தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் நிறுவுனர் பாவலர் திரு. துரையப்பாபிள்ளை அவர்களின் நினைவு தினமும் பரிசளிப்பு விழாவும் சென்ற யூன் மாதம் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி பாவலர் துரையப்பாபிள்ளை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை சரியாக காலை ஒன்பது மணியளவில் கல்லூரி அதிபர் திரு. ம. மணிசேகரன் அவர்களுடன் பிரதம விருந்தினர் திரு. பொ. ரவிச்சந்திரன், சிறப்பு விருந்தினர் திரு. வே. அரசகேசரி மற்றும் கௌரவ விருந்தினர் கனடாவில் இருந்து வருகை தந்திருந்த முன்னாள் உதைபந்தாட்ட வீரரும், கனடா பழைய மாணவர் சங்க நிர்வாகசபை உறுப்பினருமான வி.ரி. மகாலிங்கம், செல்வி. வே. பத்மலோஜினி, திருமதி லோ. சுபேந்திரன், வைத்திய கலாநிதி த. பிரகாஷன் ஆகியோர் கல்லூரி வாசலில் இருந்து கல்லூரி பான்ட் குழுவினரால் சகல மரியாதைகளுடனும், கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டு அரங்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மங்கள விளக்கேற்றியதைத் தொடர்ந்து தேசியகீதம் தமிழில் பாடப்பட்டு, அதைத் தொடர்ந்து தமிழ் வாழ்த்துப் பாடல் ஆகியன இடம் பெற்றன. இதைத் தொடர்ந்து பிரதம விருந்தினர்; பாவலர் துரையப்பாப்பிள்ளை அவர்களின் உருவப்படத்திற்கும், கனடாவில் இருந்து வருகை தந்த கௌரவ விருந்தினரான வி.ரி. மகாலிங்கம் முன்னாள் அதிபர் திரு. ஜயரத்தினம் அவர்களின் உருவப்படத்திற்கும் மலர்மாலை சூட்டி, மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
கல்லூரி அதிபர் ம.மணிசேகரன் அவர்களின் உரையைத் தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றன. பிரதம விருந்தினர் திரு. பொ.ரவிச்சந்திரன் (வலயக் கல்விப் பணிப்பாளர்) அவர்களின் உரையைத் தொடர்ந்து சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கான பரிசுகளும் விருதுகளும் விருந்தினர்களால் வழங்கப்பட்டன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வைத்திய கலாநிதி த. பிரகாஷன் நினைவுப் பேருரையாற்றினார். பழைய மாணவர் சங்கச் செயலாளர் திரு சி. யசீதரனின் நன்றியுரையைத் தொடர்ந்து மாணவத் தலைவர்களால் கல்லூரிக்கீதம் இசைக்கப்பட்டு, விழா சிறப்பாக நிறைவுபெற்றது.
2019 ஆம் ஆண்டு கடைசியாக நடந்த பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கனடா பழைய மாணவர் சங்கத்தில் இருந்து கணக்காளரும், எழுத்தாளருமான குரு அரவிந்தன் நேரடியாகக் கலந்து கொண்டிருந்தார். அப்போது, அவர் மகாஜனக்கல்லூரி நிறுவுனர் பாவலர் திரு. துரையப்பாபிள்ளை அவர்களின் உருவப்படத்திற்கு மலர் மாலைசூடி, நினைவுதின நினைவுப்பேருரை ஆற்றி, மாணவ, மாணவிகளுக்குப் பரிசளித்ததும் குறிப்பிடத்தக்கது. கோவிட்-19 காரணமாக பாடசாலை இயங்காததால், 2021 ஆம் ஆண்டு இணையவழியாக நினைவுப் பேருரை நடந்தது. கனடா பழைய மாணவர் சங்கத்திற்கு மதிப்பளித்து, மகாஜன அன்னையின் அரவணைப்பில் வளர்ந்து, புலம்பெயர்ந்து உலகெல்லாம் பரந்து வாழும் அதன் பழைய மாணவர்களைக் கௌரவிக்கும் மகாஜனக்கல்லூரி சமூகத்தினர் பாராட்டுக்குரியவர்கள்.