சர்வகட்சி அரசு ஒன்றை அமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சர்வகட்சி அரசு தொடர்பான தமது கட்சியின் கருத்துக்களை ஜனாதிபதியிடம் விரிவாக முன்வைத்தனர்.
அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள 22வது அரசமைப்புத் திருத்தம் மற்றும் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டம் தொடர்பிலும் ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர் குழுவிற்கு விளக்கமளித்தார்.
குமார வெல்கம தலைமையிலான புதிய இலங்கை சுதந்திரக் கட்சி மற்றும் அத்துரலியே ரதன தேரர் உள்ளிட்ட விஜய தரணி தேசிய சபையும் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியது.
ஜனாதிபதியினால் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது.
சர்வகட்சி அரசை அமைப்பதற்கான ஆளும் அரசுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான பேச்சு நேற்று ஆரம்பமாகிய நிலையில் இன்று இரண்டாம் கட்ட பேச்சு நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் பிரதமர் தினேஷ் குணவர்தனவும் கலந்துகொண்டார்.