கடற்றொழில் அமைச்சரும் அதிகாரிகளும் அலட்சியம் என குற்றச்சாட்டு
மன்னார் நிருபர்
30-07-2022
மன்னார் மாவட்டத்தில் சுமார் 40 நாட்களுக்கு மேலாக மண்ணென்னை விநியோகம் இடம் பெறாத நிலையில் மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாத காரணத்தினால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
எனினும் கடற்றொழில் அமைச்சரோ, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளோ, குறித்த விடயத்தில் கரிசனை காட்டுவதாக தெரியவில்லை என பள்ளிமுனை மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நாட்டில் தொடர்ச்சியாக பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்ற நிலையில் எரிபொருள் பிரச்சினை காரணமாக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட முடியாத நிலையில் தாங்களும் தங்கள் குடும்பங்களும் வறுமையில் வாடுவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
1000 ரூபாய் கொடுத்து எரிபொருள் பெற்று மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டாலும் உரிய லாபம் கிடைப்பதில்லை என தெரிவிக்கின்றனர் மீனவர்கள்.
இந்த நிலையில் அண்மைய நாட்களாக வாகனங்களுக்கு டீசல் மற்றும் பெட்ரோல் விநியோகம் இடம் பெறுகின்றது.
ஆனால் மண்ணெண்ணெய் விநியோகம் தொடர்பில் எரிபொருள் அமைச்சரோ கடற்றொழில் அமைச்சரோ ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே மீனவர்களுக்கு உரிய எரிபொருள் விநியோகம் சீராக இடம் பெறாத பட்சத்தில் கற்பிட்டி தொடக்கம் கொழும்பு வரை உள்ள மீனவர்கள் படகுகளை வாகனங்களில் ஏற்றி கொழும்பில் உள்ள அமைச்சின் அலுவலகத்தை முற்றுகையிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்றும் ஏனைய மீனவர் வீதிகளில் இறங்கி போராட வேண்டி வரும் எனவும் மன்னார் மீனவ சமாச செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.