யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன்
போர் முடிந்து 13 ஆண்டுகளுக்கும் மேலானாலும், இன்னும் வடக்கு – கிழக்கிலுள்ள தமிழர் தாயகத்தில், அதிலும் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் இன்னும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வலிந்து அபகரிக்கப்பட்டு, இன்னும் அல்லல்படும் உரிமையாளர்களிடம் அளிக்கப்படாமல் உள்ளது. அதற்கு ஆயிரம் காரணங்கள் கூறப்படுகின்றன.
தொடர்ந்து காணி அபகரிப்பு மற்றும் வலிந்த சிங்கள குடியேற்றம் அதன் மூலம் குடிப்பரம்பலை மாற்றியமைப்பது ஆகியவற்றை முன்னெடுக்க அரசிடம் இருக்கும் `பிரம்மாஸ்திரம்` தொல்லியல் பூமி எனும் மந்திரச் சொல். தொல்லியல் பூமி எப்படி, எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது, அதற்கு வரலாற்று ரீதியாக அறிவியல் சான்றுகள் உள்ளனவா, அப்படியே இருந்தாலும் அவை தமிழர் கலாசாரத்துடன் தொடர்புடையதா, தமிழ் பௌத்தர்களின் எச்சங்கள் கொண்ட பகுதியாக இருக்குமோ என்று ஆயிரம் கேள்விகள்.
`தொல்லியல் கொள்ளை` இப்போது சர்வசாதாரணமாகிவிட்டது. வீடு கட்டும் இடங்களில் அரைவட்டக்கல், கால்வட்டக்கல், செங்கல், கூழாங்கல் என்று எதையாவது சொல்வது, தமிழர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஆனைமுகன் அமர்ந்திருக்கும் அரச மரத்தடி, முருகனின் வாகனமான மயில் சுற்றி திரியும் இடங்கள், சிவனின் வசிப்பிடங்களில் ஒன்றான மயான பூமி போன்ற இடங்களின் புதிய அடையாளம் தொல்லியல் பூமி. பழுத்த அரச மரத்தின் இலைகள் ஆடிக் காற்றில் உதிர்ந்து பரந்து பல இடங்களில் விழுந்தால் அதுவும் கூட தொல்லியல் பூமி என்று கருதப்படும் என்கிற அச்சம் இப்போது தமிழ் மக்கள் மனதில் பற்றிக்கொள்ள ஆரம்பித்துள்ளது. எனவே வடக்கு கிழக்குப் பகுதியில் தொல்லியல் இடங்கள் என்று கூறப்படுபவை அதிகரிப்பதில் ஆச்சரியம் இருக்க முடியாது.
50 ஆண்டுகளில் தமிழர்களின் பூர்வீக இடங்களை இரட்டிப்பாக ஆக்கிரமித்தமையினாலயே தொல்லியல் திணைக்களத்தை தமிழர்கள் தொல்லைத் திணைக்களமாக பார்க்கின்றனர்.
வடக்கு மாகாணத்தில் தமிழர்களின் பூர்வீக நிலங்களில்1962ஆம் ஆண்டு 130 இடங்களை மட்டுமே உரிமை கோரிய தொல்பொருள் திணைக்களம் தற்போது 251 இடங்களை உரிமை கோருகின்றது.
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் கருதப்படும் பிரதேசங்களை தொல்லியல் திணைக்களம் தமது ஆளுகைக்குள் கொண்டுவந்தாலும் அவை பௌத்த சின்னங்களாகவே பேனப்படுகின்றது என்பதே தமிழர்களின் நீண்டகால குற்றச் சாட்டாகவும் உள்ளது.
இந்தக் குற்றச் சாட்டுகளை மறுக்கும் திணைக்களம் தொன்மைச் சின்னங்களை பேனிப் பராமரிப்பது ஒன்றே திணைக்களத்தின் பிரதான பணி என்கின்றனர்.
இவ்வாறு 251 இடங்களை உரிமைகோரும் திணைக்களத்திடம் 144 இடங்களிற்கு இன்று வரை வர்த்தமானி அறிவித்தல் கூட கிடையாது.
இதனால் தமிழ் மக்களின் சந்தேகத்தில் ஒரு நியாயப்பாடு இருப்பதாகவே கருதப்படுகின்றது. இதேநேரம் 1962ஆம. ஆண்டு 130 இடங்களை உரிமை கோரிய திணைக்களத்திடம் 2021ஆம் ஆண்டில்கூட அந்த எண்ணிக்கையிலான இடங்களிற்குரியl வர்த்தமானி கிடையாது என்ற மிகப் பெரும் உண்மையும் உள்ளது.
கிழக்கு மாகாண தொல்லியல் செயலணிக்கு 14 பெரும்பான்மை இனத்தவர்களை நியமித்தபோதும் சிறுபான்மையினர் எவரையும் நியமிக்க எந்த நடவடிக்கையினையும் அரசு எடுக்கப்படவில்லை. கிழக்கு மாகாணம் அதிகளவுக்கு தமிழர்களைக் கொண்டதாக இருக்கின்ற போதிலும், இந்தச் செயலணிக்கு ஒரு தமிழர் நியமிக்கப்படவில்லை என்பதையிட்டு, தமிழ் அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன. இதேநேரம் கிழக்கு செயலணியில் கண்டிப்பாக ஓர் தமிழரை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன் எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உறுதிமொழி வழமையான உறுதிமொழியாகிவிட்டது. அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தற்போது மௌனமாகிவிட்டார்.
தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகளின் மூலம் குறிப்பிட்ட சில இடங்களிற்குள் செல்ல முடியாது ஒரு இனத்தவர்கள் அல்லது ஒரு மதத்தவர்கள் தடுக்கப்படுகின்றபோதும் இன்னுமோர் இனத்தவர்கள் மட்டும் எதையும் செய்யலாம் என்ற நிலமையும் தோற்றுவிக்கப்படுகின்றது என்ற கருத்து சிறுபான்மையினத்தவர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. இந்தப் பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள்தான் இதற்குக் காரணம். தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகள் தமிழ் மக்களுடைய இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் உள்ளது என தமிழ்க் கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைப்பதற்கும் பல காரணங்கள் உள்ளன. இதற்கு திருகோணமலையில் இடம்பெற்ற வழக்கு ஒன்றே நல்ல உதாரணம்.
வடக்கு மாகாணத்தில் 2020ஆம் ஆண்டு இறுதி வரையில் 251 தொல்லியல் சின்னங்களை உரிமை கோரும் தொல்லியல் திணைக்களம் அதில் 108 சின்னங்களிற்கு மட்டுமே வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருக்கின்றது. எஞ்சிய 143 சின்னங்களிற்கும் வர்த்தமானி அறிவித்தல் கிடையாது. இதிலே யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்த திணைக்களத்தின் கீழ் 109 இடங்கள் உள்ளதாக தற்போது கூறுகின்றபோதும் 57 இடங்களிற்குமட்டுமேவர்த்தமானிஅறிவித்தல்உள்ளது. எஞ்சிய 52 இடங்களிற்கும் வர்த்தமானி அறிவித்தல்கிடையாது. இதேபோன்று
கிளிநொச்சி மாவட்டத்தில் 21 இடங்கள் குறித்த திணைக்களத்தின் கீழ் உள்ளபோதும்அவற்றில்8 இடங்களிற்குமட்டுமேவர்த்தமானிஅறிவித்தல்உள்ளது. எஞ்சிய13 இடங்களிற்கும்வர்த்தமானிஅறிவித்தல் இல்லை என்பதோடு இந்த 8 இடங்களிற்குமான வர்த்தமானி அறிவித்தல்கூட 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதியே வெளிவந்துள்ளது.
இதேபோன்றே வவுனியா மாவட்டத்தில் உள்ள 43 இடங்களில்8 இடங்களிற்கும் , மன்னார் மாவட்டத்தின் 25 இடங்களில் 14 இடங்களிற்கு மட்டுமே வர்த்தமானி வெளியாகியுள்ள அதே நேரம், முல்லைத்தீவு மாவட்டத்தின் 53 இடங்களில் 23 இடங்களிற்கே திணைக்களம் வசம் வர்த்தமானிஅறிவித்தல் உள்ளது. இங்கே மற்றுமோர் முக்கிய அம்சமாக தமது சின்னம் எனக் கூறும் திணைக்களத்திடம் வடக்கில் 63 சின்னங்கள் குறித்து தேவையான ஆவணங்கள் திணைக்களத்திடம் இல்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் 109 சின்னங்களில் 38 இடங்களிற்கும். கிளிநொச்சிமாவட்டத்திலே 4 இடங்களிற்கு இடத்தின் வரைபட அளவுகளோ அல்லது ஆவணங்கள் எவையும் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொல்லியல் திணைக்களத்தின் சின்னங்களைப் பேணி வரலாற்றை பாதுகாப்பதே திணைக்களத்தின் முக்கிய பணியெனக் கூறினாலும், சில இடங்களின் வரலாற்றை திரிவுபடுத்துவதே இந்த திணைக்களம்தான் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி்.சிறிதரன் தெரிவிப்பதனையும் ஏற்கவேண்டியுள்ளது.
அதற்கான உதாரணமாக நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை உதாரணம் காட்டுகின்றார். யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நெடுந்தீவில் வரலாற்றை பாதுகாக்க எனக் கூறி தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடம் எனக் குறிப்பிடும் தொல்லியல் திணைக்களம் வரலாற்றை திரிபுபடுத்துகின்றது என்பதுதான்பிரதானமான மறுக்க முடியாத குற்றச்சாட்டு.
நெடுந்தீவு வெடியரசன் கோட்டைக்குமட்டும்இதுவரை 3 தடவைகள் தொல்லியல் திணைக்களம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது. இடத்தின் வரலாற்றுத் தொன்மையை பாதுகாப்பதே தொல்லியல் திணைக்களத்தின் முக்கியமான பணியாக காணப்படுகின்றபோதும் தொல்லியல் திணைக்களமே வரலாற்றை மாற்றுகின்றது என்ற குற்றஞ்சாட்டு இங்கே உண்மையாகின்றது.
“வெடியரசன் கோட்டை”என்றசரியானபெயருடன்2007-02-23 அன்று வர்த்தமானி வெளியிடப்பட்ட திணைக்களம், பின்பு இதே இடத்தை 2011-12-30 அன்று “தூப”என்னும் பெயரில் வர்த்தமானி பிரசுரித்தனர். பின்பு3வது தடவை 2020-11-28ல் இதேதிணைக்களம் “துறவிகள்மடம்” எனவர்த்தமானி அறிவித்தல் பிரசுரித்தது. அவ்வாறானால் இந்த திணைக்களம் வரலாற்றை பாதுகாக்கின்றதா அல்லது திரிவுபடுத்துகின்றதா என்று எழுப்பும் கேள்விக்கு விடை தேட முடியவில்லை.
மன்னார் மாவட்ட நீதிமன்றக் கட்டிடத் தொகுதி தமது திணைக்கள ஆளுகைப் பிரதேசத்திற்குள் வருவதனால் அதனை அகற்றித் தருமாறு திணைக்களம் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் திகதி மாவட்டநிர்வாகஅதிகாரிகளிடம்கோரிக்கைவிடுத்திருந்தது.
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், சுற்றுலா அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை, மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள்,பொலிசார் அடங்கியகுழுவினர் மன்னார்பகுதியில்உள்ளகோட்டைமற்றும. அதனைச் சூழவுள்ள பகுதிகளை சுற்றுலாப் பகுதியாக மாற்றுவது தொடர்பில் ஆராய்ந்ததோடு அது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்தனர்.
இதன்போதே கருத்து தெரிவித்த தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், மன்னார் கோட்டை தொல்லியல் அடையாளமாக 1983ஆம் ஆண்டே வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு விட்டது இவ்வாறு வர்த்தமானி வெளியிடப்படும் சமயம் கோட்டையில் இருந்து 400 மீற்றர் தூரம் வரையில் திணைக்களத்தின் ஆளுகைப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிவிக்கப்பட்ட பின்பு இப் பிரதேசத்தில் பல வீடுகளும் திணைக்களங்களும் அமைக்கப்பட்டுள்ளபோதும் தொல்லியல்த் திணைக்களத்திடம் எந்தவொரு அனுமதியும் பெறப்படவில்லை. எனவே இந்த 400 மீற்றர் பரப்பை தற்போது 3 வலயங்களாக பிரித்து பார்க்கின்றோம். அதாவது 70 மீற்றர் முதலாவது வலயமாகவும், 150 மீற்றர் வரையில் 2ஆம் வலயமாகவும் பிரிக்கப்பட்டதோடு எஞ்சிய பகுதி 3ஆம் வலயமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் முதலாம் வலயத்திற்குள் வரும் கட்டுமானங்கள்அனைத்தையும் முழுமையாக அகற்றப்பட்டே ஆக வேண்டும் . 2ஆம், 3ஆம் வலயங்கள் கோட்டைப் பக்கம் முதல்பக்கம் அகற்றித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது முதலாவது வலத்திற்குள் குறிப்பாக 40 மீற்றர் தூரத்திலேயே பொலிஸ் நிலையம் இருப்பதோடுமுதலாவது வலயத்திற்குள் சிறைச்சாலை, பள்ளிவாசல் உட்பட8 வீடுகளும் அகற்ற வேண்டும். எனத் தெரிவித்ததோடு இரண்டாம்வலயமும் அதன் அண்டிய பகுதியிலும் சுற்றுலாத்தளம் அமைந்த பகுதிகள் இவ்வாறே அகற்றப்பட வேண்டும். இதனால் வீடுகள் தப்பித்தாளும் நீதிமன்றக் கட்டிடமும் அகற்றப்பட வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
இதன்போது அதிகாரிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர். வடக்கு, கிழக்கு மாகாணத்தில் அதிக இடங்களை உரிமை கோரும் தொல்லியல் திணைக்களம் அது தொடர்பில் தமது சட்டத்தை மீறியதாக நீதிமன்றங்களை நாடிய போதும் தற்போது முதல் தடவையாக வடக்கு, கிழக்கு மாகாணத்தில் ஓர் நீதிமன்றத்தினையும் உரிமை கோருகின்றனர்.
வரலாற்றை பாதுகாத்து ஆவணமாகவும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய முக்கிய திணைக்களம் தொல்லியல் திணைக்களம், இருந்தபோதும் இந்த திணைக்களத்தின் பணியோ தொல்லியல் திணைக்களம் என்றாலே ஓர் தொல்லையான திணைக்களம் என தமிழர்கள் கருதுகின்றனர்.