(மன்னார் நிருபர்)
(22-07-2022)
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது ஆயுதம் ஏந்திய ராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது இராணுவத்தினரின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் உயிர் தப்பிய பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ‘கோட்டா கோ கம’ போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்கள், ரந்திமல் கமகே, லஹிரு, அனுரங்க உட்பட பலர் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட ஏழு போராட்டக்காரர்களும் சற்று முன்னர் மருதானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில்,பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்த போராட்டக்காரர் ஒருவர் பாதுகாப்பு தரப்பினரால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் இரண்டு ஊடகவியலாளர்கள் மற்றும் ஒரு சிவிலியன் தொடர்பாக இதுவரை எந்த தகவல்களும் தெரிய வரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,இராணுவத்தினரின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ள இளைஞர்களை போராட்டக்கள பகுதியிலிருந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காலி முகத்திடலில் கொடூர தாக்குதல் – பல்வேறு தரப்பினர்களும் கடும் கண்டனம்
இந்நிலையில், நேற்றைய தினம் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற நிலையில், நேற்று இரவு காலி முகத்திடல் போராட்ட களத்திற்கு வந்த படையினர் அங்கிருந்த போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.
அத்துடன், கூடாரங்களும் அகற்றி எறிந்தனர்.
மேலும் போராட்ட களத்தில் இருந்த முக்கியஸ்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், சர்வதேச ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர்களும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்..
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன்
“காலி முகத்திடல் போராட்ட களத்தில் இருந்து வரும் செய்திகள் குறித்து மிகவும் கவலையடைவதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவத்துள்ளார்.
அத்துடன், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையின் முக்கியத்துவத்தை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிமல் ரத்நாயக்க
அமைதியான போராட்டத்திற்கு எதிராக ரணில் மற்றும் ராஜபக்சவின் ஒழுக்கக்கேடான ஆட்சியின் கொடூரமான தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஊடகவியலாளர்கள் இருவருக்கு என்ன நடந்தது????
இன்று அதிகாலை 2 மணியளவில் கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த இரு ஊடகவியலாளர்கள் விமான படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் சரோஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கைது செய்யப்பட்டவர்கள் இதுவரையில் எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் ஒப்படைக்கப்படவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.