மன்னார் நிருபர்
(28-07-2022)
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் (மெசிடோ) மன்னார் மாவட்டத்தில் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட பின்தங்கிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட 400 குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு 2500 ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொதிகள் இவ்வாறு வழங்கப்பட்டு வருகின்றது.
நானாட்டான் மற்றும் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை (28) மதியம் நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நானாட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அச்சங்குளம் அறுகம் குன்று பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 18 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து முசலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட 12 குடும்பங்களுக்கும், காயக்குழி மற்றும் முள்ளிக்குளம் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட மிகவும் வறிய 18 குடும்பங்களுக்கும், மருதமடு பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 10 குடும்பங்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில், பணியாளர்கள் குறித்த கிராமங்களுக்குச் சென்று குறித்த கிராம பிரதிநிதிகளுடன் இணைந்து நிவாரண பொதிகளை வழங்கி வைத்தனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கூலித்தொழில் மேற்கொள்ளும் குடும்பத் தலைவர்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில்,குறித்த கிராமங்களுக்கு நேரடியாக விஜயம் செய்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டுள்ளதோடு,தெரிவு செய்யப்பட்ட வறிய குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.