வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலய ஆடிவேல் திருவிழா எதிர்வரும் 12ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது. கதிர்காமம் தலத்திற்கு அடியார்கள் காட்டு வழியாக பாதயாத்திரை செல்வது பன்னெடுங்காலமாக இடம்பெற்று வருகின்றது.
உகந்தமலை தலத்திலிருந்து கதிர்காமத்திற்குச் செல்லும் காட்டுப்பாதை கடந்த ஜுலை மாதம் 22 ஆம் திகதி திறக்கப்பட்டிருந்தது. உகந்தைமலையிலிருந்து கதிர்காமம் வரை 56 மைல்கள் தூரம் ஆகும். உகந்தமலை முருகன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான பாதயாத்திரை தற்போது கதிர்காமத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. முதலாவதாக வாகூரவெட்டை என்னுமிடத்துக்குச் சென்றதையடுத்து அங்கு வண்ணாத்திக்கிணறு என்ற பழைய கிணறு உள்ளது. இங்கு இரவு வேளையில் பஜனை, பக்திப் பாடல்கள்பக்தர்களால் இசைக்கப்படுகின்றன. மறுநாள் காலையில் அவ்விடத்தில் கற்பூரமெரித்து தேவாரம்பாடி தமது பயணத்தை ஆரம்பிக்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து குமுக்கன் ஆறு, குமுனையை அடைகின்றனர். அங்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாள் தங்குவார்கள். அங்கு ஒரு அம்மன் கோயில் உள்ளது. கோயிலுள்ள அம்மனை ‘கவளத்தம்மா’ என்று அழைப்பார்கள். அந்த வழியால் செல்பவர்கள் தாம் உண்ணும் உணவில் ஒரு ‘கவளம்’ உணவை அந்த அம்மனுக்கு படைப்பதால் ‘கவளத்தம்மா’ எனப் பெயர் வந்தது. அங்கு ஆலயத்தின் பின்புறமாக ஒரு பெரிய மரம் நிற்கின்றது. அவற்றில் கொத்துகளை கட்டி வழிபடுவார்கள்.
அடியார்கள் மோதகம், அவல், கடலை, பொங்கல் படைத்து பூசை செய்து வழிபட்டு பின்னர் கற்பூரம் எரித்து தேவாரம் பாடி குமுக்கன் ஆற்றை கடந்து சென்று நாவலடியை அடைகின்றனர்.
நாவலடியிலே ரொட்டி சுட்டு வைரவரை வழிபாடு செய்வதுடன், நாகதம்பிரானுக்கும் பொங்கல் பொங்கிப் படைத்து வழிபட்டு காலையில் தமது இடத்தில் கற்பூரம் எரித்து தேவாரம் பாடி பயணத்தை ஆரம்பிக்கின்றனர்.
தொடர்ந்து நீண்ட பயணம் தொடரும். இதனால் தொலையாப்பளை வட்டை என்று அந்த இடத்துக்கு பெயர் வழங்கப்படுகின்றது. இவ்வெளி கழிந்தவுடன் ‘வியாள’ யால என்று சொல்லப்படுகின்ற இடத்தினை வந்தடைகின்றனர். இங்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் தங்கியிருப்பார்கள். இங்கு தங்குபவர்கள் பாரம்பரியமாக மரத்தினால் வேல் செய்து அதனை ஆற்றில் நீராட்டி ஆற்றோரம் பந்தலமைத்து அங்கு அவ்வேலை எடுத்து வந்து வைத்து அவல், மோதகம், பொங்கல் படைத்து பஜனை செய்து வழிபட்டு இரவுப்பொழுதை கழிப்பர். காலையில் தமது இடத்தில் கற்பூரம் எரித்து பயணத்தினை ஆரம்பிக்கின்றனர்.
தொடர்ந்து வள்ளியம்மன் ஆறுபாலம் எனும் இடத்தை அடைந்து சற்று இளைப்பாறிய பின்னர், கதிரமலை கண்ட இடத்தை அடைந்து அங்கு இருக்கின்ற வேலை வழிபட்டு பின்பு கட்டகாமத்தை வந்தடைகின்றனர். இங்கு யானைகள் மிகுந்த இடம் இருப்பினும் கதிர்காமக்கந்தனின் பெருவருழினால் பக்தர்களுக்கு மனத்தைரியம் கிடைத்து விடுகின்றது. சிலர் மதியம் உணவு உண்டு விட்டு தொடர்ந்து செல்வார்கள். இவ்வாறு நடந்து சென்று பின்னர் வீரச்சோலை அல்லது பிள்ளையாரடி எனும் இடத்தினை அடைந்து இரவு தங்குவர். மறுநாள் காலையில் தமது இடத்தில் கற்பூரம் எரித்து தேவாரம் பாடி பயணத்தினை தொடர்கின்றனர். செல்லுகின்ற போது அரோகரா அரோகரா என்ற கோசத்துடன் காவடிச்சிந்து பாடிச் செல்வர். அவர்கள் பக்திப்பரவசத்தோடு கதிர்காமத்தினை அடைகின்றனர். அங்கு சென்றதும் மாணிக்கக்கங்கையில் நீராடி மாணிக்கப்பிள்ளையாரையும் கதிர்காமக் கந்தனையும் வழிபாடு செய்து, ஏனைய கோயில்களை வழிபாடு செய்வர். மறுநாள் கதிரமலை, செல்லக்கதிர்காமம் சென்று வழிபடுகின்றனர்.
இத்தகைய சிறப்புமிக்க பாதையாத்திரையின் மகிமைகளும் அனுபவச் சிறப்புக்களும் ஏராளம் ஆகும். அதிகமான பக்தர்களின் புதிய அறிமுகம், ஒன்றாக இருந்து உணவு சமைத்து உண்ணல், ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பாங்கு, உடல் சுகாதாரம், ஒற்றுமை சமத்துவம், பஜனை, கூட்டுப் பிரார்த்தனைகள்என்பவை கதிர்காமம் யாத்திரையில் கிடைக்கும் சிறப்பான அனுபவங்களாகும். மேலும் காடுகள், குளங்கள், ஆறுகள், களப்புக்கள், வெளி, மலை, மணல், சேறு, தென்றல், குளிர்காற்று, கச்சான் காற்று, மழை, சுட்டெரிக்கும் வெயில், பனி என பல அனுபவங்களை அனுபவித்தே இத்தகைய பாதயாத்திரையை மேற்கொண்டு அடியார்கள் கதிர்காமக்கந்தன் சன்னிதானத்தை அடைந்து திருவருள் பெறுகின்றனர்.
நாராயணபிள்ளை நாகேந்திரன்