கதிரோட்டம் 22-07-2022
ரணில் விக்கிரமசிங்க என்னும் ‘தோல்வியாளன்’ வெற்றிபெற்ற சம்பவம்
இலங்கையில் மீண்டும் ஒரு தடவை அரசியல் அதிகார பீடத்தைக் கைபற்றுவதற்காக பெருமளவு நிதிப்பரிமாற்றத்தின் மூலம் சதிச் செயல்கள் அரங்கேறியுள்ளன என்பதை இவ்வாரத்தின் பதிவில் மிகுந்த வெறுப்புடன் பதிவு செய்கின்றோம்.
இலங்கையில் அரசியல் உயர் பதவிகள் அமைச்சுப் பதவிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் போன்றவை சாதாரணமானவை அல்ல. சாதாரண மக்களும் அடிமட்ட தொழிலாள மற்றும் விவசாயிகளும் என்ன நினைக்கின்றார்கள் என்றால். நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சர்களும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டு மக்களுக்கு சேவை செய்கின்றார்கள் என்று. ஆனால் உண்மையான நிலவரம் அதுவல்ல.
இவ்வாறான அரசியல் பதவிகள் ஆட்சி பலத்தையும் அதிகார சிந்தனையையும் பண பலத்தையும் தரவல்லன என்பதையும் அரசியல்வாதிகள் நன்கு அறிவார்கள்.
ஆமாம்! சுpல நாட்களுக்கு முன்னர் இலங்கையின் ஜனாதிபதியாக ‘பின்கதவால்’ தேர்ந்தெடுக்கப்பெற்ற் ரணில் என்னும் ‘குள்ளநரி’யானது ஒரு கட்சிப் பலமோ அல்லது வாக்குப் பலமோ அற்ற ஒரு அரசியல்வாதி. ஆனால் ஏனைய கட்சிகளையும் சார்ந்த எம்பிக்களின் ஆதரவோடு அவர் ஜனாதிபதியாக அமர்ந்துள்ளார்.
முஸ்லிம் கட்சிகள் மற்றும் தமிழ்க் கட்சிகள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சிகள் என அனைத்து உறுப்பினர்களும் ரணிலுக்கு வாக்களித்ததன் மூலம் மீண்டும் கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளார்கள் என்பதை கொழும்பு ஊடகங்கள் வெளிப்படையாகவே பதிவிட்டுள்ளன.
எழுந்து நடக்க உடலில் பலமில்லாத தமிழ்த் தலைவர் சம்பந்தர் பணப் பலமும் சுகபோகங்களும் கொண்ட கொழும்பு வாழ்க்கையை தொடர்ந்து பெற்றுக்கொள்வதற்கு ராஜபக்சாக்களும் ரணில் விக்கிமசிங்காவும் தொடர்ச்சியாக ‘பாலம்’ அமைத்துக்கொடுத்துள்ளார்கள்.
அவ்வாறான ஒரு பணப் பலத்தை மீண்டும் அவர்கள் பெற்றுக்கொண்ட ஒரு நிகழ்வாகவே இலங்கை மக்கள் ரணில் விக்கிரமசிங்கா என்னும் தோல்வியாளன் வெற்றிபெற்ற சம்பவத்தை பார்க்கின்றார்கள்.
முன்னைய காலங்களில் கட்சிகள் சார்ந்த அரசியல் இலங்கையில் நிகழ்ந்த போது கட்சி சார்ந்தவர்களே பயன்பெற்றார்கள். ஆனால் தற்போது, தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளும் ‘எந்தக் கட்சி’ பதவிக்கு வந்தாலும் இலகுவாக சலுகைகளையும் சுகபோகங்களையும் பெற்றுக்கொள்ளும் பாதையம் பாலமும் அங்கு அமைக்கப்பெற்றுள்ளன.
இதற்கு உதாரணமாக கடந்த காலத்தில் இடம்பெற்ற பல அரசியல் நியமனங்கள். வாக்கெடுப்புக்கள் போன்று சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற ‘ரணிலின் ஜனாதிபதி பதவியேற்பும் இடம் பெற்றுள்ளது என்றே நாம் பதிவு செய்கின்றோம்.