“இலங்கை மக்கள் கோட்டாபய ராஜபக்ச என்பவரை பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதியாகவே தற்போது கருதுகின்றார்கள். எனவே இலங்கையின் அரசியற் சட்டத்தின்படி அதை கருத்தில் கொண்டு பாராளுமன்றத்தின் சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார் சட்டத்தரணி சுனில் வடகல அவர்கள். ஜாதிக ஜன பலவேகய (ஜேஜேபி) அமைப்பின் சட்டத்தரணிகள் குழாத்தின் முக்கிய பொறுப்பாளராக விளங்கும்அவர் இந்த விடயத்தில் இலங்கையில் உள்ள சட்டத்தரணிகள் அனைவரும் இந்த சட்டப்போரில் எமக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்று சட்டத்தரணி சுனில் வடகல அவர்கள் கொழும்பில் விடுத்துள்ள அறிக்கையொன்றில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
மேற்படி கோதபாய ராஜபக்ச விடயம் தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில். ‘” கோட்டாபாய ராஜபக்ச ஒருபோதும் இலங்கையின் அரசியலமைப்பைப் பாதுகாக்கவில்லை எனவும், அரசியல் அமைப்பை அவர் அப்பட்டமாக மீறியதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜாதிக ஜன பலவேகய (ஜேஜேபி) சட்டத்தரணிகள் நேற்று வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றத்தின் ஊடாக நியமிக்க முடியும் எனவும் இதற்கு ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பிக்காததன் அடிப்படையில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் நடவடிக்கையை உடனடியாக ஆரம்பிக்குமாறு அவர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அரச துறை ஊழியர் ஒருவர் 24 மணி நேரத்திற்குள் துறைத் தலைவருக்குத் தெரிவிக்காமல் வேலைக்குச் செல்லவில்லை என்றால், துறைத் தலைவர் அந்த ஊழியரை பணிநீக்கம் செய்ய முடியும். அவ்வாறான சட்டங்கள் பொதுமக்கள் சார்ந்து இருக்கும் போது தவறு செய்த ஜனாதிபதிக்கு ஏன் தண்டனை வழங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணி சுனில் வடகல அவர்கள் தொடர்ந்து தெரிவிக்கையில் “அதேபோன்று தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு சபாநாயகரே பொறுப்பு என்றும். நிர்வாகம் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு சாதகமாக செயல்பட்டு அப்பாவி மக்களின் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும். தற்போதைய நிலைமை போராட்டம் மக்களால் உருவாக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி மற்றும் பிரதமரால் உருவாக்கப்பட்டதாகவும்
கோட்டாபாய ராஜபக்ச மக்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டவர் அதேநேரம் ஜனாதிபதியின் பதவி விலகல் குறித்து சபாநாயகர் பொதுமக்களுக்கு தெரிவிக்கவில்லை. இது பெரிய அரசியல் குற்றமாகும்.
எனவே, அரசியலமைப்பின் பிரகாரம் சபாநாயகர் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தைக் கூட்டி புதிய ஜனாதிபதியை நியமிக்க வேண்டும் என்பதை நாம் இயல்பாகவே ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். இதேவேளை ரணில் விக்ரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக அல்லது ஜனாதிபதியாக நியமிப்பதை சட்டம் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சட்டத்தரணி சுனில் வடகல அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.