13-07-2022
மன்னார் தனியார் போக்குவரத்து உரிமையாளர் சங்கத்தினர் எரிபொருள் கோரி இன்று புதன்கிழமை (13) பணி புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்ட நிலையில் உரிய போக்குவரத்து வசதிகள் இன்றி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் தனியார் பேரூந்து சேவை, மற்றும் அரச போக்குவரத்து சேவையினருக்கும் இடையில் மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக மன்னார் போக்குவரத்து சாலை தனியார் பேரூந்துகளுக்கு வழங்க வேண்டிய டிசலை வழங்காத நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வீதிகளை மறித்து மன்னார் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் குறித்த பிரச்சினையில் தலையிட்டு நேற்றைய தினம் மாலை 13,200 லீற்றர் டீசல் மன்னார் சாலைக்கு வழங்கிய நிலையில் மாவட்ட செயலகத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 5000 லீற்றர் டீசல் மன்னார் தனியார் சேவையினருக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொண்டிருந்தார்.
இருந்த போதிலும் நேற்றைய தினம் தனியார் பேரூந்துகளுக்கு எரிபொருள் உரிய விதத்தில் கிடைக்காத நிலையில் இன்றைய தினம் முழுமையாக பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக உள்ளூர் மற்றும் வெளியூர் பிரயாணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் அரச பேரூந்துகளுக்காக நீண்ட நேரம் காத்திருந்ததுடன் அதிகளவான மக்களுடன் பயணங்களை மேற்கொள்ள வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனியார் பேரூந்து உரிமையாளர்களின் கோரிக்கைக்கு அமைவாக இன்று மன்னார் போக்குவரத்து சாலையில் தனியார் பேரூந்துகளுக்கான எரிபொருள் விநியோகிக்கப்படுவதை தொடர்ந்து நாளைய தினம் தனியார் பேரூந்து வழமை போன்று சேவைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது