இந்த வாரத்துக்குள் மட்டும் காலி முகத்திடலில் இரண்டு ஆண்களின் பிணங்கள் கரையொதுங்கி உள்ளன.அரகலய போராட்டம் ஆரம்பமானதிலிருந்து இதுவரையிலும் ஆறு உடல்கள் இவ்வாறு கரை ஒதுங்கி உள்ளன.
“எமது நாட்டின் பொலிஸார், புலனாய்வுப்பிரிவினர் இணைந்து ஜனாதிபதி மாளிகையில் கழிவறையில் சிறுநீர் கழித்தவரைக்கூட கைதுசெய்துள்ளனர். அத்தகைய திறமைவாய்ந்தவர்களே பொலிஸ் பிரிவில் காணப்படுகின்றனர். எனினும் எமது நாட்டு மக்கள் கொழும்பு காலிமுகத்திடலில் சடலமாக மீட்கப்படும் போது அந்த சடலங்கள் யாரினுடையது என்பதை அடையாளம் கண்டுகொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது”என்று கூறியிருக்கிறார் ரவி குமுதேஷ்.சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் அவர். சில நாட்களுக்கு முன் கொழும்பில் நடந்த ஊடக சந்திப்பில் அவ்வாறு கூறியுள்ளார்.
கோட்டா கோகம கிராமம் அமைந்திருக்கும் அதே கடற்கரையில் இவ்வாறு பிணங்கள் ஒதுங்குகின்றன. இது முதலாவது விடயம்.
இரண்டாவது விடயம்,அண்மை வாரங்களில் தென்னிலங்கையில் ஆங்காங்கே துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன. இதில் சிலர் கொல்லப்பட்டும் இருக்கிறார்கள். யார் யாரை கொல்லுகிறார்கள் என்பது பொதுமக்களைப் பொறுத்தவரை மர்மமாக உள்ளது.
மூன்றாவது விடயம்,அரகலய போராட்டக்காரர்கள் ஆங்காங்கே உதிரி உதிரியாகக் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். சட்டம் ஒழுங்கை மீறிய குற்றச்சாட்டுகளின் பெயரில் அவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
நாலாவது விடயம்,கொழும்பில் எரிவாயு வினியோகம் சீராகிவிட்டது.எரிபொருள் தட்டுப்பாடாக உள்ளது, எனினும் வரிசைகளில் நின்றால் கிடைக்கும் என்ற நம்பிக்கை தோன்றியிருக்கிறது. எரிபொருளுக்காக வரிசைகளில் நிற்பதிலேயே நாளின் ஒரு பகுதி கழிக்கிறது.
ஐந்தாவது விடயம்,அரகலயவின் பின்னணியில் நிற்பதாக கருதப்படும் முன்னிலை சோஷலிச கட்சியின் அலுவலகம் சோதனையிடப்பட்டுள்ளது. அக்கட்சியின் செயற்பாட்டாளர்கள் பின் தொடரப்படுகிறார்கள்.
ஆறாவது விடயம்,யாப்பில் 22A திருத்தத்துக்கான புதிய வரைவு அமைச்சரவையின் அனுமதி பெற்று இருக்கிறது. இதன்மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்ற ஒரு தோற்றம் உருவாகின்றது.
ஏழாவது விடயம்,சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை எதிர்க்கட்சிகளோடு இணைந்து உருவாக்குவதற்குத் தான் தயார் என்று ரணில் அறிவித்திருப்பது.
மேற்கண்ட எழு விடயங்களையும் தொகுத்துப் பார்த்தால் ஒரு தெளிவான சித்திரம் நமக்கு கிடைக்கும். ரணில் விக்கிரமசிங்க அரகலயவை இருமுனைகளில் முறியடிக்க முயற்சிக்கின்றார். முதலாவது அரகலயவுக்கு காரணமாக இருந்த எரிபொருள் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டை நீக்குவது. அரகலயவின் பிரதான கோரிக்கையான முறைமை மாற்றத்துக்கான ஆரம்ப அடிகளை எடுத்து வைப்பது. இரண்டாவது அச்சுறுத்தலான கைது மற்றும் ஏனைய நடவடிக்கைகளின் மூலமும் செயற்பாட்டாளர்களை பின்வாங்கச் செய்வது. இவ்விருமுனை நடவடிக்கை மூலம் ரணில் விக்கிரமசிங்க அரகலயவை குறிப்பிடத்தக்க அளவுக்கு சோரச்செய்து விட்டார் என்றே கூற வேண்டும். கோட்டா கோகமவில் நூற்றுக்கும் குறைவானவர்களே காணப்படுகிறார்கள். ஏற்கனவே அங்கு காணப்பட்ட முன்னணி செயற்பாட்டாளர்கள் பலரும் தலைமறைவாகி வருவதாக கருதப்படுகிறது. மேலும் யூ.என்.பிக்கு ஆதரவான செயற்பாட்டாளர்கள் காலி முகத்திடலைவிட்டு வெளியேறி இருப்பதாகவும் அவதானிக்கப்படுகிறது. சில கூடாரங்களில் மிகச் சிலர் மட்டுமே தங்கியிருப்பதாகவும் தெரிகிறது
முன்னணியில் காணப்பட்ட செயற்பாட்டாளர்கள் சட்டம் ஒழுங்கை மீறிய குற்றச்சாட்டுகளின் பெயரில் கைது செய்யப்படுகிறார்கள்.உலகில் எந்த ஒரு தன்னெழுச்சி போராட்டமும் சட்டம் ஒழுங்குக்கு உட்பட்டு நடக்காது. போராட்டம் என்றாலே சட்ட மறுப்புத்தான். சட்ட மறுப்பாகத் தோன்றிய மக்கள் எழுச்சிகளை சட்டத்தின் தராசில் வைத்து நிறுக்க முடியாது. ஆனால் ரணில் விக்ரமசிங்க அதை சட்டத்தின் தராசில் வைத்து நிறுக்கத் தொடங்கி விட்டார். அதற்கு காரணம் எதிர்ப்பு இல்லை என்பது. உள்நாட்டிலும் கைது நடவடிக்கைகளுக்கு எதிராகக் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய எதிர்ப்பு காட்டப்படவில்லை.கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்பாட்டம் பேரெழுச்சியாக அமையவில்லை.அடுத்த சில தினங்களில் நாடு பூராகவும் ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்களும் கவன ஈர்ப்பு போராட்டங்களாக சுருங்கிவிட்டன. இவைதவிர “பார் அசோசியேசன்” – அதாவது சட்டத்தரணிகள் அமைப்பு கைது செய்யப்படும் செயற்பாட்டாளர்களை பாதுகாப்பதற்காக ஒருங்கிணைந்த, அரசுக்கு சவாலாக அமையத்தக்க நடவடிக்கைகளில் இறங்கவில்லை என்பதும் இங்கே ஒரு காரணம்.
கொழும்பு மைய சட்டத்தரணிகள் அமைப்பு யு.என். பிக்கு ஆதரவானது என்ற ஒரு கருத்து உண்டு.தவிர அரகலயவோடு நின்றது பெருமளவுக்கு இளம் சட்டத்தரணிகள் என்று அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோட்டபய அகற்றப்படும் வரையிலுமான போராட்டக் களத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களைப் பாதுகாப்பதில் சட்டத்தரணிகளின் சங்கம் பெரிய பங்களிப்பை நல்கியது. ஒருமுறை காலி வீதியில் போலீஸ் வாகனத் தொடரணியொன்று காணப்பட்டது. போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கத்தோடு அவ்வாறு அந்த வாகனத்தொடரணி நிறுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது.அதற்கு எதிராக சட்டத்தரணிகள் சங்கம் ஆட்சேபணை தெரிவித்தது.பின்னர் அந்த வாகன பேரணி நீக்கிக் கொள்ளப்பட்டது. அப்படித்தான் படைத்தரப்பிடமிருந்து போராட்டக்காரர்களை பாதுகாப்பதற்காக சட்டத்தரணிகளும் மதகுருகளும் கைகளை கோர்த்தபடி மனிதச் சங்கிலி அமைத்து நின்ற காட்சிகளும் உண்டு. கோத்தாபய அகற்றப்படுவதற்கு முன்புவரை அரகலய செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் சட்டத்தரணிகள் நூற்றுக்கணக்கில் நீதிமன்றங்களில் குவிந்தார்கள். சிலசமயங்களில் 300க்கும் குறையாத சட்டத்தரணிகள் அவ்வாறு திரண்டு நின்று செயற்பாட்டாளர்களை பாதுகாத்தார்கள்.
ஆனால் இதுவெல்லாம் கோத்தா அகற்றப்பட முன்னரான கதைகள்.ரணில் வந்த பின்னரான கதைகள் வேறு.போராட்டத்தில் முன்னணியில் நின்ற மதகுரு அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். பல செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சட்டத்தரணிகள் சங்கம் அவர்களை பாதுகாப்பதற்கு முன்னரைப் போல தீவிரமாக செயல்படுவதாகத் தெரியவில்லை.கைது செய்யப்படுகிறவர்கள் வெவ்வேறு நீதிமன்றங்களில் பரவலாக ஆஜர் செய்யப்படுவதனால் சட்டத்தரணிகள் ஒன்று திரள முடியவில்லை என்றும் ஒரு இளம் சட்டத்தரணி தெரிவித்தார்.
மேலும்,கைது செய்யப்படுவோரில் தனிப்பட்ட மற்றும் பொதுச் சொத்துக்களை நாசம் செய்த குற்றச்சாட்டுக்கு இலக்கானவர்களின் விடயத்தில் நீதிமன்றங்களில் வாதிடுவதற்கு சில இளம் சட்டத்தரணிகள் மட்டுமே தயாராக காணப்படுவதாகவும் ஒரு தகவல் உண்டு. அவை அரகலயவின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்படாத வன்முறைகள் என்று கருத்தும் ஒரு பகுதி சட்டத்தரணிகளும் உண்டு. அதாவது சட்ட மறுப்பை சட்டக்கண் கொண்டு பார்ப்பது. எதுவாயினும் கைது நடவடிக்கைகள் தொடரும் பின்னணியில் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயல்பாடுகள் போதாமல் உள்ளன என்பதே உண்மை.
சட்டத்தரணிகள் மட்டுமல்ல, எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மத்தியிலும் குறிப்பாக சஜித் அணியினர் மத்தியிலிருந்தும் மேற்படி கைது நடவடிக்கைகளுக்கு எதிராக வலிமையான எதிர்ப்புக் காட்டப்படவில்லை. இந்த விடயத்தில் எல்லா அரசியல்வாதிகளும் ஒரு வர்க்கமாக நின்று சிந்திக்கிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களை அழித்த, வீடுகளை எரித்த நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாப்பதற்கு எதிர்க்கட்சிகளின் மத்தியிலும் பெரியளவு ஆர்வம் காட்டப்படவில்லை.
உள்நாட்டு சக்திகள் மட்டுமல்ல கொழும்பில் உள்ள மேற்கு நாட்டு தூதரகங்களும் இந்த விடயத்தில் ரணில் விக்கிரமசிங்கவை பலவீனப்படுத்த விரும்பவில்லை என்றே தெரிகிறது.கோத்தாபய ஆட்சியில் இருந்தவரை படையினரின் நடவடிக்கைகளையும் போலீசாரின் நடவடிக்கைகளையும் கூர்மையான வார்த்தைகளால் விமர்சித்து வந்த தூதரகங்கள் இப்பொழுது அவ்வாறு ருவிற்றர் பதிவுகளை இடுவதில்லை என்றும் ஒப்பிடப்படுகிறது.
ஆகமொத்தம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அரகலயவுக்கு உள்நாட்டிலும் ஆதரவு குறைந்து வெளிநாட்டிலும் ஆதரவு குறைந்து ஏறக்குறைய தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நிலை தோன்றியிருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. சித்தாந்த அடித்தளம் இன்றி பொருத்தமான தலைமைத்துவம் இன்றி முன்னெடுக்கப்படும் எல்லாத் தன்னியல்பான மக்கள் எழுச்சிகளும் நீர்த்துப்போகக்கூடிய ஆபத்துக்கள் உண்டு. அதேசமயம் தெளிவான இலக்குகளை முன்வைத்து முறையான தலைமைத்துவத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் போராட்டம் சில மாதங்களுக்கு முன் வெற்றி பெற்றது. இந்தியாவில் டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் வெற்றி பெற்றது.
இப்பொழுது அரகலய கூறுகிறது, ரணிலுக்கு எதிரான போராட்டம் விரைவில் வெடிக்கும் என்று.சரத் பொன்சேகாவும் அப்படித்தான். கூறியிருக்கிறார். அதற்கு அவர்கள் அரகலய4.0 என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.மஹிந்தவை அகற்றியது அரகலய 1.0 என்றும், பஸிலை அகற்றியது அரகலய2.0 என்றும், கோட்டாவை அகற்றியது அரகலய3.0 என்றும், இனி ரணிலை அகற்றுவதும் முறமையை மாற்றுவதும் அரகலய 4.0 என்றும் அவர்கள் அழைக்கிறார்கள். ஆனால் கடந்த மூன்றுமாத காலத்துக்கும் மேலான தென்னிலங்கை அரசியல் களத்தை தொகுத்து பார்த்தால், தெளிவான வேறுபாட்டை காணமுடிகிறது. கோத்தாவுக்கு முன் கோத்தாவுக்கு பின் என்பதே அது.கோத்தாவுக்கு பின்னரான அரகலய பெருமளவுக்கு தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. சோர்ந்து போய் காணப்படுகிறது.
அதாவது,அரகலயவின் கனிகளை ரணில் சுவிகரித்துவிட்டார் என்று பொருள். 69 லட்சம் வாக்குகளால் வெற்றி பெற்ற ராஜபக்சக்களை துரத்திய ஒரு போராட்டத்தை சுமார் 30,000 வாக்குகள் பெற்ற ஒருவர் முறியடிக்கப் போகிறாரா? கடந்த மூன்று மாதங்களாக ஒவ்வொரு ஒன்பதாம் திகதியும் தாமரை மொட்டு கட்சிக்கும் அக்கட்சியை ஆதரித்த ரணிலுக்கும் அச்சுறுத்தலான ஒரு நாளாக காணப்பட்டது. அடுத்த ஒன்பதாம் திகதி என்ன காத்திருக்கிறது?