‘சிவமயச் செல்வி’ மீனா தவரட்ணம் அவர்களின் பாராட்ட விழாவில் இங்கிலாந்து போல் சத்தியநேசன் புகழராம்
கனடா வாழ் வர்த்தகப் பிரமுகர், சாந்தா பஞ்சலிங்கம் அவர்கள் போன்று தங்களுக்கு கல்விச் செல்வத்தை ஊட்டிய எமது ஆசிரியப் பெருந்தகைகளை மக்கள் மத்தியில் கௌரவிக்க வேண்டும். அத்துடன் அவர்கள் வாழும் போதே கௌரவிக்கப்பட வேண்டும் என்ற கூற்றை ஒரு வேத வாக்காகக் கொண்டு நாம் காரியங்களை ஆற்ற வேண்டும். அந்த வகையில் இன்றை இந்த விழாவை உலகெங்கும் பல நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த விருந்தினர்கள் ம த்தியில் எமது ஊரின் நட்சத்திர ஆசிரியையாக விளங்கிய திருமதி மீனா தவரட்ணம் அவர்களின் பாராட்டு விழாவில் கலந்து கொள்வதில் நான் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்’ இவ்வாறு தெரிவித்தார் இங்கிலாந்து வாழ் முன்னாள் நகர பிதா திரு போல் சத்தியநேசன்.
கனடாவில் வாழும் ‘சிவமயச் செல்வி’ மீனா தவரட்ணம் அவர்களைப் பாராட்டும் வகையில் கனடா வாழ் வர்த்தகப் பிரமுகர், சாந்தா பஞ்சலிங்கம் அவர்கள் ஏற்பாடு செய்த விழாவில் இங்கிலாந்து போல் சத்தியநேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஸ்காபுறோவில் அமைந்துள்ள ஜேசிஎஸ் விழா மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி பாராட்டு விழாவில், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பொறுப்பை சாந்தா அவர்களின் நெருங்கிய நண்பர் கென் கிருபா அவர்கள் ஏற்றிருந்தார். அவர்தனத பணியை தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.
மேற்படி விழாவில் கலந்து கொள்ளவென பல நாடுகளிலிருந்து பழைய மாணவர்கள் தங்கள் குடும்பத்தவர்களோடு பலர் வருகை தந்திருந்தார்கள்.
வர்த்தகப் பிரமுகர சாந்தா பஞ்சலிங்கம் அவர்கள் தனது குடும்பத்தினர் சகிதம் நண்பர்கள் பலர் உடனிருந்து ஏற்பாடுகளைக் கவனிக்க. இந்த விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அன்றைய தினம் பாராட்டுவிழா எடுக்கப்பெற்ற சிவமயச் செல்வி’ மீனா தவரட்ணம் அவர்களுக்கு ‘சிவமயச் செல்வி’ என்னும் அற்புதமான பட்டத்தை வழங்கியவர் அமரர் ஈழத்துச் சிவானந்தன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
விழாவில் ‘உரும்பிராய் பாடசாலைகளின் பழைய மாணவர்கள் சங்கம் சாந்தா பஞ்சலிங்கம் அவர்களோடு ஒத்தாசையாக இருந்து விழாவை சிறப்பாக நடத்தியது அதன் உறுப்பினர்களும் விழாவில் கலந்து கொண்டார்கள்.
முன்னாள் ஆசிரியர் ‘சிந்தனைப் பூக்கள்’ பத்மநாதன் அவர்கள் சிவமயச் செல்வி மீனா தவரட்ணம் அ வர்கள் பற்றிய விளக்கமாக உரையொன்றை வழங்கினார்.
அங்கு உரையாற்றிய கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்கள் தனது உரையில் ‘ இந்த விழாவை நான் ஒரு சர்வதேச விழாவாகத் தான் பார்க்கின்றேன். சர்வ லட்சணமும் பொருந்த ஆசிரியப் பெருந்தகை மீனா தவரட்ணம் அவர்கள் சிறந்ததொரு சமயப் பேச்சாளராகவும் விளங்கினார் என்றும் ஆங்கிலத்தில் சிறப்பாகவும் கருத்தாழ மிக்கதாகவும் உரையாற்றக் கூடியவர்களில் இவருக்கு நிகர் இவரே ஆவா’ என்றும் தெரிவித்தார்.