எமது யாழ்ப்பாணச் செய்தியாளர்
வடக்கு மாகாணத்தின் இரு மூத்த செயலாளர்களை மாகாணத்திற்கு வேண்டாம் என ஆளுநர் ஜீவன் தியாகராஜா கடிதம் வழங்கியதைக் கண்டுத்து ஜனாதிபதியின் செயலாளருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் அவசர கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்.
இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த வடக்கு மாகாணத்தின் மூத்த செயலாளர்களான இ.இளங்கோவன் மற்றும் செந்தில்நந்தனன் ஆகியோருடன் விவசாயப் பணிப்பாளர் சிவகுமார் ஆகிய மூவரையும் ஜீவன் தியாகராஜா தூக்கியெறிந்தமை ஓர் தவறான முன்னுதாரணம் எனவும் குறிப்பாக மாகாணத்தில் உள்ள மூத்த அமைச்சரான தனது ஒப்புதல்கூடப் பெற்றுக்கொள்ளாது நிர்வாக நடைமுறைக்கு முரணாக மேற்கொண்ட இந்த விடுவிப்பு உத்தரவுகளை உடன் இரத்துச் செய்யப்பட வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியின் செயலாளருக்கு அவசர கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
”ஒரேதடவையில் அதிக அதிகாரிகளை மாகாணத்திற்கு வெளியே அனுப்புவது மாகாணத்தின் பணியை பாதிக்கும் செயல் என்பதோடு ஏனைய அதிகாரிகளையும் மனதளவில் பாதிக்கும் செயலாகவும் அமையும் அத்தோடு நாடளாவிய சேவை உத்தியோகத்தர்களை இடமாற்றம், விடுவிப்பு என்பன தொடர்பில் ஆளுநர் பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு பரிந்துரைக்க மட்டுமே முடியுமே அன்றி நேரடியாக இடமாற்ற உத்தரவு கடிதம் வழங்க முடியாது” என்பதனையும் கருத்தில்கொள்ளுமாறு தொலைபேசியிலும், எழுத்திலும் கூறியுள்ளார்.
இவற்றை உடன் கவனத்தில் எடுப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் தொலைபேசி ஊடாக பதிலளித்துள்ளதனால் ஆளுநர் ஜீவன் தியாகராஜாவா நிர்வாக நடைமுறையா என்ற போட்டியின் உச்சம் ஆளும் தரப்பில் இடம்பெறுவதனால் இதன் முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேநேரம் மேலும் இரு மூத்த அரச அதிகாரிகள் குறித்த விடயத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கும் கொண்டு சென்று ஆளுநர் ஜீவன் தியாகராயாவின் உத்தரவை இரத்து செய்யுமாறு பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக பணியாற்றும் அந்த அதிகாரிகளுக்கு வடக்கு மாகாணத்தில் வழங்கப்பட்ட நியமனங்களை ஆளுநர் என்ற வகையில் ஜீவன் தியாகராஜா 2022-07-26 ஆம் திகதிய கடிதம் முலம் 2022-07-27 அன்று உத்தியோகத்தர்களின் வீடுகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இவ்வாறு அனுப்பிய கடிதத்தில் வியாழன் (28) முதல் மாகாணத்தில் இருந்து விடுவிக்கப்படுவதாக ஆளுநரால் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண கல்வி மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர்களாக இருந்த இருவரும் இந்த ஆண்டின் ஜனவரி மாதமே தற்போதைய அமைச்சுகளிற்கு இடமாற்றப்பட்ட நிலையில் மீண்டும் மாகாணத்திற்கு வெளியில் தூக்கி எறியப்படுவதனால் ஏதும் பழிவாங்கும் செயலாக இருக்கும் என்றே கருதப்படுகின்றது உள்ளூர் மக்களும் இதர அதிகாரிகளும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த விடயம் தறபோது ஜனாதிபதியின் செயலாளருக்கு அமைச்சர் மற்றும் மூத்த அதிகாரிகள் ஊடாக சென்றிருப்பதனால் தீர்வு கிட்டாதுவிடின் தொழிற்சங்கப் போராட்டம் வரையில் கொண்டு செல்லப்படும் என பெயர் கூற விரும்பாத மூத்த நிர்வாக சேவை அதிகாரி ஒருவர் உதயனிடம் குறிப்பிட்டார்.