சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்
செய்த ஊழ்வினைகள் தொடர்ந்து துரத்தும் என்பது இயற்கையின் விதி. அதற்கு `கண்டதே காட்சி, கொண்டதே கோலம்` என்றும் என் ஆட்சியில் நான் வைத்ததே சட்டம் என்று அதிகார மமதையிலிருந்த `நாட்டிலிருந்து விரட்டப்பட்ட` முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சிங்கப்பூரிலும் பெரிய சிக்கலை எதிர்கொண்டுள்ளார்.
போர்க் குற்றங்களில் ஈடுபட்டமைக்காக அவரை உடனடியாக கைது செய்யக் கோரி தென் ஆப்ரிக்காவின் ஜொஹனஸ்பர்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நீதி மற்றும் சமாதானத்திற்கான சர்வதேச செயற்திட்டம் (ஐ டி ஜே பி – ITJP) சிங்கப்பூரின் சட்டமா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளது.
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்கிற இக்கட்டான நிலைக்கு அவர் இப்போது தள்ளப்பட்டுள்ளார் என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். எனினும் ஐ டி ஜே பி இன் முறைப்பாட்டின் சட்ட எல்லைகள் மற்றும் வரையறைகள் குறித்து மாற்றுக் கருத்துக்கள் நிலவுகின்றன.
சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ள குற்றவியல் ஆவணத்தில், இலங்கையின் பாதுகாப்புச் செயலராகப் பதவி வகித்த காலத்தில் அவர் பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்று 63 பக்கங்களைக் கொண்ட அந்த ஆவணம் கூறுகிறது.
‘பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கம் நிலைகுலைந்தது எனினும், கடந்த மூன்று தசாப்தங்கள் அல்லது அதற்கும் மேலாக தொடர்ந்துவரும் மோசமான சர்வதேச குற்றங்களுக்கான தண்டனைகளிலிருந்து கட்டமைப்பு ரீதியில் வழங்கப்பட்டுவரும் விலக்களிப்பு போக்குடன் இது உண்மையில் தொடர்புபட்டுள்ளது” என்று ஐ டி ஜே பி இன் நிறைவேற்று பணிப்பாளர் யாஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
ஊழல், மோசமான பொருளாதார நிர்வாகம் ஆகியவை தொடர்பில் மட்டுமின்றி மிகவும் மோசமான குற்றச் செயல்களுக்கான பொறுப்புக்கூறலும் இதில் அடங்கியுள்ளதை இந்த ஆவணம் அடையாளம் காட்டுகிறது என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அவர் பல தசாப்தங்களாக தொடர்ச்சியாக இழைத்த பல குற்றங்களுக்காக கோத்தாபய ராஜபக்சவை கைத் செய்து, விசாரணைகளை முன்னெடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்று ஐ டி ஜே பி சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்துள்ள ஆவணத்தில் கோரியுள்ளது.
1989ஆம் ஆண்டில் இராணுவ கட்டளை அதிகாரியாக ஒரு மாவட்டத்திற்கு பொறுப்பாக இருந்த காலத்தில் ஆகக்குறைந்தது 700 மக்கள் காணாமற்போனதில் அவருக்கிருந்த பங்கை இவ்வாவணத்தின் தொடக்கத்தில் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது.
ஆனால், 2009இல் நாட்டின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த நேரத்தில் நாட்டின் பாதுகாப்பு செயலராக அவர் பதவி வகித்த காலத்தின் மீதே முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அக்காலகட்டத்தில் அவர் ஜெனீவா ஒப்பந்தங்களை மீறினார், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை மீறினார், சர்வதேச குற்றவியல் சட்டவிதிகளை மீறினார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கொலை, படுகொலை, சித்திரவதை, மனிதநேயமற்ற நடத்தை, பாலியல் வன்புணர்வு, இதர பாலியல் ரீதியான வன்முறைகள், உரிமைகளைத் தடுத்தல், மோசமான உடல், உளரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்தல், பட்டினி ஆகிய குற்றச்செயல்கள் இதில் உள்ளடங்கும்.
நாட்டைவிட்டு ஓடிய முன்னாள் ஜனாதிபதி, தான் முன்னெடுத்த வலிந்த தாக்குதல்களுக்குத் தலைமை தாங்குவதற்கு, முக்கிய இராணுவத் தளபதிகளுக்கு நேரடியாகக் கட்டளைகளை வழங்கி கண்காணித்தார் என்று அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.
போர்க் காலத்தில் தமது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள பதுங்கு குழிகளில் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள பதுங்கியிருந்தவர்கள் மீதும், உணவிற்காகவும், மோசமாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காகவும் தற்காலிக மருத்துவ மையங்களில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள படுத்திருந்தவர்கள் மீது தொடர்ச்சியாக வேண்டுமென்றே வலிந்த இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி அவர்களை ”கொலை செய்தமை” தொடர்பான விபரங்களும் இச்சட்ட ஆவணத்தில் உள்ளன.
நான் பிபிசி தமிழோசையின் மூத்த செய்தி தயாரிப்பாளராக இருந்த காலத்தில், அதிலும் குறிப்பாக 2007 தொடக்கம் 2009 ஆம் ஆண்டு போர் முடிவிற்கு வரும் வரை, ஒரு செய்தியாளர் என்கிற வகையில் கடுமையான போரில் ஈடுபட்டிருந்த அரசு, விடுதலைப் புலிகள் மற்றும் சர்வதேச சமூகத்துடன் நெருங்கிய தொடர்பிலிருக்கும் தேவையும் சூழலும் ஏற்பட்டது. அவ்வகையில் அப்போது பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்ச அவர்களுடன் பேச வேண்டிய சந்தர்ப்பங்கள் பல எழுந்தன. அப்படி பேசிய போது அவர் கூறிய கருத்துக்கள் பிபிசியின் தமிழோசை மற்றும் சிங்கள சேவையான சந்தேஷ்யவில் ஒலிபரப்பாயின. இதை ஏன் இப்போது நினைவுகூருகிறேன் என்பதற்கு காரணங்கள் இருந்தன. அவர் அரிதாகவே ஊடகங்களுக்கு பேசுவார். அதிலும் தொலைபேசி வாயிலாக பேசுவது மிகவும் அரிது. எனினும் எனது தொடர்புகள் மூலம் அவரிடம் பேசு போது அவரிடம் போர் குறித்த கடும்போக்கு தன்மையும், எவ்வகையிலும் இனி சமாதானமோ விட்டுக்கொடுப்போ இல்லையென்றும், விடுதலைப் புலிகளை இல்லாமல் அழித்தொழித்த பிறகே தான் ஓய்வேன் என்றும் கூறியது எனது நினைவில் பசுமையாக உள்ளது.
ஒரு முறை நான் அவரிடம் கேட்டேன்:
“ மிகவும் உக்கிரமாகப் போரை முன்னெடுக்கிறீர்கள், அப்பாவி மக்கள் இதில் சிக்கி உயிரிழக்கின்றனர், மக்களுக்கு அத்தியாவசியத் தேவையான உணவு மற்றும் மருந்துகள் கிடைக்காமல் தடை செய்துள்ளீர்கள், ஊடகவியலாளர்களை சுதீயானமாக செய்தி சேகரிக்கச் செல்வதற்கு அனுமதி மறுக்கிறீர்கள், இவையெல்லாம் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் மீறல் அல்லவா? என்னதான் போர் என்றாலும், அதிலும் ஒரு நேர்மை, நெறிமுறைகள் உள்ளதே, எதிர்காலத்தில் நீங்கள் செய்கிற அட்டூழியங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய சூழல் எழலாம் என்பது உங்கள் சிந்தனையில் இல்லையா?”
அதற்கு அவரது பதில்:
“இங்கு நடக்கும் போர் குறித்து உங்களுக்கு என்ன தெரியும், அங்கே என்ன திருவிழாவா நடைபெறுகிறது, அனைவரும் சென்று பார்ப்பதற்கு.? `பயங்கரவாதிகளுக்கு` ஆதரவாகச் செயல்படும் நீங்கள் இப்படியான கேள்விகளை ஏன் விடுதலைப் புலிகளிடம் கேட்பதில்லை, எமது கொள்கையின்படி பொதுமக்கள் யாரும் உயிரிழப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம், நாங்கள் செய்வது மனிதாபிமான செயல், விடுதலைப் புலி பயங்கரவாதிகளிடமிருந்து அப்பாவி தமிழ் மக்களை பாதுகாப்பாக மீட்டுக் கொண்டுவரவே நாங்கள் போராடுகிறோம். நீங்கள் அபாண்டமாகக் கூறுவது போல் இங்கு எந்த மனித உரிமை மீறல்களும் இடம்பெறவில்லை. எமது துல்லியமான தாக்குதல்கள், பயங்கரவாதிகளின் இலக்குகளை மட்டுமே குறிவைத்து மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்படுகின்றன. புலனாய்வு தகவல்கள் மற்றும் அதியுயர் தொழில்நுட்பங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, சிறப்பான உத்திகள் வகுக்கப்பட்டே செயல்படுத்தப்படுகின்றன. போரில் வெற்றி என்பது மட்டுமே இலக்கு, அங்கு தார்மீக நெறிமுறைகளுக்கு இடமில்லை. எதிர்காலத்தில் எம்மீது எப்படியான விமர்சனங்கள் அல்லது பழி வந்தாலும் அதை எம்மால் எதிர்கொள்ள முடியும். நீங்கள் நடுநிலை மாறாமல் நியாயமான செய்திகளை வெளியிடுங்கள். பயங்கரவாதிகளின் ஊதுகுழலாக செயல்படாதீர்கள்”.
“போர் வலையத்திற்குள் உணவு மற்றும் மருந்துகள் கிடைக்காமல் செய்துள்ளீர்கள் அதன் மூலம் வலிந்து மக்களை மறைமுகமாக கொலை செய்கிறீர்கள் என்கிற குற்றச்சாட்டு உங்கள் மீது உள்ளது, எனது அந்த கேள்விக்கு நீங்கள் இதுவரை பதிலளிக்கவில்லை”?
“அங்கு உணவு மற்றும் மருந்துகளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை. அரசு இயந்திரங்கள் மூலம் அவை அனுப்பப்படுகின்றன. அந்த விஷயத்தில் நாங்கள் ஐ நா, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உட்பட பன்னாட்டு அமைப்புகளுடன் இணைந்து அதை முன்னெடுக்கிறோம். அவை புலி பயங்கரவாதிகளால் கைப்பற்றப்பட்டு மக்களுக்கு கிடைக்காமல் செய்யப்படுகின்றன. நீங்கள் கூறுவதை நான் மறுக்கிறேன். நீங்கள் உண்மையை அறியாமல் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசுவது போலுள்ளது. மக்களுக்கான உணவு மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை பயங்கரவாதிகள் ஏன் பறித்துக் கொள்கிறார்கள் நீங்கள் அவர்களிடம் கேளுங்கள்.”
இப்போது ஐ டி ஜே பி சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் கையளித்துள்ள ஆவணம் 2008 செப்டம்பரில் உதவிப் பணியாளர்களை போர் வலயத்திலிருந்து வெளியேற்றுவதற்கு கோத்தாபய எவ்வாறு முடிவெடுத்தார் என்பதையும், போர் பகுதியில் இடம்பெற்ற மோசமான மனித அவலத்தை உலகிடமிருந்து மறைப்பதற்கு அவரும் அரசு இயந்திரமும் அவ்வாறு திட்டமிட்டு செயல்பட்டது என்பதையும் இவ்வாணம் விளக்கமாகக் கூறியுள்ளது.
போர் வலயத்திலிருந்து உதவிப்பணியாளர்களை வெளியேற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் சபை அலுவலகங்கள் கூட சிறிலங்கா விமானப்படையால் இறுதிக்கட்ட போர்க் காலத்தில் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டன.
போர் வலயத்தில் பெண்களும் பிள்ளைகளும் பால் மாவுக்காகவும் உணவுக்காகவும் வரிசைகளில் நின்றபோது, பீரங்கிகள் மூலம் கடுமையான தாக்குதல்கள் மீண்டும் மீண்டும் நடத்தப்பட்டதால், ஏராளமானவர்கள் உயிரிழக்க வேண்டியதாயிற்று என்று ஐ டி ஜே பி ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தி சிங்கப்பூர் அரசிடம் கையளித்துள்ளது.
கடுமையான பீரங்கி தாக்குதல்கள் போர் வலயத்தில் இடம்பெற்றன என்பதற்கு அப்போது அங்கு பணியாற்றிய அரசை வைத்தியர்கள் பிபிசிக்கு அளித்த பேட்டிகள் சான்றாகும். அவ்வகையில் பல முறை என்னிடமே அவர்கள் அங்குள்ள அவல நிலை மற்றும் தொடரும் தாக்குதல்கள் குறித்து கூறியுள்ளனர்.
இப்படி பலதரப்பிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை பல முறை சரிபார்த்து அதன் உண்மைத்தன்மையை அறிந்துகொண்ட பிறகே அவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்று ஐ டி ஜே பி கூறுகிறது.
”பட்டினிபோடுதல், பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட இதர கொடூரமான குற்றச்செயல்கள் என்பவற்றுக்கு கோத்தபாய உடந்தையாக இருந்தார் என்பதையே இவ்வாறான தகவல்கள் வெளிப்படுத்துகின்றன” என சிங்கப்பூர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட இம்முறைப்பாட்டினை வரைவதில் பங்குவகித்த சட்டவாளர்களில் ஒருவரான அலெக்சாட்ரா லில்லி காதர் கூறியுள்ளார்.
‘நடந்த இடம், யாருக்கு எதிராக, அல்லது யாரால் என்பதையெல்லாம் தாண்டி, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கு கரிசனையை ஏற்படுத்தும் சில குற்றச்செயல்கள் மீது உள்நாட்டிலேயே வழக்குத் தொடர்வதற்கான கடப்பாடு அரசுகளுக்கு உண்டு என்பதையே உலகளாவிய சட்ட அதிகாரவரம்பு என்ற கருத்தியல் கொண்டுள்ளது என்று கூறும் ஐ டி ஜே பி. சிங்கப்பூர் தனது சொந்தச் சட்டங்களைப் பயன்படுத்தி நீதியை நிலைநாட்டவும், சிறிலங்காவில் பல்வேறு சமூகங்களுக்கு எதிராக கொடூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட ஒரு மனிதரிடமிருந்து உலகைப் பாதுகாக்கவும் அந்நாட்டுக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பே இதுவாகும்.
அவ்வகையில் சிங்கப்பூர் தனது ஜனநாயக மற்றும் சட்டரீதியான கடமையை முன்னெடுக்க வேண்டும் என்று அந்நாட்டு சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ள ஆவணம் கோரியுள்ளது. இதேவேளை 2019 ஆம் ஆண்டில், சித்திரவதைக்கு உள்ளாகிய 11 பேர் கலிபோர்னியாவில் கோத்தாபயவுக்கு எதிராக பொது வழக்கு ஒன்றினைப் பதிவுசெய்வதற்கு ஐ டி ஜே பி உதவி செய்திருந்தது. ஆனால் அவர் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு
நடவடிக்கைகளிலிருந்து விலக்களிப்புப் பெற்றார். அவர் தற்போது தன்னுடைய பதவி விலகியுள்ளதாக, ரீதியான சட்ட பாதுகாப்பு அவருக்குப் பொருந்தாது. அவ்வகையில் இதுவே அவருக்கெதிரான முதலாவது குற்றவியல் முறைப்பாடாக உள்ளது என நம்பப்படுகின்றது.