வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அனுமதியின்றி காட்சிப்படுத்திய விளம்பரப்பலகையினை பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அகற்றியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், வீதி அபிவிருத்தி அதிகார சபை இணக்கத்துடன் வழக்கினை முடிவுக்கு கொண்டுவர விரும்புவதாக மன்றில் தெரிவித்திருந்த போதும் அதற்கான வாக்குமூலத்தை தெடர்ச்சியாக வழங்காத நிலையில் முறைப்பாட்டாளரான வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அறிவிப்பு (நோட்டிஸ்) அனுப்புமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று புதன் கிழமை (14.07.2022) இடம்பெற்ற வழக்கு தவணையின்போதே மல்லாகம் நீதிமன்றத்தினால் இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உள்ளுராட்சி மன்றமான பிரதேச சபைக்குச் சொந்தமான அச்செழு அம்மன் வீதியை மத்திய அரசாங்கத்தின் நிறுவனமான வீதி அபிவிருத்தி அதிகார சபை அனுமதிகள் பெறப்படாது புனரமைக்க நடவடிக்கை எடுத்ததுடன் சபையின் அனுமதியின்றி அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் வாதிகளின் புகைப்படத்துடன் விளம்பரப்பலகையினையும் நாட்டியிருந்தது. அவ் விளம்பரப்பலகையினை தனதோ சபையினதோ அனுமதியின்றி நாட்டியமையைக் காரணம் காட்டி வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அகற்றியிருந்தார்.
இந் நிலையில் தவிசாளர் நிரோஷிற்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதில் கடந்த மே மாதம் 18 ஆம் திகதி வழக்குத் தவணையில் தாம் வழக்கினை கைவாங்குவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை சார்பாக மன்றில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலமளித்து வழக்கினை இணக்கப்பட்டுடன் முடிவுறுத்துவதற்காக அடுத்தவாரம் மீள தவணையிடப்பட்டது. எனினும் குறித்த வாக்குமூலத்தினை வீதி அபிவிருத்தி அதிகார சபை வழங்கியிருக்காத காரணத்தினால் மீளவும் கடந்த யூன் மாதம் திகதியிடப்பட்டது. அத் தவணையிலும் முறைப்பாட்டாளரான வீதி அபிவிருத்தி அதிகார சபை வாக்குமூலம் வழங்கவில்லை. இந் நிலையில் வழக்கின் முறைப்பாட்டாளரான வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அறிவிப்பு (நோட்டிஸ்) அனுப்புமாறு மன்று உத்தரவிட்டது.
இவ் வழக்கில் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி வி.திருக்குமரனின் வழிகாட்டலில் சட்டத்தரணி எஸ்.ஸ்தேவான் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.