கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இலங்கையை சேர்ந்த மீனவர்கள் இரண்டு பேர் 16 மணிநேரம் நீந்தி வேதாரண்யம் அருகே கரை சேர்ந்துள்ளனர். இலங்கை பலாலி என்ற பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு பைபர் படகில் ஜனார்தனன், ஜெசிகரன் ஆகிய இரு மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நேற்று மதியம் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று கடல் சீற்றம் மற்றும் காற்றின் காரணமாக படகு நிலைதடுமாறி கடலில் கவிழ்ந்து விட்டது.
படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த 2 மீனவர்களும் செய்வது அறியாது உயிருக்கு போராடியுள்ளார். அப்போது படகில் இருந்த பிளாஸ்டிக் கேன் கடலில் மிதந்துள்ளது. அந்த கேனில் டீசல் இருந்துள்ளது டீசல் எடுத்து கடலில் ஊற்றிவிட்டு மிதவையாக கேனை பிடித்து கொண்டு உயிருக்கு போராடி 16 மணி நேரம் நீந்தி வேதாரண்யம் அடுத்த சிறுதலைகாடு கடல் கரை பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளனர். இதைக்கண்ட அப்பகுதி மீனவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் இரண்டு இலங்கை மீனவர்களையும் உணவு அளித்து காவல் நிலையம் கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.