கனடா உதயனின் சிறப்பு புலனாய்வு கட்டுரை
கடறபடை தளபதியின் வீட்டில் ஒளிந்திருந்தே கோத்தாபராஜபக்ச நாட்டிலிருந்து தப்பியோடினார் என்பது கனடா`உதயனின்` சிறப்பு புலனாய்வில் தற்போது தெரியவந்துள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்ற மக்கள் புரட்சியால் பதவியிலிருந்து விரட்டப்பட்ட கோத்தாபய ராஜபக்ச எப்போது எப்படி நாட்டிலிருந்து வெளியேறினார் என்பது குறித்து `உதயனின்` சிறப்பு புலனாய்வு கண்டறிந்துள்ளது. அவர் இராணுவ விமானம் ஒன்றில் கொழும்பிலிருந்து மாலத்தீவிற்கும் பிறகு அங்கிருந்து சவுதி விமானம் ஒன்றில் சிங்கபூருக்கும் சென்றார் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால், கடந்த சனிக்கிழமை ஜூலை 9 அன்று போராட்டக்காரர்கள் அதிரடியாக ஜனாதிபதி மாளிகையில் நுழைந்த போது அங்கு அவர் இல்லை. அந்த மாளிகை ஆளில்லாத ஒன்றாக காட்சியளித்தது. `அரகலிய` மக்கள் அங்கு செல்வதற்கு முன்னர் அவர் அங்கிருந்து வெளியேறியிருந்தார். அவர் எங்கிருந்தார், அங்கிருந்து எப்படி வெளியேறினார் என்பது புரியாத புதிராகவே இருந்தது.
போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு உள்நுழைவார்கள் என்பது உறுதியானவுடன் கோத்தாபய ராஜபக்ச, முதல் 50 மணி நேரம் தலமறைவாக வாழ்ந்த போது தரைப் படையை நம்பாமல் கடற்படையிடமே தஞ்சம் புகுந்தார்.
போர் காலத்திலும் பல இரகசிய நடவடிக்கைகளிற்கு கோத்தா இராணுவத்தை விடவும் கடற்படையினரையே பெரிதும் நம்பினார். இதேபோல் மக்களின் ஆதரவை இழந்த நிலையில், பதவி விலகுமாறு மக்கள் வலியுறுத்தியதன் பின்னணியில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, தனது மனைவி, பாதுகாப்பு உத்தியோகத்தருடன் நாட்டிலிருந்து 13 ஆம் திகதிஅதிகாலை இரகசியமாக வெளியேறிவிமானப்படையின் அன்டனோ 32 ( ஏ.என். 32) ரக விமானத்தில் மாலதீவின் தலைநகரான மாலேவுக்கு அவர் வெளியேறியதாக விமானப்படை ஊடகப் பணிப்பாளர் விங் கொமாண்டர் துஷான் விஜேசிங்க அறிக்கை ஊடாக உறுதி செய்யும் வரையில் அதாவது கடந்த ஜூலை 9 ஆம் திகதி முதல் சுமார் 50 மணி நேரம் தனக்கு வாக்களித்த மக்கள் முன் தோன்ற முடியாது தலைமறைவாக கடற்படை முகாம்களுக்குள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்க்சா தலைமறைவு வாழ்வு நடாத்தினார்.
ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பிரதமர் ரணில் விக்ரமசிங்க (தற்போதைய பதில் ஜனாதிபதி) ஆகியோரை பதவி விலக வலியுறுத்தி பல இலட்சம் மக்கள் கோட்டை ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகையை சுற்றி வளைத்து போராட்டத்தை ஆரம்பித்தனர்.
அதன்போது கோத்தாபய ராஜபக்ச தனது ஜனாதிபதிபதி மாளிகையிலேயே இருந்துள்ளார். முற்பகல் 10.30 மணிக்கும் நண்பகல் 12.00 மணிக்கும் இடையிலேயே அவர் ஜனாதிபதி மாளிகையை கைவிட்டு தப்பிச் சென்றிருக்க வேண்டும் என தற்போது கூறப்படுகின்றது. இதன்போது ஜூலை 8 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் அவரது பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த மேஜர் ஜெனரல் பத்தரமுல்லையில் உள்ள முப்படை தலைமையகத்துக்கு சென்று, ஜனாதிபதி கோட்டாவை பாதுகாப்புக்காக அங்கு அழைத்து வந்துள்ளதாக போலியான தகவல் ஒன்றை பரவச் செய்து போராட்டக்காரரின் கவனம் திசை திருப்பப்பட்டுள்ளது.
இருந்தபோதும் ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் அனைத்து வீதிகளும் நிரந்தர வீதித் தடைகளைக் கொண்டு மூடப்பட்டு, இராணுவம் பொலிஸ், விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பும் போடப்பட்டது.
இதேநேரம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்கசா ஜனாதிபதி மாளிகையில் 9 ஆம் திகதி காலையில் தங்கியிருந்தமையினால், 8 ஆம் திகதி இரவு முதல் கொழும்பின் பல பகுதிகளுக்கு ஊரடங்கை பிறப்பிக்க பொலிஸ்மா அதிபருக்கு உயர்மட்ட உத்தரவு பிரயோகிக்கப்பட்டபோதும் அதனைச் செய்ய வேண்டாம் என பொலிஸ்மா அதிபருக்கு பொலிஸ் உயரதிகாரிகள் பலர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இதன் பின்புலத்தில் ஜூலை 9 ஆம் திகதி காலை 6 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சா பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவை சந்தித்துள்ளார். இதன்போது பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன பொலிஸ் திணைக்களத்தில் தனக்கு மிகவும் விசுவாசமான முன்னாள் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்னவையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸாரும் இராணுவத்தினரும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவர் எனவும் கண்ணீர் புகை மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியேனும் அதனைச் செய்வர் எனவும் ஜனாதிபதி திடமானநம்பிக்கையுடன் இருந்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையின் பாதுகாப்பு ஜூலை 9 ஆம் திகதியன்று இலங்கை தரைப் படையின் மேஜர் ஜெனரலின் கீழிருந்தது. முற்பகல் வேளையில், மாளிகையை போராட்டக்காரர்கள் இலட்சக் கணக்கில் முற்றுகையிட ஜனாதிபதி தரைப் படையின் மீதுள்ள நம்பிக்கையை இழந்துள்ளார். உடனடியாக கடற்படை தளபதியை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து கடற்படை தளபதியின் காரில் ஏறி தப்பித்துள்ளார். தரைப்படையால் தன்னை பாதுகாப்பாக மீட்டு காப்பாற்ற முடியாது என்ற முடிவிற்கு வந்த அவர் அவர்கள் மீது நம்பிக்கையிழந்து கடற்படையின் தளபதியை அழைத்தார் என்று இது குறித்து அறிந்த ரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மாளிகையின் வாயில் திசையிலிருந்து தொடர்ச்சியாக கண்ணீர்ப் புகைப் பிரயோகம் முன்னெடுக் கொண்டிருந்தபோதே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச,கடற்படை தளபதியின் காரில் ஏறித் தப்பி, கடற்படை தளபதியின் உத்தியோகபூர்வ விடுதிக்கு சென்றிருக்க வேண்டும் என தற்போது நம்பப்படுகின்றது.
இதன் பிறகே கடற்படை தளபதியின் உத்தியோகபூர்வ அறையிலிருந்து, கடற்படை தலைமையகமான ரங்கள முகாம் சென்று அங்கிருந்து சிதுரல, கஜபாகு ஆகிய கப்பல்களில் திருகோணமலையை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
அவ்வாறே ஜனாதிபதிகோத்தாபாய திருகோணமலை கடற்படை முகாம் நோக்கி சென்றார் என்று தகவலறிந்த நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.திருகோணமலையில் இருந்த ஜனாதிபதி மறு நாளான ஜூலை 10 ஆம் திகதி விமானப்படையின் ஓர் பெல் ரக உலங்குவானூர்தியில் கட்டுநாயக்க விமானப்படை தளத்துக்கு இடம்மாறியுள்ளார்.
ஜூலை 10 ஆம் திகதி கோத்தாபய ராஜபக்சதுபாய் நோக்கி பயணிக்க இருமுறை முயன்றபோதும் குடிவரவு அதிகாரிகள் முறைப்படி விமானத்தில் செல்ல முடியும் என அறிவித்த நிலையிலும், பொது மக்கள் முன்னால் தோன்ற அவருக்கு இருந்த அச்சத்தினால் அவரால் அப்போது வெளிநாடு செல்ல முடியவில்லை.
இதனிடையே அமெரிக்கா செல்வதற்காக கோத்தாபய முன்வைத்த விசா விண்ணப்பத்தை அமெரிக்காநிராகரித்து விட்டது. இதை அவர் சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை. தனது பாரியார் மற்றும் மகன் ஆகியோர் அமெரிக்க பிரஜைகளாக இருக்கும் நிலையிலும், தான் முன்னர் அந்நாட்டுப் பிரஜையாக இருந்ததால் தனக்கு அமெரிக்க விசா கிடைப்பதில் எந்தச் சிக்கலும் இருக்காது என்று அவர் உறுதியாக நம்பினார். எனினும் அந்த நம்பிக்கை பொய்த்து போன நிலையில் கட்டுநாயக்கவில் இருந்து மத்தள விமான நிலையம் ஊடாக தனியார் விமானத்தில் துபாய் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் அந்நடவடிக்கையும் செவ்வய்க்கிழமை (12)வரை சாத்தியப்படவில்லை.
இதற்காக கட்டுநாயக்க விமானப் படைத் தளம் முதல் இரத்மலானை விமானப்படைத் தளம் வரை சென்ற கோத்தா கட்டுநாயக்கவுக்கே மீண்டும் திரும்பும் நிலமை ஏற்பட்டது.
இதன்பின்னரே கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்டி அமைந்துள்ள விமானப்படை ஓடுபாதையில் இருந்து கோட்டா மாலத்தீவு நோக்கி இரகசியமாக 13ஆம் திகதி அதிகாலை புறப்பட்டு சென்றுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய தகவல்களின் பிரகாரம் அன்ரனோ 32 ரக விமானம் ஒன்று குடிவரவு குடியகல்வு அதிகாரிகள், சுங்க அதிகாரிகள் ஆகியோர் உரிய ஆவணங்களை சரிபார்த்து உறுதிப் படுத்திய பின்பே மாலத்தீவு நோக்கி செல்ல அனுமதிக்கப்பட்டது என்கின்றனர்.
அவர் நாட்டிலிருந்து மாலத்தீவு சென்று சிங்கப்பூர் சென்றடையும் வரை கடற்படைபெரும் பங்காற்றியுள்ளது இப்போது தெரிய வந்துள்ளது. போர்க் காலங்களிலும் கூட அவர் தரைப்படை, விமானைப்படையைக் காட்டிலும் பெரும்பாலும் கடற்படையையே நம்பி வந்தார். கடற்படை ஊடகவே பல நகர்வுகளை அவர் முன்னெடுத்தார், அதில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதமேந்தி வந்த கப்பலை நடுக்கடலில் அழித்த சம்பங்களும் உண்டு என்று பாதுகாப்பு விடயங்கள் குறித்த பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர். அதே போன்று போர்க் காலத்தில் பலரை கடத்தவும், காணாமல் ஆக்கவும் அவர் கடற்படையினரையே பெரிதும் நம்பியிருந்தனர் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
தற்போது சிங்கப்பூரில் இருக்கும் ”அவர் அகதி தஞ்சம் கோரவில்லை” அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக கோரிய விசா அனுமதியே இப்போது வழங்கப்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் அதிகாரிகள் கூறுகின்றனர். அவர் அங்கு மருத்து பரிசோதனைக்காகச் சென்றுள்ளார் என்று அறிய முடிகிறது. அந்த பரிசோதனைகள் முடிந்த பிறகே அவர் அடுத்து எங்கு, எப்படிச் செல்லவுள்ளார் என்பது தெரியவரும்.
இதேவேளை ஜனாதிபதியின் இந்த இரகசிய பயணத்துக்கு இந்தியாவினால் உதவிகள் வழங்கப்படுவதாக வெளியான தகவல்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் நிராகரித்துள்ளது.
இதேநேரம் இலங்கை விமானப்படை விமானத்தில் இலங்கையின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்கசா இருக்கின்றார் என அறிந்த மாலை தீவு அதிகாரிகள் முதலில் அனுமதியளிக்காதிருந்துள்ளனர். இதனால் கோட்டாவும் அவரது மனைவி மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் சுமார் ஒன்றரை மணி நேரம் விமானத்தில் காத்திருந்துள்ளனர். பின்னர் மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹம்மட் நஷீட் தலையீடு செய்து தரை இறக்குவதற்கான அனுமதியை பெற்றுக் கொடுத்துள்ளார்.