
எரிபொருள் இன்மையால் மன்னார் நகரசபை உத்தியோகத்தர்கள் தங்களுடைய சுத்திகரிப்பு பணியையும் நிறுத்தியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் தங்கள் தேவைகளுக்கு மீறி எரிபொருளை பெற்று அதை பதுக்கி கள்ள சந்தையில்ச அதிக விலைக்கு விற்கும் ஒரு சிலரால் தொடர்ச்சியாக தேவையுடைய மக்களுக்கு எரிபொருள் கிடைக்காமல் பாதிக்கப்படுவதுடன் மன்னார் மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போராட்டங்களும் அமைதியின்மையும் இடம் பெற்று வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
எனவே எரிபொருள் நிலையங்களுக்கு வருகை தரும் மக்கள் வீதிகளை மறிப்பதனாலும் அரச உத்தியோகஸ்தர்களை திட்டுவதாலும் போராட்டங்களில் ஈடுபடுவதானலும் தீர்வு கிடைக்க போவதில்லை என்பதுடன் உங்களுடனேயே உங்களுக்குள் வரிசையில் இருந்து எரிபொருளை பெற்று பதுக்கும் நபர்களை அடையாளப்படுத்தி அவர்களை அப்புறப்படுத்தும் போதே இப் பிரச்சினை தீர்க்கப்படும்.
உங்கள் பகுதியில் எரிபொருள் பதுக்கல் மற்றும் எரிபொருளை அதிக விலைக்கு விற்பவர்களை அடையாளம் கண்டால் பொலிஸாருக்கு அல்லது நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினருக்கோ அறிவியுங்கள்