யாழ்ப்பாணத்தில் இருந்து நடராசா லோகதயாளன்
இந்திய இலங்கை கடற்பரப்பில் இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் படகுகள் இன்றி மீனவர்கள் மட்டும் விடுவிக்கப்படுவது ஆகியவை தொடர்கதையாக இருக்கும் வேளையில் மீனவர்களிடையே உதவும் பண்பு மாறாமல் உள்ளது.
அவ்வகையில் படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்கள் இருவர் தமிழக மீனவர்களால் காப்பாற்றப்பட்டனர்.
மன்னார் பியர் பகுதியில் இருந்து படகு ஒன்றில் இம்மாதம் 14 ஆம் திகதி கடல் தொழிலிற்குச் சென்ற மூவரில் இருவர் தமிழக மீனவர்களால் உயிரோடு மீட்கப்பட்டபோதும் ஒருவர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் மாவட்டம் பியர் பகுதியில் இருந்து கடந்த 14 ஆம் திகதி பகல் ஒரு மணிக்கு தொழிலிற்குச் சென்ற ஓர் படகு கரை திரும்பவில்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டு கடற்படையினருக்கும் அந்த தகவல் வழங்கப்பட்டது. இருந்தபோதும் மூவருடன் பயணித்த இந்த படகு நடுக் கடலில் 14 ஆம் திகதி இரவே பழுதடைந்த காரணத்தால் மூவரும் தம்மை படகுடன் கட்டியுள்ளனர். இவ்வாறு கட்டியிருந்தவர்களை இந்திய ட்ரோலர் படகு அவதானித்து உயிருடன் இருந்த இருவரையும் மீட்டுள்ளனர்.
இவ்வாறு இருவரையும் மீட்ட தமிழக ட்ரோலர் விசைப் படகு மன்னார் மீனவர்களை கச்சதீவை அண்மித்த பகுதியில் கொண்டு வந்து இறக்கியுள்ளனர். கச்சதீவிற்கு அருகில் கடலில் குதித்து கரையேறிய மோகன்ராஜ், ஜெனார்த்தனன் ஆகிய இரு மீனவர்களையும் கடற்படையினர் மீட்டு மன்னார் அழைத்து வந்தனர்.
கச்சத்தீவு தொடர்பான பிரச்சனை இரு நாடுகளுக்கும் இடையே நெருடலாகவே தொடரும் நிலையில், இந்திய மீனவர்களால் மீட்கப்பட்ட மன்னார் பகுதி மீனவர்கள் கச்சத்தீவிற்கு அருகில் இறக்கிவிடப்பட்டனர். கச்சத்தீவிற்கே வந்து அவர்களை இறக்கிவிடும் சாத்தியங்கள் இருந்த போதிலும், இலங்கை கடற்படையின் அச்சுறுத்தல் காரணமாகவே அந்த இரு மீனவர்களும் அதற்கு அண்மித்த பகுதியில் இறக்கிவிடப்பட்டனர் என்று அறிய முடிகிறது.
அதேவேளை இந்திய மீனவர்கள் இந்த மீனவர்களை மீட்டதற்கு அப்பாற்பட்டு, அவர்களின் ட்ரோலர் விசைப்படகு இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் தொடர்ந்து தொழிலில் ஈடுபடுவதையும் இந்த சந்தர்ப்பம் மீண்டும் காட்டுகிறது. போருக்கு பிறகு தமது வாழ்வாதாரத்தை இன்னும் முழுமையாக மீட்டெடுக்க முடியாமல் இலங்கையின் வட பகுதி மீனவர்கள் சிரமப்படும் நிலையில், இந்திய ட்ரோலர் விசைப்படகுகள் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி கடற்தொழிலில் ஈடுபடுகின்றன என்று வட பகுதி மீனவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
இதேநேரம் படகில் உயிரிழந்த இராயமூர்த்தி என்னும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 52 வயது மீனவரை மீட்க மன்னாரில் இருந்து ஓர் படகு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
மன்னாரின் இரு மீனவர்களையும் மீட்ட தமிழகம் இராமேஸ்வரம் விசைப்படகான IND TN 10 MM 738 இலக்க கார்மாக்ஸ் என்பரின் படகை செலுத்தி வந்த ஓட்டியான தனுஷ் நிக்லாஸ் ரவீஸ்டன் என்னும் அந்தோணியார்புரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்தவரைத் உதயன் சார்பாகத் தொடர்பு கொண்டு இது தொடர்பான விபரம் கேட்டபோது, ”17/51 என்ற பொயின்ரை அண்மித்த பகுதியில் 2022-07-16 அன்று இரவு 6.20 மணியளவில் ஓர் படகு தத்தளித்த நிலைமயில் இருப்பதனைக் கண்டோம். அது இலங்கை மீனவர்களினது என்பதனையும் அடையாளம் கண்டபோது அதில் தம்மைத் தாமே பாதுகாப்பதற்காகவும் தம்மை கடல் அலை இழுத்துச் செல்லாத வகையிலும் தாமே படகுடன் தம்மை இணைத்து கட்டியவாறு மூவர் தத்தளித்தவாறு இருந்தனர்.
இதனால் எமது தொழிலைக் கைவிட்டு உடனடியாக அந்த மூன்று உயிர்களையும் காப்பதற்காக முயன்றோம். அதற்காக சுமார் 2 மணிநேரம் போராடி இருவரை உயிரோடு மீட்டோம். இதற்காக எமது படகில் என்னுடன் இருந்த 7 பேரும் பெரிதும் முயன்ற சமயம் கடல் அலை அதிகமாக இருந்தமையால் அந்த மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதன்பின்பு 3வது மீனவரை மீட்க முயற்சித்தோம். அப்போது அவர் உயிர் பிரிந்த நிலையில் காணப்பட்டார். அதனை இலங்கை மீனவர்களும் அறிந்திருந்தனர்”.
இதனால் வேறு வழியின்றி மீட்கப்பட்ட இருவரை மட்டும் ஏற்றிய அவர்கள் கச்சதீவை அண்மித்த பகுதிவரை உயிரைப் பணயம் வைத்தே வந்ததாக கூறுகின்றனர். இலங்கை கடற்படை கண்டால் கைது செய்யும் என்று அஞ்சியதாகவும் அவர்களை தமது நாட்டிற்கு கொண்டு சென்றால் இந்திய கடற்படை தம்மை கைது செய்யும் என்ற நிலையில் இலங்கை மீனவர்களின் விருப்பத்தைக் கேட்டே நடவடிக்கை எடுத்ததாக தனுஷ் நிக்லாஸ் ரவீஸ்டன் கூறினார்.
”அவர்களின் விருப்பத்திற்கு அமைய கச்சதீவை அண்டிய பகுதியில் அதிகாலை 5 மணிக்கு இறக்கி விட்டு அவர்கள் கச்சதீவை அடைந்து எமக்கு கை அசைத்து வழி அனுப்பும் வரை காத்திருந்து அவர்களின் உயிர் தப்பியதனை உறுதி செய்த பின்பு தமிழகம் திரும்பினோம்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், எரிபொருளுக்கு மிகவும் கடுமையான தட்டுப்படு நிலவுகிறது. இதன் காரணமாக மண்ணெண்ணெய் கிடைக்காத காரணத்தால் கடந்த சில மாதங்களாக கடற்தொழிலுக்கு செல்ல முடியாத நிலையில் இலங்கை மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து செய்வதறியாமல் தவிக்கின்றனர்.
இந்த நெருக்கடி காரணமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் ஜீவனோபாயத்தை இழத்து தவிக்கின்றனர். கடற்தொழிலை விடவும் முடியவில்லை வேறு வழியும் தெரியவில்லை என்று வட மாகாண மீனவர்கள் எம்மிடம் தெரிவித்தனர்.
நடுக்கடலில் படகுகள் பழுதாகி இருநாட்டு மீனவர்களும் தத்தளிக்கும் வேளையில் இருநாட்டு கடற்படையினரும் கைது நடவடிக்கை போன்றவற்றில் ஈடுபடவோ அவ்வாறு செய்யப்படும் என்று அச்சுறுத்தல் விடுக்காமல், மனிதாபிமானத்தோடு தமக்கு உதவ வேண்டும் என்பது இருநாட்டு மீனவர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.