புதிய ஜனாதிபதியின் அரச பயங்கரவாதம் தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கியுள்ளது
(கொழும்பு காலி முகத்திடலிலிருந்து கனடா உதயன் சென்னைப் பிரதிநிதி பிரகாஸ்)
கடந்த 18ம் திகதி திங்கட்கிழமை நாம்
கொழும்பு காலி முகத்திடலில் நிற்கின்றோம். கனடா உதயன் ஆசிரிய பீடத்தினரோடு நானும் அங்கு நிற்கின்றேன். கொழும்பில் உதயன் பிரதம ஆசிரியருக்கு நன்கு அறிமுகமான ஊடக நண்பர்கள் இருவர் எம்மை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.
போராட்டக் காரர்கள் முன்னைய உற்சாகத்தோடு கோசங்களை எழுப்பியும் உணர்வுப் பாடல்களைப் பாடியும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருந்தார்கள். சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் நாம் போராட்டக்காரர்களின் முக்கிய அமைப்பாளர்களோடு நாம் உரையாடுகின்றோம்.
ஆச்சரியம் என்னவென்றால் முன்னர் இலங்கையின் பாராளுமன்றமாகவும் பின்னாளில் இலங்கை ஜனாதிபதியின் பிரதான செயலகமாகவும் விளங்கிய காலி முகத்திடல் அமைந்துள்ள அந்த வளாகத்திற்குள் எம்மை அழைத்துச் செல்கின்றார்கள் அந்த முக்கிய அமைப்பாளர்கள்.
இராணுவம் பொலிஸ் என அனைத்து தரப்பினரும் அங்கு அமைதியாக தங்கள் கடமைகளைச் செய்ய போராட்டக் காரர்களும் தங்கள் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள்.
முன்னாள் பாராளுமன்றக் கட்டத்திற்குள் நாம் குழுவாகசவ் செல்கின்றோம். அதன் முன் அறையில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
போராட்டக் காரர்களில் ஒருவர் எமது உதயன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்களோடு உரையாடுகின்றார். அத்துடன் எமது ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கும் அந்த போராட்டக் காரர்களின் பிரதிநிதி தகுந்த பதில்களை அளிக்கின்றார்.
‘கோட்டாபாயவை நாம் பதவியிலிருந்து அகற்றிவிட்டோம். இனி ரணில் பதவிக்கு வருவதையும் நாம் அனுமதிக்கமாட்டோம். அவர் இந்த கட்டடத்திலிருந்து பணியாற்ற அனுமதிக்க மாட்டோம். இந்த கட்டடத்தை நாம் இனிமேல் ஒரு நூலகமாக்கவுள்ளோம். ஆட்சியாளர் இதுவரை காலமும் இந்த பெரிய கட்டடத்திலிருந்து மக்களுக்கு எந்த சேவையையும் ஆற்றவில்லை. அதனால் இதை மக்களுக்கு அறிவைப் பெற்றுத்தரும் ஒரு நூலகமாக மாற்றவுள்ளோம்.
ரணில் அவர்கள் ஜனாதிபதியாக வருவதற்கு முயல்கின்றார். ஆனால் நாம் அவரையும் கோட்டாபாயவைத் துரத்தியது போன்று துரத்தியடிப்போம்’ என்று போராட்டக் காரர்கள் உதயன் பிரதம ஆசிரியர்களிடம் தெரிவித்தார்கள். அவர்களது போர்க்குணத்தை மெச்சியபடி நாங்கள் அந்த இடத்தை விட்டு நீங்கினோம்.
ஆனால் இன்று அந்த இடத்தில் அவர்கள் இல்லை. இலங்கையின் அரச பயங்கரவாதம் மீண்டும் தனது கோரமான முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. விடுதலைப் புலிகளின் போராட்டத்தை சர்வதேச அரச பயங்கரவாதம் எவ்வாறு அழித்து நிர்மூலமாக்கியதோ. அதைப்போன்று தென்னிலங்கைப் போராளிகளின் மற்றும் பல்கலைக் கழக மாணவர்களின் உணர்வு கொண்ட போராட்டத்தை ரணில் தலைமையில் அழிக்க முற்பட்டுள்ளார்கள்.
கோட்டாபாய என்ற கொடியஅரசியல்வாதியை சில நாட்களில் பதவியிலிருந்து விரட்டியடித்தவர்கள். எவ்வாறு இந்த நரிக்குணம் கொண்ட ரணிலை கையாளப் போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.