சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்
எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே – இன்னும்
எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி(எத்தனை)
திரைப்படம்: மலைக்கள்ளன், பாடலாசிரியர்: தஞ்சை என் ராமையாதாஸ் இசை: எஸ் எம் சுப்பையா நாயுடு, பாடியவர்: டி எம் சௌந்தரராஜன் நடிகர்கள்: எம் ஜி ஆர், பானுமதி
என்னை மிகவும் கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று. தமிழ் திரையுலகத்தில் அமரத்துவம் வாய்ந்த ஆயிரக்கணக்கான பாடல்களில் இது முதல் நூறு பாடல்களிலாவது இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
இந்த பாடல்களில் உள்ள வரிகள் அனைத்தும் இப்போது இலங்கையில் நடைபெற்றுள்ளவற்றிற்கும் மிகவும் பொருந்தும். “இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…..
இலங்கையில் போர் முடிந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் மற்றும் ஆயிரக்கணக்கானவர்களின் உயிரிழப்பு, கையளிக்கப்பட்ட மற்றும் சரணடைந்த ஏராளமானவர்கள் என்ன ஆனார்கள் என்பது இன்றளவும் தெரியாத நிலையில், அந்த போர் வெற்றியின் பின்னணியில் வெற்றி பெற்ற கோத்தாபய ராஜபக்ச, அவருக்கு வாக்களித்த சிங்கள மக்களாலேயே பதவியிலிருந்து அகற்றப்பட்டு நாட்டிலிருந்தும் விரட்டப்பட்டார். ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக `அரகலிய` போராட்டம் வலுத்த நிலையில், மகிந்த ராஜபக்ச பதவி விலகும் நிலைக்கும் தள்ளப்பட்டார். இதையடுத்து சர்ச்சைக்குரிய வகையில் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தார் கோத்தாபய ராஜபக்ச மக்கள் புரட்சியால் கோத்தா விரட்டப்பட இடைக்கால அதிபராக ரணில் பொறுப்பேற்றார். இதையடுத்து சமூக ஊடகங்களில் `ஜனநாயக நடைமுறைகளுக்கு மாறாக, தார்மீக நெறிமுறைகளை மீறி” ரணில் தற்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நேற்று-வியாழக்கிழமை (21) அன்று பொறுப்பேற்றார்.
கோத்தாபய ராஜபக்சவின் பதவிக்காலம் எஞ்சியிருக்கும் வரையில் மட்டுமே அதாவது 2024 நவம்பர் மாதம் வரையில் மட்டுமே ரணில் பதவி வகிக்க முடியும். ஆனால் அதற்கு முன்னர் தேர்தலொன்று வருமா, வந்தால் அதில் போட்டியிடுவாரா, போட்டியிட்டாலும் வெற்றிபெறுவாரா என்று பல கேள்விகள் உள்ளன.
ஆனால், அவை அவற்றையெல்லாம்விட பெரிய கேள்வி அவர் இப்போது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முறை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிட்ட கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் அவர் தோல்வியடைந்தார். அவர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்தில் ஒரு இடத்தில் கூட வெல்லமுடியவில்லை. ஏதோ தப்பித்தோம் பிழைத்தோம் என்ற வகையில் நூலிழையில் தேசியப் பட்டியலில் ஐக்கிய(மில்லாத) தேசியக் கட்சிக்கு ஒரு இடம் கிடைக்க, அதை யாருக்கு அளிப்பது என்கிற இழுபறி ஆறு மாதங்கள் சென்ற நிலையில், அவர் தன்னைத்தானே அந்த இடத்திற்கு நியமித்துக் கொண்டார். பிறகு, ஒரு நபர் கட்சி என்று விமர்சிக்கப்பட்ட அவர் மறைமுகமாக ராஜபக்சக்களுடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்தார். இது குறித்து பல சந்தேகங்களும் விமர்சனங்களும் எழுந்தன.
இதேவேளை இரண்டாம் ராஜபக்ச ஆட்சியில் குளறுபடிகளும் குழப்பங்களும் அதிகரித்து, திறமையற்ற நிர்வாகம் காரணமாக நிதி நெருக்கடி மோசமாகி மக்கள் அன்றாட வாழ்வாதாரம் அதலபாதாளத்திற்குச் சென்றது. மக்கள் உணவு, எரிபொருள் போன்றவற்றிற்கு அல்லாடும் நிலை இன்றளவும் தொடரும் வேளையில், நாடாளுமன்ற உறுப்பினராக பின் வாசல் வழியாக வந்த ரணில் விக்ரமசிங்க நாட்டின் பிரச்சனைகள் குறித்து ஒரு முன்னாள் பிரதமர் என்கிற வகையில் எந்த கருத்து, கண்டனம் வெளியிடாமல் வாய்மூடி மௌனமாகவே இருந்தார். நாளுக்கு நாள் மக்களின் இன்னல்கள் அதிகரிக்க எந்த சிங்கள மக்கள் கோத்தாபய ராஜபக்சவை ஜனாதிபதி ஆக்கினார்களோ அவர்களே வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கினர். `அரகலிய` என்றழைக்கப்பட்ட அந்த மக்கள் புரட்சி வெடித்த போதும் ரணில் மௌனமாகவே இருந்தார்.
அவர் பிரதமராக தேர்நெடுக்கப்பட்ட போது எழுந்த கருத்துக்கள் கவனிக்கத்தக்கவை. அதாவது ராஜபக்சக்களுக்கு மறைமுகமாக ஆட்சி செய்ய ஒரு நபரும், ரணிலுக்கு மறைமுமாக ஆட்சியில் இருக்க ஒரு கட்சியும் தேவைப்பட்டது என்று அந்த கருத்துக்கள் கூறின. அது இப்போது உண்மையாகியுள்ளது.
அவர் முதல் முறையாக நாடாளுமன்றம் நுழைந்தது 1977 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் திகதி. சரியாக 45 ஆண்டுகளுக்குப் பின்னர் அதே ஜூலை 21 ஆம் திகதி அவர் நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்படாமல் அரசியல் யாப்பிலுள்ள வழியைப் பயன்படுத்தி, தனது கட்சியின் சார்பில் இல்லாமல், யாரை எதிர்த்து 45 ஆண்டுகாலம் அரசியல் செய்தாரோ, அந்த கட்சியின் ஆதரவுடன், நாடாளுமன்றத்தில் தனது கட்சியின் சார்பில் ஒரே உறுப்பினராக இருந்து பிரதமரானவர் இன்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட 8 ஆவது ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதியாக தெரிவான பிறகு அவர் கூறுகிறார், “ராஜபக்சக்கள் எனது நண்பர்கள் அல்ல” ! அப்படியானால் அவருக்கு வாக்களித்தவர்கள் யார்? அவரைத் தவிர அவருக்கு வாக்களிக்க அவரது கட்சியில் யாருமில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி போன்றவை டலஸ் அழகபெருமவை ஆதரிப்பதாக அறிவித்தன. ராஜபக்சக்களால் உருவாக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் மிகப் பெரும்பான்மையான பலத்துடன் இருக்கும் மொட்டுக் கட்சியினரே அவரை இன்று பதவியில் அமர வைத்துள்ளனர். ராஜபக்சக்கள் அவரது நண்பர்கள் இல்லையென்றால் மொட்டுக் கட்சியினர் அவருக்கு வாக்களித்திருப்பார்களா? என்னதான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்த தேர்தல் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் இடம்பெற்றாலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களால் தான் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது உலகறிந்த உண்மை. இதனிடையே “எமது கட்சி வேட்பாளரான டலஸ் அழகபெரும தோல்வியடைந்துவிட்டார், எனினும் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பு மற்றும் உறுப்பினர்களின் தெரிவு ஆகியவற்றை மதிக்கிறோம்”என்று `சூத்திரதாரி` மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.
உடனடியாக ”அவர் ஊதுகிறதும், இவர் ஆடுகிறதும்” என்று மக்கள் விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர்.
இதனிடையே நடைபெற்ற ஜனாதிபதி தெரிவை தான் புறக்கணிக்கப் போவதாக முதலாவதாகக் கூறிய வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும், உச்சநீதிமன்ற நீதியரசருமாக இருந்த சி வி விக்னேஸ்வரன், ரணிலை ஆதரித்து வாக்களிக்கப் போவதாக அறிவித்து அவ்வாறே செய்தார். அவர் சொல்லும் செயலுக்கும் இடையே என்ன நடந்தது அந்த இறைவனுக்கே வெளிச்சம். அதே போன்று கொழும்பில் என்ன நடந்தாலும் அதை எதிர்ப்பது மட்டுமே தமது அரசியல் நிலைப்பாடு என்று கொண்டுள்ள அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் இரண்டு வேட்பாளர்களும் சொன்னபடி இந்த தெரிவை புறக்கணித்தனர். அதனால் அவர்களுக்கோ, தமிழ் மக்களுக்கோ அல்லது நாட்டிற்கோ என்ன இலாபம் என்பது அவர்கள் இருவரிடமே கேட்க வேண்டும்.
ஆனால் ரணிலும் பதவியிலிருந்து விலகும்வரை தமது போராட்டம் தொடரும் என்று காலிமுகத் திடல் போராட்டக்காரர்கள் உறுதியாக அறிவித்துள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பு என்ற பெயரில் அந்த போராட்டத்தை ஒடுக்க அனைத்து வழிகளையும் ரணில் பயன்படுத்துவார் என்பது உறுதி. அவர் மிகவும் விரும்பிய பதவியை, நேரடி தேர்தல் மூலம் பெற முடியாத பதவியை, எதிர்பாராத திருப்பங்கள் காரணமாக, அரசியல் யாப்பின் ஒரு ஷரத்தைப்பயன்படுத்தி நாடாளுமன்றத்தின் மூலமாக தெரிவான அவர் சுலபமாக அந்த பதவியை விட்டுக்கொடுக்க மாட்டார், அதை தக்க வைத்துக்கொள்ள அனைத்தையும் அவர் செய்வார் என்பது அவரை அறிந்தவர்கள் மற்றும் அவரது அரசியலை அவதானித்தவர்களுக்கு தெரியும், புரியும். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரிவை ஏற்படுத்தி, அதை பலவீனமாக்கி இறுதியில் அவர்கள் அழித்தொழிக்கப்பட்டத்தில் ரணிலின் பங்கு கணிசமானது என்பது வரலாறு.
சரியோ, பிழையோ அவர் இப்போது நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி. ’நல்லாட்சி அரசு’ என்று அவரும் மைத்திரிபால சிறிசேனவும் செய்த ஆட்சியின் போதுதான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க அரசியல் யாப்பில் 19 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. இப்போது குறைந்தபட்சம் அதையாவது செய்வாரா ரணில் என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
அவர் ஆட்சியில் இருக்கக் கூடிய அடுத்த 28 மாதங்களில், சிறுபான்மை மக்களால் அதிலும் குறிப்பாக தமிழ் மக்களால் பெரும்பாலான நேரங்களில் ஆதரிக்கப்பட்ட அவர் சில குறைந்தபட்ச விஷயங்களையாவது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்வாரா என்று கேள்வியும் எழுந்ததில்லை. இராணுவம் இன்னும் நிலை கொண்டுள்ள பொதுமக்களின் காணிகளையாவது அவர் விடுவித்துக் கொடுத்தும், அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் காத்திரமான முன்னெடுப்பு ஆகியவற்றை குறைந்தபட்சமாகச் செய்வாரா. அப்படிச் செய்தால் அவரது பின் வெற்றியின் களங்கம் ஓரளவுக்குத் துடைக்கப்படலாம்.
இதேநேரம் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டலஸ் அழகபெருமவின் பின்புலமும் மக்கள் அறிந்ததே. ராஜபக்சக்களின் நெருங்கிய கூட்டாளியாகச் செயற்பட்டு பேரனிவாத கொள்கைகளை முன்னெடுத்தவர் என்பதில் ஐயமில்லை அதில் மாற்றுக் கருத்துக்களும் இல்லை. தெரிவில் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டு பிறகு டலஸுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்த சஜித் பிரேமதாஸ மீதும் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இலங்கையில் ஜனநாயகம் தழைக்க வேண்டுமாயின், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு அதற்கான தேர்தல் நடைபெற வேண்டும். அதற்கு முதல்படியாக ஜெ ஆர் ஜெயவர்தன கொண்டுவந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும், அதற்கு இதயசுத்தியுடன் ரணில் செயல்பட வேண்டும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியாகவோ அல்லது நாடாளுமன்ற பெரும்பான்மை மூலம் பிரதமராகவோ ரணில் வந்தால் மட்டுமே அவரது பின் வாசல் வெற்றி களங்கம் நீங்கும்.
தஞ்சை ராமையாதாஸ் அவர்கள் மலைக்கள்ளன் படத்திற்கு அமரத்துவமான அந்தபாடலை எழுதுவதற்கு முன்னரே மகாகவி பாரதியார் நூறாண்டுகளுக்கு முன்னரே எழுதிவிட்டான்
நெஞ்சு பொறுக்குதில்லையே-
இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்……..