யாழ்ப்பாணம், ஜூலை 17
மன்னார் பியர் பகுதியில் இருந்து ஓர் படகில் கடல் தொழிலிற்குச் சென்ற மூவரில் இருவர் மீட்கப்பட்டபோதும் ஒருவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் மாவட்டம் பியர் பகுதியில் இருந்து கடந்த 14 ஆம் திகதி இரவு தொழிலிற்குச் சென்ற ஓர் படகு கரை திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டு கடற்படையினருக்கும் தகவல் வழங்கப்பட்டது.
இவ்வாறு மூவருடன் பயணித்த படகு நடுக் கடலில் விபத்திற்கு உள்ளானதில் மூவரும் கடலில் வீழ்ந்து நீந்தியுள்ளனர். இவ்வாறு நீந்தியவர்களில் இருவர் நேற்றைய தினம் கச்சதீவு கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றபோதும் மூன்றாவது மீனவர் தொடர்பில் இதுவரை தகவல் ஏதும் இல்லை.
இதேநேரம் மீனவர்கள் பயணித்த படகும் இயந்திரமும் கடலில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
இராயமூர்த்தி என்னும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 52 வயது மீனவரே தற்போது வரை மீட்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.