கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி
பொருளாதார பீடம் கொழும்பு பல்கலைக்கழகம்
ரோம் நகரம் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது பிடில் வாசித்த நீரோ மன்னனைப்போல புதிதாகப் பதவிக்கு வந்த அரசு தலைவர் பிடுங்கவேண்டிய ஆணிகளைப் பிடுங்காமல் ஆர்ப்பாட்டக் காரர்களை பொறிவைத்தப் பிடிப்பதிலே அதி தீவிர ஆர்வம் காட்டுவது வெளிப்படையாகவே தெரிகிறது. அத்தோடு சிறிது காலம் தற்காலிகமாக மறந்து போயிருந்த புலிப்பூச்சாண்டி திரும்பி வந்திருக்கிறது. ஆர்ப்பாட்டக் காரர்களின் பின்னணியில் புலி ஆதரவு சக்திகள் இருந்து செயற்பட்டதாக புதிய கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆக, நாட்டின் பொருளாதாரம் சேணம் இழுக்கின்ற நிலையிலும் வழமைபோல சரத் வீரசேகர போன்ற இனவாதிகள் இனவாதத்தை தூண்டி அதில் குளிர் காயும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. ஆர்ப்பாட்டங்களின் போது அரச சொத்துகள் சேதமாக்கப்பட்டதால் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் கமராக்ககண்களின் முன்னிலையில் ஒலிவாங்கிகளைப் பிடித்திழுத்து சிதைத்த குற்றவாளிகள் கதிரைகளை உடைத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட காவாலிகள்; செங்கோலைப் பறித்தோடி அரச சொத்துகளைச் சிதைக்க முற்பட்டவர்கள் இன்னும் அதே பாராளுமன்றத்தில் தானே இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக அல்லவா தீவிர நடவடிக்கை முதலில் மேற்கொள்ள வேண்டும். பாராளுமன்றச் சிறப்புரிமை காவாலித்தனத்திற்கும் விலக்களிப்பும் பாதுகாப்பும் வழங்குமா? இதன் கருத்து அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவர்களை சும்மா விட்டுவிட வேண்டும் என்பதல்ல. நாட்டில் சட்டவாட்சி நடைமுறைப்படுத்தப் படுவதையும் சட்டததின் முன் அனைவரும் சமம் என்பதையும் பாராளுமன்றத்திலிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்பதாகும்.
மறுபுறம், இலங்கை ஆசியாவில் மட்டுமல்ல உலகிலேயே ஆச்சரியம் என்பதை அண்மையில் உலக நாடுகள் விழிபிதுங்கப்பார்த்தன. வேதாளத்தைத் திரும்பத்திரும்ப பிடித்து தோளில் போட்டுக்கொண்டு வந்த விக்கிரமாதித்தனைப்போல தொடர்ச்சியாக பல தேர்தல்களிலே மக்களால் தெளிவாக நிராகரிக்கப்பட்டு தோல்விகண்ட ஒருவர்; சுதந்திரம் பெற்ற இலங்கையில் ஆட்சிப்பொறுப்பேற்ற பலம் வாய்ந்த ஒரு கட்சியைச் சிதறடித்து சின்னாபின்னமாக்கி படு தோல்வியடையச் செய்த பின்னரும் அதன் தலைமைப் பொறுப்பை தகுதிவாய்ந்த ஒருவருக்கு விட்டுத்தரும் மனநிலை இல்லாத ஒருவர் கடந்த பாராளுமன்றத்தேர்தலிலே தனது தொகுதி வாக்காளர்களாலே தூக்கி வீசப்பட்ட ஒருவர் அந்தக் கட்சி பெற்ற ஒரே ஒரு தேசியப்பட்டியல் உறுப்பினர் இடத்திற்கு வேறொருவரை நியமிக்காமல் தானே பின்கதவால் சென்று ராஜபக்ஷக்களின் நம்பிக்குரியவராக மாறி அவர்களது அவசரத் தேவையின் பொருட்டு பிரதமராகவும் நியமிக்கப்பட்டு சகுனி தாயக்கட்டைகளை உருட்டியது போல அரசியல் காய்களை நகர்த்தி நாட்டின் உயரிய கதிரையிலும் சென்று அமர முடியும் என்றால், சிலர் அதனை அன்னாரின் அதிர்ஷ்டம் என்கிறார்கள் வேறுசிலர் அவரது நரிமூளையின் பெருஞ்சாதனையாகவும் விடா முயற்சிக்குக் கிடைத்த பரிசாகவும் அதனை சித்தரிக்க விரும்புகின்றனர்.
ஆனால் 1831 ஆம் ஆண்டில் இலங்கையில் ஆரம்பித்த ஜனநாயக பாரம்பரியம் இன்னும் பத்து வருடங்களில் அதன் இருநூறு ஆண்டுப் பூர்த்தியைக் கொண்டாட உள்ள நிலையில் இலங்கையில் நடைமுறையில் உள்ள ஜனநாயகம் முகிழ்ந்து முதிர்ச்சியடைவதற்குப் பதிலாக வெம்பி வெதுங்கி அழுகிப் போய் முடைநாற்றம் எடுக்கும் குட்டையாக மாறிவிட்டது என்பதற்கு இந்தச் சம்பவமே நல்ல சான்று.
சட்டரீதியில் அந்த நியமனம் செல்லுபடியானது தான் என்பதிலே மாற்றுக் கருத்துக் கிடையாது. ஆனால் அவருக்கு மக்களின் ஆணை கிடையாது என்றால் அது இலங்கையின் ஜனநாயகத்தில் உள்ள மாபெரும் ஓட்டை என்பதை விட வேறென்ன சொல்ல முடியும்? அவர் தான் சட்டப்படியும் அரசியலமைப்பின் படியும் நடப்பதாக உறுதியளிக்கிறார். ஆனால் தனக்கு மக்களின் ஆணை இல்லை என்பதை அவரது மனசாட்சி அறியாதா? அப்படிப்பட்ட ஒருவருக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கின்றனர் என்றால் தமது வாக்காளர்கள் வழங்கிய ஆணைக்கு மாறாகச் செயற்பட்டார்கள் என்று தானே பொருள்? இப்படி வேறு ஒரு நாட்டில் நடக்க வாய்ப்பில்லை என்பதால் இது உலக அதிசயம் தான்.
அம்மான் கதிரையில் அமர்ந்த உடனேயே வீசிய வீச்சில் வந்தது அவசரகாலச்சட்டம். ஆர்ப்பாட்டக் காரர்கள் ஆண் பெண் பேதமின்றி அடித்து உதைத்து வெளியே வீசப்பட்டார்கள். வீடு வீடாகத் தேடிப் போய்ப்பிடித்து உள்ளே தள்ளப்பட்டார்கள். ஒருவர் விமானத்தின் உள்ளே இருந்து இழுத்தவரப்பட்டார். இதற்கு முன்னரும் இருவேறு சந்தர்ப்பங்களில் ராஜபக்ஷக்கள் அவசரகாலச் சட்டத்தைக் கொண்டுவந்தார்கள். ஆனால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எழுந்த அழுத்தங்கள் காரணமாக உடனடியாகவே அவற்றை நீக்கிக் கொள்ள நேரிட்டது. ஆனால் அம்பியாக இருந்தவர் அந்நியனாக மாறி அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாய்ந்த போது அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் ஏன் அந்நியன் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாமல் போனது என்று பலர் புருவங்களை உயர்த்துகிறார்கள்.
உண்மையில் ஐக்கிய அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் இங்கிலாந்து உள்ளிட்ட மேற்குலகும், ஐ எம் எஃப், உலக வங்கி போன்றனவும் இலங்கையின் புதிய அடாவடித்தனங்களை உடனடியாகக் கண்டித்தன ட்வீட் செய்திகளையும் பகிர்ந்தன. வெளிநாட்டுத் தூதுவர்களையும் பிரதிநிதிகளையும் சந்திப்புக்கு அழைத்து கறாறான செய்தியொன்றும் வெளிப்படுத்தப்பட்டது. சமூக ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை நம்பி ட்வீட் பதிவளை வெளியிட வேண்டாமென்றும் அரசாங்கத்திடம் அதுபற்றி சரிபார்த்த பின்னர் கருத்து வெளியிட வேண்டும் என்றும் அறிவிக்கப்ட்டது.
நாட்டின் பொருளாதாரம் படுபாதாளத்தில் விழுந்து மக்கள் அன்றாட வாழ்க்கையை வாழமுடியாமல் போராடிக்கொண்டிருக்கிறார்கள் அரச கஜானா வற்றிப் போய் விட்டது. பணத்தை அச்சடித்தே அரசாங்கத்தின் உயிர் ஓடுகிறது. டொலர் கையிருப்புகள் தீர்ந்து போய் நாடு துந்தனா அடிக்கிறது. மக்கள் மீது தாக்குதல்களை நடத்துவதை நிறுத்தி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேசம் ரணிலுக்கு அறிவுறுத்தியது.
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு 2017இல் மீள வழங்கிய ஜி எஸ் பி+ சலுகைகளுக்கான நிபந்தனைகளை நினைவு படுத்தி அவற்றை இலங்கை தொடர்ந்தும் பின்பற்றும் என எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளது. 2009இல் யுத்த முடிவில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்களையடுத்து ஐரோப்பிய ஒன்றியம் மேற்படி சலுகைகளை இடை நிறுத்தியது. இப்போதும் இலங்கை தான்தோன்றித்தனமாக செயற்பட்டால் அன்று ஏற்பட்ட நிலை மீண்டும் இடம் பெறலாம் என்ற மறைமுக எச்சரிக்கையாகவம் இதனைக் கருதலாம். இலங்கையின் ஏற்றுமதிகளில் சுமார் 32 சதவீதம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இங்கிலாந்துக்கும் செல்கின்றன. இங்கிலாந்து நீங்கலாக 21 சதவீதம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குச் செல்கிறது. ஜி எஸ் பி + என்பது இலங்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. ஐரோப்பிய ஒன்றியம் நினைத்தால் இலங்கைக்கு சிறந்த பாடம் புகட்ட முடியும். அதே போல இலங்கையின் ஏற்றுமதிகளில் 25 சதவீதம் செல்லும் ஐக்கிய அமெரிக்காவும் ஜி எஸ் பி சலுகைகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது. ஆனால் யாருக்கும் கொடுத்த வாக்கை இலங்கை காப்பாற்றவில்லை.
அண்மையில் இந்தியாவின் மிகப்பிரபலமான ஒரு கல்விநிறுவன விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமெரிக்காவின் புகழ்பூத்த பெண் ராஜதந்திரிகளில் ஒருவரும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவராண்மையின் (USAID) தற்போதைய நிர்வாகியுமாகிய சமந்தா பவர் இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க ஆரம்பித்த உடனேயே அண்டைநாடாகிய இந்தியா துரிதமாகச் செயற்பட்டு, 3.5 பில்லியன் டொலர்கள் வழரையிலான நிதியுதவியைச் செய்து, இலங்கைப் பொருளாதாரம் மேலும் சரிவடைவதைத் தடுத்த நிறுத்த மேற்கோண்ட காலத்தின் பாற்பட்ட உதவியை சிலாகித்தப் பேசியதுடன், இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடிகளுக்கு சீனாவிடமிருந்து பெற்ற உயர் வட்டியுடனான பெருத்த உட்பட்டுமானக்கடன்களை முக்கிய காரணமாகச் சுட்டிக்காட்டியிருந்தார். உடனடியாகவே சீன வெளிவிவகார அமைச்சு அதற்கு மறுப்பறிக்கை விட்டு அமெரிக்காவின் வட்டிவீதக்கொள்கைகளும் பொருளாதாரக் கொள்கைகளுமே இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணம் என்று பழியைத்திருப்பி விட முயன்றிருந்தது.
ஆகவே புதிதாக, புதிய மொந்தையில் அதே பழைய புளித்துப்போன கள் ஊற்றப்பட்டு பரிமாற எற்பாடுகள் நடக்கின்றன. தனது பதவிக்காலம் முடியம் வரை பாராளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது என்ற உறுதிமொழி பென்ஷன் கிடைக்காமல் போய்விடுமோ என்று பயந்த உறுப்பினர்களுக்கு ஆறுதல் தரும். ஆர்பாட்டக்காரர்கள் மீது ஆரம்பத்திலேயே அந்நியன் பாய்ச்சல் நடத்தப்பட்டபோது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவான இலங்கையின் பிரபலமான பிக்கு ஒருவர் கோட்டாவின் காலத்தில் கூட இப்படி நடக்கவில்லையே என்று அங்கலாய்த்தார். அவரச கால சட்டத்தை அறிமுகப்படுத்தி ஆர்ப்பாட்டக் காரர்களை தனித்தனியே பிடித்து உள்ளே போட்டுவிட்டால் ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்திவிடலாம் என்று ஆட்சியாளர்கள் நினைப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அவ்வாறு ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்திவிட்டால் சுமுகமாக அதிகாரத்தடன் ஆளலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் மேற்குலகம் தனிமனித சுதந்திரம் மனித உரிமைகள் நல்லாட்சி ஊழல் ஒழிப்பு என்பவற்றையெல்லாம் உதவிக்கான நிபந்தனைகளாக முன்வைப்பது அரசாங்கத்தைக் கடுப்பேற்றி விட்டிருக்கிறது. எனவே தான் ஆர்ப்பாட்டங்கள் காரணமாகத்தான் ஐ எம் எஃபின் உதவிகளும் கிடைக்காமல் காலதாமதமடைவதாக அவர்கள் மீது பழி திருப்பி விடப்படுகிறது.
புதிய ஆட்சியில் தேவையான உதவிகளைச் செய்ய உலக வங்கி உடனே செய்ய தயாராக இருப்பதாக ஊடகங்களில் செய்தி கசியவிடப்பட்டது.
கடந்த ஜூலை 24 ஆம் திகதி ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்ட உலக வங்கி ஊடககங்களிலே ஊதப்பட்டவை பொய்யென்றும் இலங்கை ஏற்றுக்கொள்ளத்தக்க பொருளாதாரக் கொள்கைச் சீர்திருத்தங்களை முன்வைக்காத வரையில் இலங்கைக்கு புதிய நிதி உதவிகள் எதையும் வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என அறிவித்தது. 28 அந் திகதி வெளியிட்ட இன்னொரு அறிக்கையில் இதே விடயம் மீள வலியுறத்தப்பட்டு ஏனைய அபிவிருத்திப்பங்களார்களுடன் இணைந்து செயற்படுவதாகவும் இலங்கைக்கு ஏற்கெனவே வாக்களிக்கப்படடுள்ள நிதிகளில் ஒரு பகுதியை மட்டுமே மருந்து, உணவு, எரிபொருள், பாடசாலை மதிய உணவு மற்றும் பாதிக்கப்படும் நிலையில் உள்ள மக்களுக்கான நிதிக் கொடுப்பனவுகளுக்காக திருப்பி விட்டிருப்பதாகவும் அந்த நிதிகள் முறையாக செலவிடப்படும் விதம் பற்றிக் கண்காணிக்கப்படுவதாகவும் கூறியது.
இவ்வாறு இலங்கைக்கு உதவக் கூடிய நட்புநாடுகளுடன் தேவையற்ற விதத்தில் முரண்பட்டுக்கொண்டு ஐ எம் எஃப், உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களை ஏமாற்ற முனைந்து ஆடுகளைத்தை இலங்கைக்கு எவ்விதத்திலும் சாதகமற்ற நிலைக்கு தள்ளிச்;செல்கின்றனர். இப்போது சீன உதவிக்காக விஜயம் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிகிறது. அதேவேளை சீனாவின் கப்பல் ஒன்று எதிர்வரும் 11ஆம் திகதி வரவுள்ளதாகத் தெரிகிறது. இக்கப்பலின் வரவு தொடர்பாக இந்தியாக தனது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. ஆபத்பாந்தவனாக காலத்தின் போது உதவிய இந்தியாவின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் தரப்படுமா அல்லது கடன் மீளமைப்ப தொடர்பாக தயவு தேவைப்படும் சீனாவின் பக்கம் சாய்வார்களா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். எதிர்வரும் நாட்களில் அரசியல் களம் சூடுபிடிக்கலாம் இலங்கையின் பொருளாதாரம் மழையில் நனைந்த கோழியைப் போல மூலையில் குந்தியிருந்தும் நடுங்கலாம்.
ஆனால் ஒன்று மட்டும் உறுதியாத் தெரிகிறது. புதிய ஆட்சியில் பாலும் தேனும் பாயும், கேட்டவுடன் கற்பக விருட்சம் போல டொலர் மழை கொட்டும் என்பதெல்லாம் அவ்வளவு எளிதாக நடக்கக் கூடியதல்ல