தாமரை மொட்டுக்கு தலைமை தாங்கும் யானைக்கும், யானைக்குத் தலைமை தாங்கும் தாமரை மொட்டுக்கும் இடையிலான ஒரு போட்டியில் யானைகளின் தலைவர் வென்று இருக்கிறார். ஆக மொத்தத்தில் வெற்றியை தீர்மானித்தது தாமரை மொட்டுத்தான். எப்படித்தான் புரட்டி புரட்டிப் பார்த்தாலும் அது தாமரை மொட்டுக்கு கிடைத்த வெற்றிதான். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்தாலும் ரணில் தாமரை மொட்டில் தங்கி இருக்கும் ஒருவர். எனவே அவர் தாமரை மொட்டின் மறைமுக கைதிதான். இந்த அடிப்படையில் பார்த்தால் என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது? எதுவும் நிகழவில்லை. காலி முகத்திடலிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக போராடிக் கொண்டிருக்கும் மக்கள் எதைக் கேட்டார்களோ அது நடக்கவில்லை.அவர்கள் கேட்டது சிஸ்டத்தில் மாற்றத்தை. அதாவது முறைமையில் மாற்றத்தை. ஆனால் முறைமையில் அப்படிப்பட்ட மாற்றம் எதுவுமே நிகழவில்லை என்பதைத்தான் ஜனாதிபதி தேர்தல் நிரூபித்திருக்கிறது. தேர்தலுக்கு முந்திய பேரங்களின் போதும் தேர்தல் முடிவுகளின்படியும் அது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு முறைமை மாற்றத்தை மூன்று மாத கால எழுச்சிகளின் மூலம் உடனடியாக கொண்டு வந்துவிட முடியாது. ஏனென்றால் இப்போது இருக்கும் தேர்தல் முறைமை,இப்போது இருக்கும் கட்சிகள்,இப்போது இருக்கும் நாடாளுமன்றம், இப்போது இருக்கும் யாப்பு,எல்லாவற்றையும் விட முக்கியமாக இப்போது இருக்கும் அரசு கட்டமைப்பு அனைத்துமே அந்த முறைமையின் பிரிக்கப்பட இயலாத பகுதிகள்தான். இங்கு முறைமை என்ற சொல் மேலோட்டமானது என்றும் கட்டமைப்பு என்ற சொல்தான் ஆழமானது அடிப்படையானது என்றும் தமிழ்த் தரப்பிடம் ஒரு விளக்கம் உண்டு. அதே சமயம் பேராசிரியர் ஜெயதேவ உயாங்கோட போன்றவர்கள் அந்த முறைமையை மூன்று அடுக்குகளாக பிரித்து அதற்கு விளக்கம் கூறுகிறார்கள்.
கடந்த மூன்றுமாதகால மக்கள் எழச்சிகள் நாட்டின் அரசு எந்திரத்தை ஸ்தம்பிக்கச் செய்தன. யாப்பை ஸ்தம்பிக்க செய்தன.சட்டம் ஒழுங்கு நடைமுறையை ஸ்தம்பிக்க செய்தன. நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்தன. அது மாற்றத்தின் தொடக்கம் தான். அதற்குமப்பால் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவது என்றால் அதற்காக ஆழமான இலக்குகளை முன்வைத்து நீண்ட காலம் போராட வேண்டி இருக்கும். சிங்கள மக்களின் கடந்த மூன்றுமாத கால எழுச்சி உலகத்துக்கு நிரூபித்திருக்கும் உண்மை அதுதான்
இப்போதுள்ள நாடாளுமன்றம் ஒரு விதத்தில் மக்களானையை இழந்த காலாவதியான நாடாளுமன்றம்.இந்த நாடாளுமன்றத்துக்கு ஊடாக மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது.தாமரை மொட்டுக் கட்சி பலமாக காணப்படும் இந்த நாடாளுமன்றம் எந்த ஒரு மாற்றத்திற்கும் விட்டுக் கொடுக்காது.அங்கு செய்யப்படக்கூடிய எல்லா மாற்றங்களுமே அரசியல் சங்கீதக் கதிரை விளையாட்டுக்களில் ஆட்களை மாற்றுவதாகத்தான் அமைய முடியும். அப்படித்தான் இப்பொழுது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்திருக்கிறார்.
அவரும் வீட்டுக்குப் போக வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கேட்கிறார்கள்.ஏனென்றால் அவர்தான் ராஜபக்சக்களை பாதுகாத்தவர் அவர்தான் யாப்புக்கு வெளியே நடந்த மாற்றங்களின் விளைவுகளை யாப்புக்குள் கொண்டு வந்து பெட்டி கட்டியவர். அவர்தான் போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்வதற்காக ராஜபக்சக்களால் ஒரு முன் தடுப்பாக களமிறக்கப்பட்டவர். எனவே அவரையும் அகற்றுவதற்காக அவர்கள் இனி எதிர்காலத்தில் போராடக் கூடும்.ஆனால் பிரச்சனை என்னவென்றால் தனி நபர்களை அகற்றுவதால் மட்டும் முறைமையில் அல்லது கட்டமைப்பில் மாற்றங்களை கொண்டுவர முடியாது என்பதனை கடந்த மூன்றுமாத கால அனுபவத்திலிருந்து கோத்தா கோகம கிராமமும் “அரகலிய” போராட்ட கட்டமைப்பும் கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த அனுபவம் தமிழ் மக்களுக்கு ஏற்கனவே உண்டு. 2015 ஆம் ஆண்டு நடந்த ரெஜிம் சேஞ்சின் போது அது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்மக்கள் கேட்பது ரெஜிம் சேஞ்ச் அதாவது அரசாங்கத்தை மாற்றுமாறு அல்ல. மாறாக சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பில் மாற்றத்தை. ஆனால் அரகலிய என்று அழைக்கப்படும் சிங்கள மக்களுடைய எழுச்சி கேட்பது,கட்டமைப்பு மாற்றத்தை அல்ல. மேலோட்டமான சிஸ்டத்தில் மாற்றத்தை. முறைமையில் மாற்றத்தை. இங்கேதான் தமிழ் மக்களின் கோரிக்கைகளும் சிங்கள மக்கள் எழுச்சிகளின் கோரிக்கைகளும் வேறாக நின்றன.
இப்பொழுது ரணில் வந்து விட்டார் அவர் மேற்கு நாடுகளின் பக்க பலத்தோடு போராட்டத்தை எப்படி நீர்த்துப் போகச் செய்யலாம் என்று திட்டமிடுவார். அவர் தன்னைப் பலப்படுத்துவது என்று சொன்னால் முதலில் அரகலியவை தோற்கடிக்க வேண்டும். இந்த விடயத்தில் அவருக்கு வாய்ப்புக்களை வழங்கக் கூடாது என்று கருதித்தான் அரங்கலிய போராட்ட அமைப்புக்கள் தாங்கள் கைப்பற்றி வைத்திருந்த நாடாளுமன்றத்தையும் ஏனைய பொது கட்டிடங்களையும் விட்டு விலகி பின்வாங்கின. ஏனெனில் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவது, செயல்படாமல் தடுப்பது என்பது ஜனநாயகத்துக்கு எதிரான நேரடியான தாக்குதலாக பார்க்கப்படும். அத்தகைய பொருள்படத்தான் ரணில் பாசிசம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.எனவே அரகலிய அமைப்பினர் முன்னெச்சரிக்கையாக நாடாளுமன்றத்தை விட்டு பின்வாங்கி இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புக்கள் எதிர்காலத்தில் ஒரு கட்சியை உருவாக்கி தேர்தலில் போட்டியிட போவதாகவும் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.இது ஒரு பின்வாங்கலா?
ஏனெனில் இந்தப்போராட்டம் தொடங்கிய புதிதில் அவர்கள் அரசியல் கட்சிகளை ஏற்றுக் கொள்ளவில்லை. அரசியல்வாதிகளை தங்கள் மேடைகளில் பேச அனுமதிக்கவில்லை. ஏறக்குறைய தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல அரசியல்வாதிகள் பங்குபற்றாத ஒரு போராட்டமாக அதை அவர்கள் உருவகப்படுத்தினார்கள்.தேர்ந்தெடுக்கப்பட்ட சில அரசியல்வாதிகளோடுதான் அவர்களுக்கு இறுக்கமான உறவு காணப்பட்டது.இப்பொழுது கட்சி அரசியலுக்குள் இறங்கப் போகிறார்களா?
மேலும்,எந்தக் கட்சிகளை அவர்கள் தங்களுடைய போராட்ட அரங்கிற்குள் உள்ளே வரவிடாமல் தடுத்தார்களோ, எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை “கொறா” – திருடர்கள் என்று கூறி நிராகரித்தார்களோ,அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களோடு, கட்சித் தலைவர்களோடு உட்கார்ந்து பேச வேண்டிய ஒரு நிலை. இதில் ஒரு யதார்த்தம் இருக்கிறது. பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை நிராகரித்தால் அடுத்த கட்டம் என்ன என்ற கேள்விக்கு அரகலிய அமைப்பிடம் துலக்கமான, சாத்தியமான பதில்கள் இருக்கவில்லை.குமார் குணரட்ணம் கூறினார், மக்கள் அதிகார அமைப்புகளை உருவாக்கப் போகிறோம் என்று. அந்த மக்கள் அதிகார அமைப்புக்கள் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பிரதியீடு செய்யுமா என்ற கேள்விக்கு அவரிடம் பொருத்தமான பதில் இருக்கவில்லை.
இவ்வாறான தெளிவின்மைகளின் மத்தியில்தான் இப்பொழுது அரக்கலிய அமைப்பு தேர்தல் கேட்பதற்காக ஒரு கட்சியை உருவாக்கப்போவதாக கூறுகிறது. அதோடு ரணிலைத் தோற்கடிப்பதற்காக கட்சித் தலைவர்களையும் சந்தித்து பேசியது. அதாவது அவர்கள் இலங்கைத்தீவின் பிரதிநிதித்துவ ஜனநாயக முறைமைக்குள் தங்களை பொருத்திக்கொள்ள முயற்சிக்கிறார்கள் என்று தெரிகிறது.
இவ்வாறு அரகலிய தன்னுடைய இலட்சியவாத பண்பில் இருந்து பின்வாங்கி நடைமுறைச் சாத்தியமான அல்லது பொருத்தமான வழிமுறைகளை குறித்து சிந்திக்கத் தொடங்கிய ஒரு பின்னணிக்குள்தான் இப்பொழுது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் ஏற்கனவே வாக்குறுதி வழங்கியபடி நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை அகற்றி நாடாளுமன்றத்தை பலப்படுத்துவாரா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அல்லது தனக்கு முன் வந்த எல்லா ஜனாதிபதிகளையும் போல நிறைவேற்று அதிகாரத்தின் கதிரையில் ஏறி அமர்ந்ததும் அந்த அதிகாரத்தின் கடைசித் துளி வரை உறிஞ்சி குடிக்க வேண்டும் என்ற பேராசையோடு தன் பதவிக்காலம் முழுவதையும் அனுபவிக்க முயற்சிப்பாரா என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
அவருடைய எழுச்சியை அரகலிய ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தொடர்ந்து போராடுவார்கள் என்று தோன்றுகிறது.அப்போராட்டத்தை வெற்றி கொண்டால்தான் அவர் முன்னால் இருக்கும் முதலாவது தடை நீக்கப்படும். ரணில் தன்னை பலப்படுத்துவது என்பது அரகலியவைத் தோற்கடிப்பதில்தான் தங்கியிருக்கிறது. மேற்கு நாடுகளில் பக்க பலத்தோடு அதை அவர் எப்படி செய்யப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
அவர் தன்னுடைய அரசியல் வாழ்வின் இறுதி ஆட்டத்தை ஆடத் தொடங்கி இருக்கிறார்.அந்த ஆட்டத்தை முழுமையாக,வெற்றிகரமாக ஆடி முடிப்பதென்றால் முதலில் அவர் அரகலியவை எதிர்விதத்திலாவது தோற்கடிக்க வேண்டும்.அரகலியவுக்குக் காரணமாக இருந்த பொருளாதார நெருக்கடி தற்காலிகமாகவேநும் தீர்க்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் தற்காலிக நிவாரணங்களையாவது வழங்க வேண்டும். மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும்.அரகலியவுக்குக் காரணமாக உள்ள கஷ்டங்களும் நெருக்கடிகளும் ஓரளவுக்கு தணியவேண்டும்.அதன் பின் அரகலியவை அகற்றுவது அவருக்கு சுலபமாக இருக்கலாம். இந்த விடயத்தில் மேற்கு நாடுகள் அவரை பலப்படுத்தும்.
ரணிலை பலப்படுத்தினால்தான் இலங்கைத்தீவில் தங்களுடைய பிடியை பலப்படுத்தலாம் என்பது மேற்கு நாடுகளுக்கு நன்றாகத் தெரியும்.இந்தியா தெரிந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியோடு ஒத்துழைக்கும்.சீனாவும் ரணிலை அனுசரித்துப்போகும்.ஏனென்றால் துறைமுக நகரத்தை வெற்றிகரமாக இயக்குவதற்கு ரணிலின் ஆதரவு தேவை.எனவே கூட்டிக்கழித்துப் பார்த்தால் ரணில் உலக சமூகத்தின் ஆதரவோடு அரகலியவை எப்படித் தோற்கடிக்கலாம் என்றுதான் சிந்திப்பார்.
அரகலியவின் முதலாவது கோரிக்கை கோட்டா வீட்டுக்குப் போக வேண்டும் என்பதுதான்.அப்போராட்டம் வெற்றி பெற்று விட்டது. ஆனால் அந்த வெற்றியை முழுமை அடைய விடாமல் ரணில் இடையில் வந்து போராட்டத்தின் கனிகளை தனது சட்டைப்பைக்குள் போட்டுக் கொண்டு விட்டார்.எனவே ரணிலை அகற்றுவது என்ற கோரிக்கையானது, கோட்டாவை அகற்றும் கோரிக்கையின் ஒரு பகுதிதான் என்று அரகலிய தரப்பினர் வாதிடுகிறார்கள்.
இந்த இடத்தில் அரங்கலியவை போன்று அரசியல்வாதிகளை உள்ளே வரவிடாமல் போராடிய தமிழக ஜல்லிக்கட்டு போராட்டத்தை உற்றுக் கவனிக்க வேண்டும்.ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் அடிப்படை கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட பின் போராட்டம் பெருமளவுக்கு வேகம் குறைந்தது. அந்த வெற்றி காரணமாக உற்சாகம் அடைந்த ஒரு தரப்பு மேலதிக கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை தொடர முற்பட்ட பொழுது தமிழக அரசு பலத்தை பிரயோகித்தது. அரகலியவுக்கும் அப்படி ஒரு நிலை வருமா ?அல்லது ரணில் தந்திரமாக அரகலியவைப் பலவீனப்படுத்துவாரா?
ஏற்கனவே அரகலியவுக்குள் பிளவுகள் ஏற்பட்டிருப்பதாக அவதானிக்கப்படுகிறது.அரகலியவின் நிகழ்ச்சி நிரலை மீறி சில செயற்பாடுகளை உள்ளுக்கிருந்து கொண்டே சிலர் முன்னெடுப்பதாகவும் அவதானிக்கப்பட்டுள்ளது. அரகலிய அமைப்புகளுக்கு இடையே மோதல்களும் ஏற்பட்டிருக்கின்றன.அரகலிய ஒரு தலைமைத்துவத்தின் கீழ் கட்டமைக்கப்பட்ட பலமான நிறுவன கட்டமைப்பை கொண்டிருக்கவில்லை. இந்த அடிப்படைப் பலவீனம் காரணமாக ஊடுருவல்கள் நிகழ்வதாக கருதப்படுகிறது. ரணில் விக்ரமசிங்க தமிழ்மக்களுடைய ஆயுதப் போராட்டத்தில் பிளவுகளை ஏற்படுத்தியது போல அரகலியவுக்குள்ளும் பிளவுகளை ஏற்படுத்துவாரா என்ற கேள்வியை தன்னிடம் ஒருவர் கேட்டதாக மனோ கணேசன் கடந்த வாரம் முகநூலில் குறிப்பிட்டு இருந்தார்.
எனவே ரணில் அரகலியவை எப்படிக் கையாள போகிறார் என்பதில்தான் இலங்கை தீவின் அடுத்த கட்டம் தங்கி இருக்கிறது. அரகலிய கேட்ட முறைமை மாற்றம் நடக்கவில்லை என்பதும் ஏற்கனவே இருந்த முறைமையின் காரணமாகத்தான் அரசியல் சங்கீதக் கதிரை விளையாட்டில் ரணில் இப்பொழுது ஜனாதிபதியாக வந்திருக்கிறார் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. இச்சங்கீதக் கதிரை விளையாட்டில் கடந்த புதன்கிழமை நிகழ்ந்ததுதான் இறுதி மாற்றமா? அல்லது இதற்கு மேலும் மாற்றங்கள் நிகழுமா?