ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்த கூற்றுப்படி போயா தினமான புதன்கிழமை (13) அன்று தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என தேசிய பிக்குகள் முன்னணியினர் அலரி மாளிகை முன்பாக சத்தியாக்கிரகத்தினை ஆரம்பித்துள்ளனர்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்த கூற்றுப்படி புதன்கிழமை அவர் தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய வேண்டும். அதேபோன்று ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியே இந்த சத்தியாக்கிரக போராட்டத்தை அந்த புத்த பிக்குகள் ஆரம்பித்துள்ளனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க `டீல் போட்டு` பதவியில் இருக்க அனுமதிக்க மாட்டோம் எனவும் தேசிய பிக்குகள் முன்னணியினர் தெரிவிக்கின்றனர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை பதவி விலக கோரி செவ்வாய்க்கிழமை கண்டி தலதா மாளிகை முன்னால் பிக்குமார் சத்தியாகிரக போராடாடத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜூலை 9 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதி இல்லம், அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகமான அலரி மாளிகை என்பன போராட்டக்காரர்களின் வசமானது. இதனைத் தொடர்ந்து தலைமறைவான ஜனாதிபதி தான் பதவி விலகுவதாக அறிவித்த அதேநேரம் அதற்கு செவ்வாய்க்கிழமை காலக்கெடு முன் வைத்தார்.
இவ்வாறு காலக்கெடு முன்வைத்த ஜனாதிபதி நாட்டில் இருந்து தப்பிச் செல்ல எடுத்த முயற்சிகள் பலன் அளிக்காதுவிட்டால் பதவி விலகும் முடிவை தள்ளி வைக்ககூடும் என தற்போது எதிர்வு கூறப்படும் நிலைமயிலேயே பிக்குகள் இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதேநேரம் புதன்கிழமை அன்று ஜனாதிபதி பதவி விலக மறுத்தால் மறுநாள் (14) முதல் போராட்டங்கள் மேலும் உச்சம் பெறலாம் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது.