பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் மஹிந்த ராஜபக்ச எந்த விமான நிலையத்தில் வந்து இறங்கி வெற்றி பெருமிதத்தோடு மண்ணைத் தொட்டு கும்பிட்டு கைகளை அசைத்தாரோ,அதே விமான நிலையத்தில் ஓர் அகால வேளையில் அரச மரியாதைகள் எதுவும் இன்றி ரகசியமாகத் தப்பிச்செல்லும் ஒரு குற்றவாளியை போல அவருடைய தம்பியார் கோட்டாபய ராஜபக்சே தப்பி சென்றிருக்கிறார்.
இலங்கைதீவின் வரலாற்றில் முரணான காட்சிகள் யாவும் அரங்கேறும் காலகட்டம் இது.மத நம்பிக்கை உள்ள தமிழ் மக்கள் அல்லது பிரயோகிக்கவியலாத கோபத்தோடு தவித்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள் இது கர்மா என்று கூறுவார்கள். கடந்த சில மாதங்களாக நாட்டில் நடப்பவற்றை அவர்கள் பாவ புண்ணிய கணக்குக் கூடாக விளங்கிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.
இப்பொழுது கோட்டா நாட்டைவிட்டு ஓடிவிட்டார். இக்கட்டுரை எழுதப்படும் நாளில் அவர் தன் பதவியை ராஜினாமா செய்வார் என்று முன்பு அறிவித்திருந்தார்.ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. மாறாக தான் இப்பொழுது வெளிநாட்டில் இருக்கும் காரணத்தால் ரணில் விக்ரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமித்திருப்பதாக சபாநாயகர் கூடாக அறிவித்திருக்கிறார். அவர் உத்தியோகபூர்வமாக வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து தப்பிச் சென்றார். அதுவும் நள்ளிரவில்.எனினும் அவர் உத்தியோகபூர்வமாக வெளிநாட்டில் இருப்பதாகக் காட்டிக்கொண்டு பிரதமரை பதில் ஜனாதிபதியாக நியமித்து இருக்கிறார்
பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் ரணில் நிச்சயமாக ராஜபக்சக்களை பாதுகாப்பார் என்பது உலகறிந்த விடயம். 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின்போது அவர் அதை கச்சிதமாக செய்தார்.தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த சுமூகமாக ஆட்சியை கைமாற்ற மாட்டார் என்று ஒரு எதிர்பார்ப்பு அப்பொழுது காணப்பட்டது.எனினும் ரணில் மஹிந்தவை அவருடைய இடத்துக்கு சென்று சந்தித்தார்.அச்சந்திப்பின் பின் ஆட்சி சுமுகமாக கைமாறியது. அதன்பின் நடந்த நல்லாட்சி என்று அழைக்கப்படும் ஆட்சி காலத்தில் ராஜபக்சக்கள் பெரும்பாலும் தண்டிக்கப்படவில்லை.இளைய ராஜபக்சவாகிய நாமல் சிறிது காலம் சிறை சென்றார். மூத்த ராஜபக்சக்கள் யாரும் பிடிபடவில்லை.அதாவது ரணில் ராஜபக்சக்களை பாதுகாத்தார். உள்நாட்டிலும் பாதுகாத்தார் வெளிநாடுகளிலும் பாதுகாத்தார்.
மொத்தத்தில் ரணில் விக்ரமசிங்க ராஜபக்சக்களைப் பாதுகாப்பார். இப்பொழுதும் அவர் அதைத்தான் செய்கிறார். நாட்டை விட்டுத் தப்பியோட எத்தனித்த ஜனாதிபதியை விமான நிலைய அதிகாரிகள் முதலில் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.அமெரிக்கா,இந்தியா போன்ற நாடுகள் அவரை வரவேற்கத் தயாராக இருக்கவில்லை. எனவே அவர் மாலைதீவுகளுக்குத் தப்பிச் சென்றார். அவ்வாறு நள்ளிரவில் அவர் தப்பிச் செல்வதற்குரிய ஏற்பாடுகளை ரணில் விக்கிரமசிங்கவே செய்து கொடுத்ததாக பரவலாக நம்பப்படுகிறது. இவ்வாறு ராஜபக்சக்களை பாதுகாப்பதன்மூலம் ரணில் தனது நீண்ட கால கனவையும் பாதுகாக்கலாம்.ஜனாதிபதியாக வரலாம் என்று அவர் ஆசைப்படுகிறார். அதை ராஜபக்சர்களின் தாமரை மொட்டு கட்சி அனேகமாக ஆதரிக்கும். ஆனால் ஏனைய எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஆர்ப்பாட்டக்காரர்களும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.அவ்வாறு ரணிலையும் அகற்றினால் நாட்டின் நிலை என்ன?
ஏற்கனவே நாட்டில் அரசாங்கம் இல்லை என்ற ஒரு நிலை காணப்படுகிறது.பொருளாதார நெருக்கடிகளைச் கையாள்வதற்கு ஏதாவது ஒரு கட்டமைப்பு தேவை. அவ்வாறான கட்டமைப்பு இல்லையென்றால் நெருக்கடிகள் மேலும் தீவிரமடையும். அது ஏழைகளைக் கடுமையாகப் பாதிக்கும். ரணில் ஏற்கனவே பன்னாட்டு நாணய நிதியத்துடன் உரையாடல்களை தொடங்கியவர்.பன்னாட்டு நாணய நிதியம், மேற்கு நாடுகள் போன்றவற்றின் விருப்பத்தெரிவு.அவர் இல்லாத இடத்தில் வேறு யாரை மேற்கு நாடுகள் ஏற்றுக் கொள்ளும் என்ற கேள்வியும் உண்டு.அவருக்கு பதிலாக யாரை கொண்டு வந்தாலும் அந்த தலைவர் மேற்கு நாடுகளின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும். அதற்கு கொஞ்சம் காலம் எடுக்கும். ஆனால் அதற்கிடையில் நாடு மேலும் நெருக்கடிக்குள் மூழ்கி விடும். எனவே எதிர்க்கட்சிகள் ரணிலை விட பிரகாசமான ஒரு தெரிவை முன்வைக்குமா என்ற கேள்வி உண்டு.
அதேசமயம் மக்கள் எழுச்சிகளை ஆதரிப்பவர்கள் பின்வரும் விடயங்களைச் சுட்டிக்காட்டுகிறார்கள். கடந்த ஒன்பதாம் தேதி வரையிலும் போராட்டத்தின் கனிகளை ரணில் தன்னுடைய சட்டப்பைக்குள் போட்டுக் கொண்டார்.அவர் பிரதமராக வந்திராவிட்டால் கோட்டா மே ஒன்பதுக்கு முன்னரே அகற்றப்பட்டிருப்பார்.அதாவது போராட்டத்தின் இறுதி வெற்றியை ரணில் தாமதப்படுத்தினார். இனிமேலும் ரணிலிடம் அதிகாரத்தை கொடுத்தால் அவர் போராட்டத்தின் இறுதி வெற்றியை ஒத்திவைப்பது மட்டுமல்ல, போராட்டத்தையே நீர்த்துப்போகச் செய்து விடுவார். எனவே போராட்டம் அதன் வழியில் போகட்டும்.ரணில் என்ற வேகத்தடுப்பைப் பயன்படுத்தி போராட்டத்தைத் திசை திருப்பவோ அல்லது பின்னடைய செய்யவோ ராஜபக்சக்களும் தாமரைமொட்டுக் கட்சியும் முயற்சிப்பதை தடுக்க வேண்டும்.
ரணில் இல்லையென்றால் நாடாளுமன்றம் ஏதோ ஒரு இடைக்கால ஏற்பாட்டுக்கு போக வேண்டியிருக்கும். அந்த இடைக்கால ஏற்பாடு தோல்வி அடைந்தால் நாடாளுமன்றம் தோல்வி அடைந்ததாக கருதப்படும். ஏற்கனவே நாடாளுமன்றம் தோல்வி அடைந்து விட்டது என்பதே உண்மை. இந்நிலையில் முதலில் கோத்தாவை போக சொல்லி போராடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்னர் மகிந்தவை போக சொல்லி கேட்டார்கள்.அதன் பின்னர் மே மாதம் நாடாளுமன்றத்தில் உள்ள திருடர்களைப் போக சொல்லி கேட்டார்கள். அந்தப் போராட்ட கிராமத்தை அவர்கள் நாடாளுமன்றத்தின் வாசலில் அமைத்தார்கள். அந்த கிராமத்துக்கு “ஹொரு கோகம”என்று பெயர் வைத்தார்கள் “ஹொரு” என்பது சிங்கள பேச்சுவழக்கில் திருடர்கள் என்று பொருள். எனவே நாடாளுமன்றம் ஒரு பொருத்தமான தீர்வைக் கண்டடையத் தவறினால், திருடர்களை அகற்றும் போராட்டத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னெடுக்க வேண்டிஇருக்கும் என்று போராட்டத்தை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்கள். இக்கட்டுரை எழுதப்படுகையில்போராட்டம் நாடாளுமன்றத்தை முற்றுகையிடத் தொடங்கி விட்டது.
நாடாளுமன்றத்தை நிராகரிப்பது அல்லது நாடாளுமன்றத்துக்கு எதிராகப் போராடுவது என்பது அதன் தர்க்கபூர்வ விளைவைப் பொறுத்தவரை, பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்த ஒரு நிலைதான். பிரதிநிதித்துவ ஜனநாயகம் வேண்டாம் என்றால் அதற்கு மாற்று என்ன? குமார் குணரட்ணம் கூறுவதுபோல மக்கள் அதிகார சபைகளால் நாட்டை உடனடியாக நிர்வகிப்பதற்குரிய கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுமா?
கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டக்காரர்கள் மீது வைக்கப்படும் முக்கியமான விமர்சனம் என்னவென்றால் அங்கே ஒரு மையக் கட்டமைப்பு,ஒரு தலைமை, ஒரு சித்தாந்த அடித்தளம் இல்லை என்பதுதான். அது ஒரு கலவையான கட்டமைப்பு. அங்கே தீவிர இடதுசாரிகளும் உண்டு தீவிர வலதுசாரிகளும் உண்டு. லிபரல்ககளும் உண்டு. ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள் புத்திஜீவிகள் உண்டு. தனிப்பட்ட தன்னார்வலர்களும் உண்டு. இவர்கள் அனைவரும் ஒரே கொள்கை உடையவர்கள் அல்ல. கோட்டாவை அகற்றுவது என்ற ஒரு மையத்தில் இணைகிறார்கள் மற்றபடி இவர்களை ஒரு பொதுச் சித்தாந்தத்தின் அடிப்படையில்,ஒரு தலைமையின் கீழ், அல்லது இணைத் தலைமைகளின் கீழ் கொண்டு வருவது கடினம். இதுதான் மக்கள் போராட்டங்களில் காணப்படும் மிகப்பெரிய பலவீனம்.தலைமைத்துவ வெற்றிடம்.
இந்த அடிப்படையில் சிந்தித்தால் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை தோற்கடித்த பின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு போராட்டக்காரர்கள் தயாரா? பிரதிநிதித்துவ ஜனநாயகத்துக்கு மாற்றாக வேறு ஏதாவது ஒரு கட்டமைப்பு, இறுதி இலக்கு அவர்களிடம் உண்டா? முன்னிலை சோசியலிசக் கட்சியோ அல்லது ஜேவிபியோ தேர்தல்மூலம் ஆட்சியைக் கைப்பற்ற முடியாதவை.அதனால் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை அவர்கள் விமர்சிக்கலாம். ஆனால் பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்கு மாற்றாக ஒரு கட்டமைப்பை அவர்கள் கட்டியெழுப்ப வேண்டும். இல்லையென்றால் நாட்டில் அரசாங்கம் அற்ற நிலை தொடரும். அது ஏறக்குறைய அராஜகம்தான். அப்படிப்பட்ட ஒரு அராஜக வெளி ராணுவ ஆட்சிக்கும் வாய்ப்புகளை உருவாக்கும். நாட்டில் இப்பொழுது நிலைகுலையாமல் மேலிருந்து கீழ்நோக்கிய பலமான தலைமைத்துவத்தின் கீழ் ஒரு நிறுவனமாக காணப்படுவது படைத்தரப்புத்தான்.
எனவே இந்த இடத்தில் போராட்டத்தை முன்னெடுக்கும் அமைப்புக்கள் தீர்க்கமாக யோசித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும். ஒன்றில் அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். அல்லது இப்போதைக்கு நெருக்கடிகளை கெட்டித்தனமாக கையாளக்கூடிய ஒரு கட்டமைப்பு என்று கூறத்தக்க எதையாவது உருவாக்கி மக்களுடைய நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும்.
தான் ஜனாதிபதியாக வருவதை ஆர்ப்பாட்டக்காரர்கள் விரும்பவில்லை என்பது ரணிலுக்கு தெரியும். அதனால்தான் அவர் தனது அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் செய்தவர்களை கலைப்பதற்கு முயற்சிக்கிறார். ஊரடங்குச் சட்டம் அவசரகாலச் சட்டம் போன்றன அந்த நோக்கத்தை கொண்டவைதான். ஆனால் சட்டம், ஒழுங்கு, யாப்பு, நாடாளுமன்றம் எல்லாவற்றையும் மீறித்தான் மக்கள் ராஜபக்ச குடும்பத்தை அகற்றினார்கள். எனவே இனி மேலும் அவ்வாறு ரணிலை அகற்றுவதும் நாடாளுமன்றத்தை முடக்குவதும் சாத்தியம். ஆனால் அதுவல்ல பிரச்சினை. அப்படி அகற்றிய பின்வரும் தலைமைத்துவ வெற்றிடத்தில் யாரை நிறுவுவது? என்பதுதான்.