யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன்
மொழியே தெரியாதவர்கூட ஊடுருவும் நிலையிலா இந்தியாவின் கரையோரப் பாதுகாப்பு உள்ளது என்ற கேள்வி மீண்டும் ஒரு முறை எழுந்துள்ளது.
இலங்கையில் இருந்து வெளி நாட்டவர் தமிழ்நாட்டின் கோடியக்கரை ஊடாக இந்தியாவிற்குள் ஊடுருவியதாக இடம்பெற்ற தேடுதலில் போலந்து நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்தாட்டின் கோடியக்கரையில் ஓர் காற்றுப் படகு கடந்த ஞாயிறு (24) ஆம் திகதி கண்டு பிடிக்கப்பட்டதனையடுத்து நாகை மாவட்டம் முழுமையாக தீவிர தேடுதல் இடம்பெற்றுள்ளது.
இதேநேரம் இந்தப் படகில் பயணித்தவர் தமிழ்நாட்டின் கரையை இலாவகமாக அடைந்து தரையிறங்கி இரவு முழுவதும் காட்டில் மறைந்திருந்து பகல்வேளை சென்னைக்கு வழிகேட்டபோதே கிராம மக்கள் அவரைப் பிடித்து தமிழக பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த பலூன் படகின் மூலம் தமிழ் நாட்டிற்குள் வந்தது தான்தான் என்பதனை ஏற்றுக்கொண்டுள்ளார்.
போலந்தில் இருந்து 2019ஆம் ஆண்டு இலங்கை வந்தபோது வெலிமடைப் பகுதியில் மதுபான சாலையில் ஏற்பட்ட தகராறில் ஒருவரைத் தாக்கியதனால் ஏற்பட்ட வழக்கு நடவடிக்கைக்காக கடவுச் சீட்டை நீதிமன்றில் ஒப்படைத்துள்ளதாகவும் அதனாலேயே தமிழ் நாட்டிற்கு தப்பி வந்த்ததாகவும் கூறியுள்ளதோடு இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து புறப்பட்டே இந்தியாவை அடைந்ததாகவும் அவர் இந்தியப் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
இவர் மீது தற்போது இலங்கையில் 3 வழக்குகள் நிலுவையில்ல உள்ளதாக தற்போது கூறப்படுகின்றது. இருப்பினும் 2019இல் இலங்கைக்கு ஏன் வந்தார் என்பது தொடர்பில் கண்டறியப்படவில்லை.
தற்போது தமிழக காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த போலந்து நாட்டவரின் பெயர் வாடிஸ்லாவ் பிரான்சிஸ்கிச் என்றும் அவர் 39 வயதானவர் என்றும் அறியப்படுகிறது. இலங்கையில் கைதுச் செய்யப்பட்டு பிணையில் இருந்த அவர் நிதி நெருக்கடி மற்றும் இதர காரணங்களுக்காக தமது நாட்டிற்கு திரும்பிச் செல்லும் நோக்கில் இந்தியா சென்றதாகவும் அங்கிருந்து போலந்து செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
எனினும், தனியொரு நபராக அவர் மட்டுமே இந்தியாவிற்கு வந்தாரா அல்லது உடன் வேறு யாராவது இதில் ஈடுபட்டிருந்தார்களா என்கிற விசாரணை தமிழக பொலிசாரால் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதி தொடங்கி இலங்கையின் கடல்பரப்பு வரை அண்மைக் காலத்தில் போதைப் பொருட்கள் கடத்தலுக்கான ஒரு முக்கியப் பாதையாக இருந்து வருவது சர்வதேசளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்தும் இலங்கை வழியாகவோ அல்லது இலங்கையர்கள் துணையுடனோ தொடர்ச்சியாக இந்திய – இலங்கை கடற்பரப்பில் கோடிக்கணக்கன ரூபாய்கள் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அவ்வகையில், இப்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த போலந்து நாட்டவருக்கும் போதைப் பொருட்கள் கடத்தல் தொழிலுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் புலனாய்வு செய்யப்படுகிறது.
அதேவேளை இலங்கையில் இருந்து மர்மப்படகு ஒன்று தமிழ்நாட்டிற்குள் வருகின்றது என்பதனை இந்தியாவின் தமிழக உளவுத் துறையினர் 22 ஆம் திகதி நள்ளிரவே அறிந்து விட்டதாகவே கூறப்படுகின்றது. அதனால் கடலிலே மேலதிக படைகளை இறக்கி தமது பிரசன்னத்தைக் காட்ட விரும்பாத அதிகாரிகள் பொலிசாரை மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தி அவர்கள் அவ்வாறு உசார் நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தனர். இருப்பினும் ஒரு விடயத்தில் கோட்டை விட்டனர் என்று இப்போது கவலையும் கண்டனமும் எழுந்துள்ளது. அதாவது ராடர் நிலையம் உசார்படுத்தப்பட்டதனால் அவர்களின் தகவல் உடன் கிடைக்கும் என எதிர்பார்த்தனர்.
எனினும் 23 ஆம் திகதி காலை ராடர் நிலையத் தகவல் கிட்டாத போதும் கிடைத்த தகவலில் ஏதோ ஒன்று உள்ளது என உணர்ந்து தேடுதல் கைவிடப்படவில்லை. 24ஆம் திகதியாகியும் ஏதும் அகப்படவில்லை என்பதனால் கிடைத்த தகவல் தவறான தகவலோ என சிந்திப்பதற்கிடையில் இந்த மர்மப் படகு கரை ஒதுங்கியுள்ள தகவல் கிடைத்ததும் பொலிசார் உசார் அடைந்தனர். இத்தனை பிரிவினரும் விழிப்பாக இருந்தும் ஓர் படகு எப்படி கரை சேர்ந்தது என ஒருபுறம் விசாரணை இடம்பெற வந்திறங்கியது யார், எந்த நாட்டவர் என தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதன்போதே படகில் இருந்த பொருட்களை ஆய்விற்கு உட்படுத்திய சமயம் இவை கண்டிப்பாக இலங்கை மீனவர்களினதோ அல்லது ஈழ அகதிகளினதாகவோ இருக்க வாய்ப்பே இல்லை என்ற உடனடி முடிவிற்கு சென்றதனால் சென்னைவரை தகவல் பறந்தது. அங்கிருந்து உத்தரவுகள் கடுமையாகவே பிறப்பிக்கப்பட்டன. இதனால் இராமேஸ்வரம், நாகை, தூத்துக்குடி கரைநோரங்களில் பணியாற்றும் சகல பிரிவு பொலிசாரும் பம்பரமாக சுழன்றனர்.
இந்த சமயமே சந்தேகத்திற்கு இடமான வெளிநாட்டவர் ஒருவர் சென்னைக்கு செல்ல வழி கேட்டபோது மக்களால் மடக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் பொலிசாருக்கு சென்றபோது இந்தப் படகில் வந்தவரோ என்று எண்ணி விரைந்த பொலிசாரின் நம்பிக்கை வீண்போகவில்லை.
இவ்வாறு அகப்பட்டவனிடம் சகல பிரிவு அதிகாரிகளும. துருவியபோதும் அவரும்ம் மசிந்ததாகவும் தெரிவில்லை. இதே நேரம் அகப்பட்டவர் இந்தியாவின் நிரந்தரமான ஒரு பகைமை நாட்டவரும் அல்ல என்ற காரணத்தினால் சந்தேகத்தின் அடிப்படையில் மட்டும் வழக்கை முன்னெடுக்க தமிழ்நாடு பொலிசார் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதேநேரம் இலங்கையில் 3 வழக்கு இருக்கும் ஓர் குற்றவாளி என்பதனால் உண்மையை உரைக்கின்றார் எனவும் நம்பவில்லை. அவரை மிகவும் சந்தேகக் கண்ணோடு அவதானித்த தமிழக பொலிசார் அவரை நீதிமன்றில் நிறித்தியதை அடுத்து தற்போது 8ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளர்.
இதேநேரம் தற்போது தமிழ்நாட்டிற்குள் போலந்து நாட்டவர் ஊடுருவியது போன்று 4 ஆண்டுகளிற்கு முன்பும் துருக்கியைச் சேர்ந்த இருவர் ஊடுருவினர். அடுத்த சில தினங்களில்இந்தியப் பிரதமர் தமிழ்நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இந்த ஊடுருவல் ஏதும் பின்னணி இருக்குமா என்பது ஒரு பக்கமும் இருக்க, இந்திய இலங்கை கடற்பரப்பின் ஊடாக வெளிநாட்டினர் இந்தியாவிற்குள் நுழையக் கூடிய வகையில் இந்தியாவின் கடலோரப் பாதுகாப்பு பலவீனமாக உள்ளதா என்கிற கேள்விகள் இப்போது எழுந்துள்ளன.