தற்போது நாட்டில் நிலவும் மிக மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக முன்பள்ளிச் சிறார்களில் பெரும்பாலானோர் போசாக்கு இன்றி பாதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களது வரவும் முன்பள்ளிகளில் குறைந்து செல்கின்றது என்ற ஆதங்கம் பலராலும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு கிளிநொச்சி தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளரின் கோரிக்கைக்கு அமைவாக பூநகரி பிரதேசத்திலுள்ள 51 முன்பள்ளிகளில் பயின்று வரும் 1000 சிறார்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் செயற்பாடு மேற்படி IMHO-USA மற்றும் Ratnam Foundation-UK அமைப்புக்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் வழங்கப்படவேண்டிய உணவு பற்றிய அறிவுறுத்தல்கள் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு முன்பள்ளிக்கு பொறுப்பான உதவிக்கல்வி பணிப்பாளரினால் வழங்கப்பட்டுள்ளது.நெத்தலி,மரக்கறி வகைகள், முட்டை மற்றும் தானியங்கள் சேர்ந்ததான சாதம் அத்தோடு பசும்பால்,பழவகைகளையும் சேர்க்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் ஆரம்ப வைபவம் இம்மாதம் 3ஆம் திகதி அடைக்கல அன்னை(பூநகரி நகரம்) மற்றும் மழலைகள் (வட பூநகரி ) முன்பள்ளிகளில் சம்பிரதாய பூர்வமாக IMHO அமைப்பின் வதிவிட பணிப்பாளர் திரு.சு.கிருஷ்ணகுமார் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வுகளில் முன்பருவ பிள்ளை பிரிவு உதவிக்கல்விபணிப்பாளார் திரு.க.யுவராசா, அருட்தந்தை அஜித் துலக்சன் அடிகளார்,பூநகரி பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் மற்றும் இணைப்பாளர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டிருந்தனர். போசாக்கு உணவின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வும் பெற்றோருக்கு வழங்கப்பட்டது.
இறுதியில் IMHO-USA அமைப்பின் தலைவர் வைத்திய கலாநிதி திருமதி ராஜம் தெய்வேந்திரம் மற்றும் Ratnam Foundation-UK அமைப்பின் ஸ்தாபகரும் அதன் தலைவருமான கலாநிதி திரு.இரத்தினம் நித்தியானந்தன் போன்றோரது அர்ப்பணிப்பானதும் மனித நேயம் மிக்க அனைத்து செயல்பாடுகளுக்கும் மனப்பூர்வமான நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.