அவர் ஜனாதிபதியாக தெரிவாவதை இந்தியாவும் சீனாவும் விரும்பவில்லை?
ஜனாதிபதித் தெரிவின் பின்னணியில் எத்தரப்பினர்கள் உள்ளனர் என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முந்திக்கொண்டு வாழ்த்துக்கள்
தெரித்துள்ளவர்களை வைத்து இலகுவாக அடையாளம் காணலாம். அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய யூனியன் ரணிலை வாழ்த்தியுள்ளன. அதுமட்டுமின்றி ரணிலின் வெற்றியை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபையும் தெரிவித்துள்ளது. இந்நாடுகள் ரணிலின் வெற்றியையே விரும்பின. ரணிலின் வெற்றிக்கான காரியங்களையும் இந்நாடுகள் மேற்கொண்டன. ரணிலின் வெற்றியையே தமது கேடயம் என்பது ராஜபக்சக்களின் திட்டமுமாகும்.
இதேவேளை ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவதனை இந்தியா, சீனா ஆகியனவும் இந்நாளின் சார்பு நாடுகளும் விரும்பவில்லை. இதனால்தான் இந்நாடுகள் இது வரை வாழ்த்துக்களைத் தெரிவிக்கவில்லை.
கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற போது சீனாதான் முதலில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டது. ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கவில்லை. இந்தியா கூட கோத்தபாய ராஜபக்சவின் வெற்றியில் மகிழவில்லை. ராஜபக்சவினர் சீனா சார்புடையவர்கள் என்ற காரணத்தினால் தான் கோத்தபாய ராஜபக்சவின் வெற்றி துக்கத்தையே இந்நாடுகளுக்கு ஏற்படுத்தியது. கோத்தபாய ராஜபக்ச சீனாக்காரன் போலவே செயற்பட்டார். சீனாவின் குப்பையையும் பசளையாக வாங்கிக் கொண்டார். அமெரிக்கா மற்றும் இந்தியாவின் செல்வாக்கு இலங்கையில் மிகவும் குறைவடையத் தொடங்கியது.
இந்தப் பின்னணியில் கொவிட், அதிக வட்டியில் கடன், முஸ்லிம்களின் கொவிட் ஜனாஸாக்களை எரித்தமையால் முஸ்லிம் நாடுகளை பகைத் கொண்டமை, பிழையான பொருளாதாரக் கொள்கை, சிறுபான்மையினரை கணக்கில் கொள்ளாமை போன்ற காரணங்களால் இலங்கையில் பெரும் பொருளாதார பிரச்சினை ஏற்பட்டது. சகல பொருட்களுக்கும் வரிசையில் நிற்க வேண்டிய சூழல், யூரியா பசளையை தடை செய்யமையால் நாட்டு மக்கள் கோத்தபாய ராஜபக்சவுக்கும், அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. நாட்டில் டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்த சூழலை பயன்படுத்தி இந்தியா இலங்கைக்கு பல்வேறு உதவிகளையும். கடன்களையும் வழங்கி இலங்கையில் தனது ஆதிக்கத்தை அதிகரித்துக் கொண்டது. சீனாவின் ஆதிக்கம் குறைந்தும் காணப்பட்டது. இத்தகையதொரு சூழலில் காலி முகத்திடல் முதல் நாட்டின் பல பாகங்களிலும் போராட்டங்கள் இடம்பெற்றன. இந்த போராட்ட சூழலை அமெரிக்கா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக செய்யப்பட்டது. மக்களின் ஜனநாயக போராட்டத்திற்கு தடைகளை ஏற்படுத்தக் கூடாது என்று அமெரிக்கா தெரிவித்தமை கவனத்திற்குரியது.
தங்களின் ஆணைக்கு ஆட்டம் போடக் கூடிய ரணிலை வெற்றி பெற செய்து வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது. ஆகவே இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஜனாதிபதி தெரிவு ஆகியவற்றின் மீது இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளின் செல்வாக்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நாடுகளின் ஆதிக்க விளையாட்டு இத்துடன் நிற்கப் போவதில்லை. அது மட்டுமல்ல ரணிலுக்கு எதிரான போராட்டங்களும் நடைபெறும். இந்த ஆதிக்க நெருக்கடிகளை சாதுரியமாக வெற்றி கொள்வதிலேயே இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கலாம். சுமார் மூன்று வருடங்கள் கடந்ததன் பின்னரே நாட்டின் பொருளாதாரம் ஓரளவுக்கு முன்னேற்றமடையும்.
சஹாப்தீன் -கொழும்பு
22.7.2022