-நக்கீரன்
கோலாலம்பூர், ஜூலை 28:
மழைவிட்டும் தூவானம் தொடர்கின்ற கதையாக, மலேசிய இந்து சங்கத்தை மீண்டும் குழப்பம் சூழ்ந்துள்ளது.
மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் என்பவர், சங்கத்தின் உறுப்பினர்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாமல் மறைமுகத் தேர்தல் மூலம்தான் தெரிவு செய்யப்படுகிறார்.
அதன்படி இந்து சங்கத்தின் மேநாள் தேசிய செயலாளர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன், கடந்த ஞாயிற்றுக்கிழமை, 2022 ஜூலை 24-இல் 17-க்கு 10 என்னும் பெரும்பான்மையில் இந்து சங்க தேசியத் தலைவராகத் தேர்வானார். அப்போது பதவி விலகிய 13 ஆண்டு காலத் தலைவர் மோகன்ஷான், இப்போது மீண்டும் தலைவர் பதவியைக் கைப்பற்ற குறுக்கு வழியை நாடுகிறார் எனத் தெரிகிறது.
பதவி வீழ்த்தப்பட்ட அவர், தான் இந்து சங்கத்தில் வம்படிக்க விரும்பாமல், மத்திய செயலவையில் இருந்தும் நல்ல முறையில் விலகுவதாக அறிவித்துவிட்டு, கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இதை, மலேசிய இந்து சங்கத்தின் 45-ஆவது ஆண்டுக் கூட்டத்தில் திரண்டிருந்த இந்து சங்க மாநிலத் தலைவர்கள், உறுப்பினர்கள் அனைவரும் அறிவர். இது குறித்த காணொளியைக்கூட நாட்டிலுள்ள அனைவரும் கண்டனர்.
இந்த நிலையில் இந்து சங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் & வழக்குரைஞர் நிறுவனம், மோகன் ஷானுக்கு 2022 ஜூலை 26-ஆம் நாள் தேதியிட்ட ஒரு அறிக்கையை அனுப்பி இருக்கிறது. அந்த அறிக்கையை, மோகன் ஷான், கடந்த இரு நாட்களாக தன் ஆதரவாளர்களுடன் பகிர்ந்து கொள்வதுடன், தான் மீண்டும் ஒரு மத்திய செயலவையைக் கூட்ட இருப்பதாகவும் அதில் தன்னை மீண்டும் தலைவராக தேர்ந்தெடுத்து இன்னொரு முறை தனக்கு வாய்ப்பு அளிக்கும்படி பரப்புரை மேற்கொள்வதாகவும் மலேசிய இந்து சங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த அறிக்கையில், 2020 ஜூலை 20-இல் திருத்தப்பட்ட மலேசிய இந்து சங்க சட்ட விதி 11.1.4-ஐ கடந்த ஞாயிற்றுக்கிழமை, சன் வே அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயத்தில் நடத்தப்பட்ட ஆண்டுக்கூட்டம் பின்பற்றவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மலேசிய இந்து சங்க சட்ட விதி 11.1.4-இன்படி இந்து சங்க மாநிலத் தலைவர்களும் மத்திய செயலவையின் இணை உறுப்பினர்கள் என்பதால், அவர்களும் வாக்களித்துதான் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அந்த விதி தெரிவிக்கிறது.
அதனால், மத்திய செயலவையின் 27 உறுப்பினர்கள் மட்டும் புதிய தலைவரை தேர்ந்தெடுத்தது செல்லாது. எனவே, தாங்கள் இன்னமும் மோகன் ஷானைத்தான் இந்து சங்கத்தின் அதிகாரப்பூர்வத் தலைவராகக் கருதுவதாகவும், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தலைவர் தேர்வு செல்லாது எனவும் அதனால் புதிய மத்திய செயலவைக் கூட்டத்தை மோகன்ஷான் நடத்தவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக் கூட்டத்தை நடத்தியதே மோகன்ஷான்தான்; அதைக் கண்காணித்தது வழிநடத்தியதும் மலேசிய இந்து சங்கத்தால் சட்ட ஆலோசகக்காக நியமிக்கப்பட்ட இதே வழக்கறிஞர் நிறுவனம்தான்.
எல்லாம் முடிந்து 2 நாட்களுக்குப்பின், இந்த வழக்கறிஞர் நிறுவனம் எதற்காக இப்படி கேட்கிறது? யாருக்காக மறைமுகமாக கேட்கிறது என்ற ஐயமெல்லாம் எழுகிறது.
இந்து சங்கத்திற்கு ஆலோசனை சொல்ல நியமிக்கப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு இந்து சங்கத்தின் நிருவாக நடைமுறையில் தலையிட தகுதியும் உரிமையும் உள்ளதா? மோகன் ஷான் தலைமையில் நடைபெற்ற ஆண்டுக் கூட்டத்தை கண்காணித்த இந்த வழக்கறிஞர் நிறுவனத்திற்கு இரண்டு நாள் கழித்து புதிய ஞானோதயம் எப்படி வந்தது?
இந்து சங்க மாநிலத் தலைவர்களில் ஒருவர், புதியத் தலைவர் தேர்வின்போது தானும் வாக்களிக்க வாய்ப்பளிக்கவில்லை என்று புகார் செய்ததாகவும் அவர் யாரென்று சொல்லமாட்டேன் என்றும் வழக்கறிஞர் நிறுவனத்தின் சார்பில் ஒருவர் இந்து சங்க பகாங் மாநில பொறுப்பாளர் ஒருவரிடம் விளக்கம் அளிக்கும் குரல்பதிவு இந்தச் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
அது, உண்மையானால், அந்த மாநிலத் தலைவர் ஆண்டுக் கூட்டத்திலேயே கேட்டிருக்க வேண்டும், மோகன் ஷான், பதவி விலகுவதாக அறிவித்துவிட்டு அரங்கத்தைவிட்டு வெளியேறிய சமயத்திலாவது கேட்டிருக்க வேண்டும்; இப்படி எல்லாக் கட்டங்களையும் கடந்துவிட்டு, சம்பந்தப்பட்ட மாநிலத் தலைவர் தனியாக-கமுக்கமாக வழக்கறிஞரை நாடவேண்டிய காரணம் என்ன?
மேலும் இந்து சங்கத்திற்கு சட்ட ஆலோசனை வழங்கும் இந்த வழக்குரைஞர் நிறுவனமும் புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்காக புதிய மத்திய செயலவைக் கூடியபோதே சட்டவிதியை சுட்டிக்காட்டி நெறிப்படுத்தி இருக்க வேண்டும். அந்தக் கடமையில் இருந்தும் தவறிவிட்டு, இரண்டு நாள் கழித்து மீண்டும் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கேட்பது குறித்து இந்து சங்க உறுப்பினர்களிடையே குழப்பமும் வியப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்து சங்க உறுப்பினர்களின் முன்னிலையில் பதவி விலகுவதாக மோகன்ஷான் அறிவித்தது செல்லாது என்றும் எழுத்துப்பூர்வமாக பதவி விலகல் கடிதம் வேண்டும் என்றும் கேட்க ஓர் ஆலோசனை நிறுவனத்திற்கு தகுதி உள்ளதா? அப்படி எழுத்துப்பூர்வ பதவி விலகல் கடிதம் வேண்டும் என்றால், அதை மோகன் ஷானிடம் கேட்டுப் பெறுவதைவிட்டுவிட்டு, கூட்டமே செல்லாது என்பதால் இந்து சங்கத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
எல்லாவற்றையும் எழுத்துப்பூர்வமாகக் கேட்கும் இவர்கள், புகார் அளித்த மாநிலத் தலைவரிடமும் எழுத்துப்பூர்வமாக புகரைப் பெற்றுள்ளாரா? அப்படி பெற்றிருந்தால், அதை பகிரங்கமாக அறிவிக்காமல் புகார் அளித்தவர் யாரென்று தெரிவிக்கமாட்டேன் என்று கூறும் வழக்கறிஞர் நிறுவனத்தின் பேச்சாளரிடம் வெளிப்படைத்தன்மை இருக்கிறதா?
சங்க ஆண்டுக் கூட்டத்தின்போது, ஆயிரக் கணக்கானோர் முன்னிலையில் மோகன்ஷான் பதவி விலகினார். அத்துடன், அதே ஆயிரக் கணக்கானோர் முன்னிலையில் மத்திய செயலவையில் இருந்தும் விலகுவதாக அவரே அறிவித்ததை ஏற்க முடியாதென்று சொல்லும் இந்த வழக்கறிஞர் தரப்பினர், ஆயிரக் கணக்கான இந்து சங்க உறுப்பினர்களின் முடிவுக்கு மாறாக செயல்படுவதுடன், மோகன் ஷானை மீண்டும் பதவியில் அமர்த்த மறைமுகமாக செயல்படுகின்றனரா என்றும் பரவலாக பேசப்படுகிறது.
மோகன்ஷான் தரப்பினர் என்னதான் குயுக்தியாக சிந்தித்தாலும் செயல்பட்டாலும் தங்க கணேசன்தான் இந்து சங்கத்தின் புதிய தலைவர் என்பதை, இந்து சங்க மாநிலத் தலைவர்களும் வட்டாரப் பேரவையினரும் பல்லாயிரக் கணக்கான உறுப்பினர்களும் நிலைநாட்டுவார்கள் என்றுதான் இந்து சங்கத்தின் உண்மையான கள நிலவரம் தெரிவிக்கிறது. 13 ஆண்டுகள் தலைவராக இருந்தது போதாமல், மீண்டும் பதவி மோகத்துடன் குறுக்கு வழியை நாடும் மோகன்ஷானின் முயற்சி பலிக்காது என்றேத் தெரிகிறது.
இந்தச் செய்தியுடன், மோகன் ஷான் ஆண்டுக் கூட்டத்தில் பேசிய காணொளி, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் நிறுவனத்தின் பேச்சாளர் இந்து சங்க பகாங் மாநிலப் பொறுப்பாளர் ஒருவருடன் பேசும் குரல் பதிவு ஆகியவை இணைக்கப்பட்டுள்ளதால் அவற்றையும் காணவும் கேட்கவும் மறக்காதீர்கள்.
இதற்கிடையில், இந்து சங்க புதிய தலைவர் தங்க கணேசன் தரப்பினரும் சட்ட ஆலோசனையை நாடுவதாகத் தெரிகிறது; எல்லாவற்றுக்கும் மேலாக, இப்பொழுது இருக்கிற 12 மாநிலத் தலைவர்களில் கெடா, நெகிரி செம்பிலான் மாநிலத் தலைவர்களைத் தவிர மற்ற அனைவரும் தங்க கணேசனை ஆதரிப்பதாகவும் தெரிவதால், தங்க கணேசன் அணி வெற்றி அணியாகாவேத் தொடர்வதற்கான சாத்தியம் இந்து சங்கத்தில் நிலவுகிறது.
இதற்கிடையில், வரும் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 31-ஆம் நாள் மீண்டும் மத்திய செயலவையைக் கூட்டி, அதில் தான் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான முயற்சியில் மோகன்ஷான் ஈடுபட்டுள்ளார்.
பொருத்திருந்து பார்ப்போம் ஞாயிற்றுக்கிழமை இந்து சங்க தலைமையகத்தில் என்ன நடக்கிறதென்று..!