கடந்த மாதம்இலங்கையில் இடம்பெற்ற அரசுக்கும் நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபாய இராஜபக்சவுக்கும் எதிரான போராட்டங்களில் இருந்து தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்ச, ஜூலை நடுப்பகுதியில் இருந்து அவர் தங்கியிருந்த சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு நேற்று இரவு வியாழக்கிழமை இரவு தாய்லாந்து சென்றடைந்தார் என்ற நம்பகமான செய்தி வெளியாகியுள்ளது
தாய்லாந்து நாட்டின் தொலைக்காட்சி சேவைகள், ராஜபக்சவும் அவரது மனைவி என்று நம்பப்படும் ஒரு பெண்ணையும் பாங்காக்கின் டான் மியூயாங் விமான நிலையத்தில் உள்ள விஐபி மண்டபத்திற்கு வெளியே லிமோசினுக்கு அழைத்துச் செல்வதை தமது முக்கிய செய்திகளாகக் காட்டின, பின்னர் அந்த தம்பதியை வெளியிடப்படாத இடத்திற்குச் சென்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன
தாய்லாந்தில் உள்ள அதிகாரிகள் புதன் கிழமையன்று, அவரை தாய்லாந்துக்குள் நுழைய அனுமதிக்குமாறு இலங்கை அரசாங்கத்தால் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், எனவே அவர் தற்காலிகமாக தாய்லாந்தில் தங்க அனுமதிக்கப்படுவார் என்றும் அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா, இது குறித்து தாய்லாந்தின் செய்தி ஊடகங்களுக்கு கருத்து தெரவிக்கையில் முன்னாள் இலங்கை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் உத்தேசித்துள்ள பயணம் குறித்து தாம் அறிந்திருப்பதாகவும், முன்னாள் ஜனாதிபதி மூன்றாவது நாட்டில் தஞ்சம் கோரி வருவதால் மனிதாபிமான காரணங்களுக்காக அனுமதி அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். தாய்லாந்தில் இருக்கும் போது ராஜபக்ச அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார் என தான் உறுதியளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கோட்டாபாய ராஜபக்ச தனது பயணத் திட்டம் குறித்து பகிரங்கமாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. கடந்த மாதம் இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற அவர், முதலில் இலங்கை இராணுவ விமானத்தில் அண்டை நாடான மாலத்தீவுக்குச் சென்று பின்னர் சிங்கப்பூருக்குச் சென்றார், அங்கு அவரது விசா வியாழக்கிழமை காலாவதியானது.
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தீர்வுகளை கோரி இலங்கையில் பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் தொழிற்சங்கவாதிகள் இடது சாரி இயக்கங்கள் ஆகியன பல மாதங்களாக பாரிய வீதிப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளை ஆக்கிரமித்துள்ள எதிர்ப்பாளர்கள், மருந்துகள், உணவு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறைக்கு வழிவகுத்த பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச குடும்பத்தின் தவறான நிர்வாகம் மற்றும் ஊழலைக் குற்றம் சாட்டுகின்றனர். தீவு நாடு சர்வதேச நாணய நிதியத்துடன் பிணை எடுப்பு திட்டத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தாய்லாந்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டனி சங்கராட் புதன்கிழமை கூறுகையில், தாய்லாந்தில் கோட்டாபாய ராஜபக்ச தங்கவிருப்பது தற்காலிகமானது, பயணத்தை நோக்கமாகக் கொண்டது. அரசியல் தஞ்சம் கோரப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி ராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருப்பதால், அவர் விசா இன்றி 90 நாட்கள் தங்க அனுமதிக்கப்படுவார் என தெரிவித்துள்ளார்.
இலங்கை நாட்டின் பொருளாதாரத்தை தவறாக நிர்வகித்ததற்காக விமர்சிக்கப்படுவதோடு, 2009 இல் முடிவடைந்த இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது அவர் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக மனித உரிமைக் குழுக்களால் கோட்டாபாய ராஜபக்ச மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதும் அவரை தாய்லாந்து அரசாங்கம் கைது செய்ய வேண்டும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட பல சர்வதேச தமிழர் அமைப்புக்கள் உலக நாடுகளையும் குறிப்பாக தாய்லாந்து அரசாங்கத்தையும் வற்புறுத்தி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.