(மன்னார் நிருபர்)
(16-07-2022)
நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வங்காலை கிராம மக்கள் இன்றைய தினம் சனிக்கிழமை(16) காலை சமையல் எரிவாயு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுமார் 900 லிட்ரோ சமையல் எரிவாயு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் வைத்து மக்களுக்கு வழங்கப்பட்டது.
-அதனைத் தொடர்ந்து ஏனைய கிராமங்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
எனினும் இன்றைய தினம் (16) வங்காலை கிராமத்திற்கு விநியோகிக்கப் படாமல் வேறு கிராமங்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
-இந்த நிலையில் வங்காலை கிராமத்தில் உள்ள 4 கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த மக்கள் வங்காலை பிரதான வீதியை மறித்து எரிவாயு சிலிண்டர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-இந்த நிலையில் வங்காலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மக்களுடன் கலந்துரையாடினர்.
-இதன் போது கிராம மக்கள் தமது பிரச்சினைகளை போலீஸ் அதிகாரியிடம் தெரிவித்ததோடு,தமது கிராமம் சமையல் எரிவாயு வழங்கும் நடவடிக்கைகளில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்து கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர்.
-இந்த நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரி மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் குறித்த விடயம் தொடர்பாக தெரியப்படுத்திய நிலையில் எதிர்வரும் புதன்கிழமை (20) சமையல் எரிவாயுவை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இந்த நிலையில் பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைவாக மக்கள் வீதியை மறிக்காது அவ்விடத்தில் இருந்து சென்றனர்.