(05-07-2022)
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில் பள்ளிக்கு செல்லும் சிறுமிகள் சமீப காலமாக கடத்தப்பட்டு வருவதால் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்த மேலும் 8 பேர் அகதிகளாக தனுஷ்கோடியை வந்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (4) இரவு யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறையை சேர்ந்த சேர்ந்த சசிகலா,கதிர், கமலா ராணி உள்ளிட்ட 8 பேர் ஒரு படகில் புறப்பட்டு இன்று திங்கட்கிழமை (5) காலை 5 மணி அளவில் தனுஷ்கோடி அடுத்த அரிச்சல்முனை கடற்கரையில் வந்திறங்கினர்.
தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் போலீசார் இலங்கைத் தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலை அதிகரித்துள்ளது. அதே போல் டீசல் மற்றும் பெட்ரோல் விலையும் வெகுவாக உயர்ந்துள்ளது.
விலைவாசி ஒரு பக்கம் உயர்வு,மறுபக்கம் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது, 2 லிட்டர் மண்ணெய் வாங்க 4 நாட்கள் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது,
தொடர் மின்வெட்டு அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளது.மேலும் சமீப காலமாக வடக்கு மாகாண பகுதியில் பள்ளிக்கு செல்லும் சிறுமிகள் கடத்தி கொலை செய்யப்படுகிறார்கள். சிறுமிகளை கடத்தும் கும்பல் ஒன்று யாழ்ப்பாணத்தில் உள்ளதாக தகவல் வெளியானதையடுத்து பாதுகாப்பு தேடி இலங்கை பணம் தலா ஒருவருக்கு 1 லட்சம் ரூபாய் கொடுத்து படகில் தமிழகத்திற்கு அகதிகளாக வந்த தாக இலங்கை தமிழ் பெண் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் எட்டு பேரையும்;; மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளதாக மரைன் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ந்தேதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 103 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.