நக்கீரன்
ஆகாயத்திற்குச் சென்றாலும், நடுக் கடலுக்குச் சென்றாலும், மலையின் இடுக்கில் மறைந்துகொண்டாலும், எங்கு சென்று ஒளிந்துகொண்டாலும்,
தீய செயலைச் செய்தவர், அதன் விளைவுக்குத் தப்பவே முடியாது. இந்தப் பொன்மொழி புத்தர் உடையது.
புத்தர் காலத்துக்குப் பின்னரும் ஒருவன் காலை செய்யும் தீவினை அவனை மாலை வந்து சூழும் என்ற வாழ்வியல் உண்மையை தமிழ்ப் புலவர்கள் தமிழ் அறநெறியாளர்கள் வற்புறுத்தி வந்துள்ளார்கள். அறக் கோட்பாட்டை வற்புறுத்தும் இலக்கியங்களை பதிணெண் கீழ்க் கணக்கு நூல்களில் தொகுத்துள்ளார்கள். இவை சங்கம் மருவிய காலப் பகுதியில் இயற்றப்பட்டவை. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பதினொரு நூல்கள் அறநூல்கள். இவை தமிழர்களது அக்காலப் பண்பாட்டு விழுமியங்களை எடுத்துக் கூறுகின்றன.
சங்க கால இலக்கியங்கள் தமிழர்களின் வீரம், வெற்றி, ஈகை, கொடை போன்ற பண்புகளைப் போற்றுகின்றன. சங்க காலத்தில் பரத்தையர் உறவு, கள் அருந்துதல் கூடா ஒழுக்கம் எனக் கருதப்படவில்லை. “யவனர் குப்பியிற்கொண்டு வரப்பட்ட குளிர்ந்த நறுநாற்றத்தையுடைய தேறலைப் பொன்னாற் செய்யப்பட்ட புனைகலத்தின் கண் ஏந்தி நாடோறும் ஒள்ளிய வளையணிந்த மகளிர் ஊட்டிட உண்டு மகிழ்ச்சி மிக்கு இனிதாக நடப்பாயாக” என்று நன்மாறன் என்பானை நக்கீரர் வாழ்த்துகிறார்.
சங்க கால அவ்வையார் மிகுந்த அழகான பெண்ணாக அதே நேரத்தில் துணிச்சல் மிக்கவளாய் கள், மது போன்றவற்றை மாந்தியவளாய்த் தென்படுகிறாள். தன்னை மிகவும் ஆதரித்த அதிகமான் நெடுமான் அஞ்சி இறந்த போது கையறுநிலையாகப் பாடப்பட்ட பாடல் ஒன்றுளது.
“சிறியகள் பெறினே எமக்கு ஈயுமன்னே!
பெரியகள் பெறினே
யாம்பாட தான்மகிழ்ந்து உண்ணுமன்னே!” (புறம் 235)
குறைவாகக் கள் கிடைத்தால் எனக்குத் தந்துவிடுவானே! நிறைய கள் கிடைத்தால் நான் பாட அவன் மகிழ்ந்து அருந்துவானே! என ஒப்பாரி வைக்கிறார்.
சங்கம் மருவிய காலத்தில் காட்சிகள் மாறுகின்றன. பதிணெண் கணக்கு நூல்களில் முதல் நூலான திருக்குறளில் திருவள்ளுவர் பிறனில் விழையாமை, புலால் மறுத்தல், கள்ளுண்ணாமை,வரைவின் மகளிர், சூது போன்ற கூடா ஒழுக்கங்களைக் கடுமையாகக் கண்டிக்கிறார். இது பவுத்தம், சமணம் இரண்டின் தாக்கம் எனக் கொள்ளலாம்.
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும். (அறத்துப்பால், துறவறவியல், இன்னாசெய்யாமை)
பிறர் உயிர்களுக்கு நாம் ஒரு தீங்கினை(துன்பத்தினை) காலையில் இழைத்தால் நமக்கு ஒரு தீங்கு மாலையில் தானாக தேடி வரும். ஆதலால் பிறருக்குத் தீங்கு செய்யாதே என்று கூறுகிறார் திருவள்ளுவர்.
இதனையே இளங்கோ அடிகள் தாம் இயற்றிய சிலப்பதிகாரம் என்ற நூலில் மூன்று முக்கிய உண்மைகளை வற்புறுத்துகிறார்.
1) அரசியலில் தவறு செய்வோர்க்கு அறக்கடவுள் எமனாகும்
2) புகழ்பெற்ற பத்தினியை மேலோர் போற்றுவர்
3) ஊழ்வினை தவறாது தன் பயனை ஊட்டும்
அவரவர் செய்யும் நல்வினைகள் தீவினைகள் எவையும் அவரை விட்டுப் போவது இல்லை “தினை விதைத்தவன் தினை அறுக்கிறான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்பது பழமொழி. ஒருவன் செய்யும் பழைய வினைகள் அவனைத் தேடி வந்து அடையும், தப்பித்துக் கொள்ள முடியாது.
எமது கெட்ட காலம் இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் அந்த நாட்டை ஆண்ட தலைவர்களுக்கு அறம் பற்றிய அறிவு இருக்கவில்லை. ஊழ்வினை பற்றிய புரிதல் இருக்கவில்லை. மகிந்த இராசபக்ச குடும்பத்துக்கு இருக்கவில்லை. குறிப்பாக முன்னாள் சனாதிபதி கோட்டாபய அவர்களுக்கு இருக்கவில்லை.
ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் அழகான ஒரு தீவை அதலபாதாளுக்குத் தள்ளி அதனைக் குட்டிச் சுவராக்கிவிட்டு இரவோடு இரவாக நாட்டை விட்டுத் தப்பி ஓடிவிட்டார். எவ்வளவு அவமானம்? எவ்வளவு மானக்கேடு? எத்துணை தலைக்குனிவு?
சென்ற மாதம் கூட “நான் 69.5 இலட்சம் மக்கள் வாக்களித்து சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவன். எனது பதவிக் காலம் முடியும்வரை பதவியில் நீடிப்பேன். தோற்றுப் போன சனாதிபதியாக நான் வெளியேற அணியமாக இல்லை” என வாதிட்டார். அப்படி வீராவேசமாகப் பேசியவர் இன்று அவமான முறையில் பலரும் பார்த்துச் சிரிக்கிற மாதிரி நாட்டை விட்டு ஓடித் தப்பியுள்ளார்.
யூலை 13 க்கு முன்னர் – குறைந்தது ஒரு மாதத்துக்கு முன்னர் – கோட்டாபய இராசபக்ச தனது பதவியில் இருந்து விலகியிருந்தால் மரியாதையோடு அவர் சென்றிருப்பார். பைத்தியக்காரன், கள்ளன், கொள்ளையன் என்ற வசைமொழிகளுக்கு இலக்கு ஆகாமல் தப்பியிருப்பார்.
முன்னாள் பிரதமர் மகிந்த இராசபக்சாவும் தொடக்கத்தில் இப்படித்தான் அடம் பிடித்தார். “நான் பிரதமர் பதவியில் இருந்து விலக மாட்டேன். விலகச் சொல்லிச் சனாதிபதி கேட்கவும் மாட்டார். மக்கள் ஆதரவு எனக்கு இருக்கிறது” என்றார். ஆனால் சனாதிபதி கோட்டாபய இராசபக்ச அவரைப் பதவி விலகுமாறு கேட்ட போது வேறு வழியின்றி பிரதமர் பதவியில் இருந்து விலகிவிட்டார்.
2009 ஆம் ஆண்டு மே 18 இல் இலங்கை இராணுவம் வி.புலிகளைப் போர்முனையில் தோற்கடித்த போது மகிந்த இராசபக்ச புகழின் உச்சத்தில் இருந்தார். போர் வெற்றிவிழாவை காலிமுகத் திடலில் தடபுடலாகக் கொண்டாடினார். அப்போது மகிந்த இராசபக்ச தன்னை இலங்கையின் மன்னன் ஆக முடிசூட்டிக் கொள்ள ஆசைப்பட்டிருந்தால் அவரது ஆசை நிறைவேறியிருக்கும். 2015 இல் நடந்த தேர்தலில் தோற்றாலும் 2020 இல் நடந்த தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அவரது கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. அவரது அமைச்சரவையில் அவரது குடும்பத்தை சேர்ந்த ஆறுபேர் இடம் பிடித்தார்கள்.
ஆனால் இன்று மகிந்த இராசபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொருவராக அரசியல் களத்தில் இருந்து அகற்றபட்டு வருகிறார்கள். கடந்த மே 09 இல் பசில் இராசபக்ச தனது நிதி அமைச்சர் பதவி, நா.உறுப்பினர் பதவி இரண்டிலும் இருந்து விலகிக் கொண்டார். யூன் 09 இல் மகிந்த இராசபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இப்போது கோட்டாபய இராசபக்ச தனது சனாதிபதி பதவியை விட்டு விலகத் தள்ளப்பட்டுள்ளார்.
சரியாகவோ பிழையாகவோ மகிந்த இராசபக்சவும் கோட்டாபய இராசபக்சாவும் பலரது கொலைகளோடு தொடர்புள்ளவர்கள் என்ற பிம்பம் பொதுவெளியில் இருக்கிறது. சண்டே லீடர் வார ஏட்டின் பிரதம ஆசிரியர் லசந்தா விக்கிரமதுங்க, ஊடகவியலாளர் ஏக்னேலிகொட, ரக்பி விளையாட்டு வீரர் வசிம் தாயுதீன், நா.உறுப்பினர் ரவிராஜ் கொலைகளோடு கோட்டாபய தொடர்பு படுத்தப் பட்டுள்ளார். மேலும் அவர்களது ஆட்சியில் 13 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு குற்றம் சாட்டியள்ளது. பலர் அச்சுறுத்தப்பட்டனர், கடத்தப்பட்டனர் மற்றும் சித்திரவதை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பான்மையினர் தமிழ் ஊடகவியலாளர்கள் ஆவர்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடைசிக் கட்டப் போரில் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் முறையான இராணுவ இலக்குகள் என்று மார்தட்டியவர் கோட்டாபய இராசபக்ச. சரணடைந்த தளபதிகள், போராளிகள் எல்லோரையும் சுட்டுத்தள்ளுமாறு கட்டளையிட்டவர்.
சென்ற தேர்தலில் 69 இலட்சம் வாக்குகள் பெற்று வெற்றிபெற்ற கோட்டாபய இன்று நாட்டில் இல்லை. நாட்டை விட்டு ஓடிவிட்டார். தேர்தலில் படு தோல்வியடைந்து தேசியப் பட்டியலில் வந்த விக்கிரமசிங்க பதில் சனாதிபதியாகி விட்டார். இதைத்தான் ஊழின் விளையாட்டு என்று சொல்வதா?
காலிமுகத் திடலில் இளைஞர்களால் மேற்கொள்ளப்படும் போராட்டம் இலங்கை அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள் நாட்டின் செல்வத்தை கொள்ளையடித்தவர்கள் வீட்டுக்குப் போக வேண்டும் என்ற கோரிக்கைகள் பொதுமக்களது ஆதரவைப் பெற்றிருக்கிறது. குறிப்பாக இந்தப் போராட்டம் சிங்களவர், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை ஒன்று படுத்தியுள்ளது. இன, மத மற்றும் மொழி வேறு பாடின்றி எல்லோரும் இலங்கையர் என மக்களை மாற்றி யோசிக்க வைத்துள்ளது.
1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு மிக மோசமான பொருளாதார, அரசியல் நெருக்கடிகளுக்கு இன்று முகம் கொடுத்து வருகிறது. ஏப்ரில் 01 இல் தொடங்கப்பட்ட போராட்டம் பல மாதங்களாக நடந்து வருகின்றன. வெளிநாட்டு நாணயக் கையிருப்பு குறைந்து போனதால், குடிமக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்த முடியாமல் திணறி வருகின்றனர். எரிபொருள் நிலையங்களுக்கு வெளியே பாம்பு வரிசைகள், உணவு மற்றும் மருந்துகளுக்கான போராட்டம் நாட்டில் அன்றாடக் காட்சியாகிவிட்டது. வரிசையில் காத்திருந்தோரில் இதுவரை 19 பேர் அகால மரணம் அடைந்துள்ளார்கள்.
ஒரு நிதியமைச்சர், ஒரு பிரதமர், ஒரு சனாதிபதியை வீட்டுக்கு அனுப்பியாகி விட்டது. இது போராட்டக்காரர்களுக்கு கிடைத்த பெரிய வெற்றி. ஆனால் எதிர்ப்பாளர்கள் சனாதிபதியின் வெளியேற்றத்தில் மட்டும் திருப்தி அடைகிறார்களா? இப்போது பதில் சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க அவர்களும் பதவி விலகிவிட்டு வீட்டுக்குச் செல்லுங்கள் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
அவர்களுக்குப் விடை அளிப்பது போல பதில் சனாதிபதி அவசரகாலச் சட்டத்தை நாடுமுழுதிலும் பிரகடனப்படுத்தி மேற்கு மாகாணத்தில் மட்டும் ஊரடங்க உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதனை அடுத்து வீதிகளில் இராணுவம் கவச வாகனங்களில் நடமாடத் தொடங்கியுள்ளது. ஊரடங்க உத்தரவை மீறிய நூற்றுக் கணக்கான பொதுமக்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளர்.
இது இவ்வாறிருக்க கொழும்பின் காலி முகத்திடலில் உள்ள போராட்டத் தளத்தின் செயற்பாட்டாளர்கள் ஆறு அம்ச செயல் திட்டத்தை வெளியிட்டுள்ளார்கள். யூலை முற்பகுதியில் வரையப்பட்ட செயல் திட்டத்தில் சனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்பது முதன்மையான கோரிக்கையாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் முன்வைத்த கோரிக்கைகள் பின்வருமாறு.
1. சனாதிபதி கோட்டாபய இராசபக்ச உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பதவி விலக வேண்டும்.
2. பிரதமர் இரணில் விக்கிரமசிங்க மற்றும் முழு அரசாங்கமும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பதவி விலக வேண்டும். இதில் அனைத்து அமைச்சரவை, அமைச்சரவை அல்லாத துணை மற்றும் திட்ட அமைச்சர்கள் அடங்குவர்.
3. இராசபக்ச – விக்ரமசிங்க ஆட்சி பதவி விலகியதைத் தொடர்ந்து ‘மக்கள் போராட்டத்தின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நோக்கங்கள் மற்றும் வேட்கைகளுக்குத் துணைபுரியும் இடைக்கால அரசாங்கம் நிறுவப்பட வேண்டும்.’
4. புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வரும் வரை, சனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைத்தல், அனைவருக்கும் சமமான சட்டம், சனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் தற்போதுள்ள அரசியலமைப்பை சனநாயகப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
5. மக்கள் இறையாண்மையை ஒப்புக்கொள்ளம் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். வாழ்வதற்கான உரிமையை அடிப்படை உரிமையாக நிறுவ வேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும். நியாயமான தேர்தலுக்கு உரிய நடைமுறையை ஏற்படுத்த வேண்டும்.
ஒன்றிணைந்த பிரகடனத்தின் சுருக்கம் குறித்து நேற்று அரகலய பிரதிநிதிகள் குழு ஊடகங்களுக்கு விளக்கமளித்ததுடன், மக்களின் குரல்களுக்கு செவிசாய்த்து விரைவில் செயற்படுமாறு புதிய பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இலங்கை தற்போது முகம் கொடுக்கும் பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டும் என்றால் மதசார்பற்ற, சுதந்திரம், சமத்துவம், சட்டத்தின் ஆட்சி போன்ற சனநாயக விழுமியங்களை உள்ளடக்கும் புதிய யாப்பு வரையப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்மக்களைப் பொறுத்தளவில் வரவேற்கத்தக்கது.
நாட்டை ஆள்வோர் ஒவ்வொரு நாளும் நாட்டு மக்களின் குறைகளைக் கேட்டு அவற்றைக் களைய வேண்டும். அல்லது அந்த நாட்டின் வளங்கள் சிறிது சிறிதாக அழிந்து போகும். செங்கோன்மையின் சிறப்பை ஆராய்ந்து ஆட்சி மேற்கொள்ளாத ஆட்சியாளர் நாட்டிற்கு இன்றியமையாத உணவுப் பொருட்களையும் ஈடுபாடுடைய மக்களையும் ஒட்டு மொத்தமாக இழக்க நேரிடும்.
குடிமக்களை அன்புடன் பேணிப் போற்றும் ஆட்சியாளரின் திருவடிகளை பற்றுக் கோடாகக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்வார். ஆட்சி நெறிமுறை தவறாது காத்திடும் செங்கோல் சிறப்பே ஆரசைக் காக்கும். மறுபுறம் அரச அறம் சாராது நீதிநெறி செலுத்தாத மன்னன் தாழ்ந்த நிலையில் நின்று தானே கெடுவான் ஆட்சியாளரின் கொடுமைக்கு ஆளாகி அத்துன்பத்தைப் போக்கிக் கொள்ள இயலாது அழுத கண்ணீர் ஆட்சியாளரின் வன்மையை அழித்தொழிக்கும் படைக் கருவியாகும்.
பல்லாயிரம் தமிழ்மக்களது சாவுக்குக் காரணமாக இருந்த கோட்டாபய இராசபக்சாவை இன்று ஊழ்வினை தேடி வந்து பிறந்த நாட்டை விட்டே துரத்தி விட்டது!