14-வது நாடாளுமன்ற தவணைக்காலம் முடியும்வரை பிரதமர் பதவியில் தொடர்வார் இஸ்மாயில்
-நக்கீரன்
கோலாலம்பூர், ஆக.18:
இன்னும் இரு வாரங்களில், செப்டம்பர் முதல் நாளில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, செப்டம்பர் 2-வது வாரத்தில் 15-ஆவது பொதுத் தேர்தலுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்றும் அதன்படி செப்டம்பர் 25-இல் வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று அக்டோபர் 8-இல் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார் நினைவு நாளான அன்றைய தினத்தில் பொதுத்தேர்தல் நடைபெறும் என்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக செய்தி உலா வரும் இந்த வேளையில், உண்மையில் மகிழ்ச்சி அடைய வேண்டிய அம்னோ, மாறாக தன் முழு கவனத்தையும் புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றத்தை நோக்கி திருப்பி இருக்கிறது.
மலாக்கா, ஜோகூர் சட்டமன்றத் தேர்தல்களில் வென்றதில் இருந்தே அடுத்தப் பொதுத் தேர்தல் உடனே நடத்தப்பட வேண்டும் என்றும் இதன்தொடர்பில் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் எனவும் ஓங்கி முழங்கிவந்த அம்னோக் கட்சி, 2023 மே மாதம் வரை தவணைகொண்டுள்ள தற்போதைய 14-ஆவது நாடாளுமன்றத்தை ஏன் இடையில் களைக்க வேண்டும் என்பதற்கு இதுவரை நாட்டு மக்களுக்கு அம்னோ சொல்லவில்லை; அம்னோ கடந்துவந்த ஜனநாயகப் பாதை அப்படி!
அக்டோபர் 8-இல் பொதுத் தேர்தல் என்பது உண்மையாக இருந்தாலும் வதந்தியாக இருந்தாலும் இப்பொழுது மகிழ்ச்சி அடைய வேண்டிய அந்தக் கட்சி, மாறாக கலக்கத்தில் இருக்கிறது. தேர்தல் களத்திற்கு அம்னோவின் முகமாக அடையாளம் காணப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப், பெரும் சிக்கலுக்கு ஆட்பட்டுள்ளார். ‘எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல்’ வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டமும் சிறைவாசமும் கொண்ட தண்டனைக்கு எதிரான அவரின் மேல்முறையீட்டு வழக்கு ஏறக்குறைய உச்சக்கட்டத்தை எட்டிவிட்டது.
இது ஓர் ஊழல் வழக்கு என்பதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் சிந்திக்காக டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, தான் அம்னோவின் தேசியத் தலைவர், ஒரு மாபெரும் அரசியல் கூட்டணியான தேசிய முன்னணிக்கும் தலைவர் என்பதை யெல்லாம் புறந்தள்ளி, நாங்கள் அனைவரும் நஜீப்பின் பின்னால் அணி வகுத்துள்ளோம்; மற்றவர்களும் அவருக்கு தார்மீக ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்; அந்தக் கோரிக்கையின் சூடு தணிவதற்குள், கட்சியின் துணைத் தலைவரான டத்தோஸ்ரீ முகமட் ஹசானும் நஜீப்பிற்கு எதிரான ‘எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல்’ வழக்கில் அவசரமாக தீர்ப்பு வழங்குவது நீதியை புதைப்பதற்கு சமம் என்கிறார்.
உண்மையில் இவ்வழக்கு, வருடக் கணக்கில் நடைபெற்று, தீர்ப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து மேல் முறையீடு செய்தார். அதிலும் தோல்வி அடைந்த நிலையில் இப்பொழுது கூட்டரசு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. இதை எப்படி அவசரத் தீர்ப்பு என்று முகமட் ஹசான் கூறுகிறார் என்று தெரியவில்லை.
அம்னோ தலைவர்களின் அத்தியாயத்தில் தார்மீக ஆதரவு, அவசரத் தீர்ப்பு என்பதற்கெல்லாம் வேறு பொருள் போலும்!
அண்மைக் காலம், வரை சுலு சுல்தான் விவகாரம் தேசிய அரசியலை ஆக்கிரமித்து வந்த நிலையில், இப்பொழுது நாட்டின் கப்பல் படைக்கு போர்க் கப்பல் வாங்கியதில் ஏறக்குறைய வெ.9.3 பில்லியன் அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது அம்பலமாகி தேசிய அரசியலை களங்க அடித்து வருகிறது.
இந்த இரு பெருஞ்சிக்கலுக்கும் முந்தைய தேசிய முன்னணி ஆட்சிதான் முழுகாரணம். இதற்கிடையில், நஜீப்பிற்கு எதிரான ‘எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல்’ வழக்கிற்கு இந்த மாத இறுதியிலேயே முடிவுரை எழுதப்பட இருக்கிறது.
அம்னோ தலைமை வட்டம் எதிர்கொண்டுள்ள இத்தகைய நெருக்கடிச் சூழலால், ஒருவர் உள்ளூர மகிழ்ச்சி அடைவார் என்றால் அவர்தான் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்-ஆகத்தான் இருப்பார்.
15-ஆவது பொதுத் தேர்தல் குறித்து கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே மலேசிய தேசிய அரசியல் களத்தில் பேசப்பட்டு வந்தாலும் அலுங்காமல் குலுங்காமல் அடுத்த ஆண்டு மேத் திங்கள்வரை வாய்ப்புள்ள பிரதமர் பதவியில் தொடர்வது என்பதில் இஸ்மாயில் தீர்க்கமாக இருக்கிறார்.
நாட்டின் ஒன்பதாவது பிரதமர் ஆனது, உண்மையில் அவருக்குக் கிடைத்த நல்வாய்ப்பு. கடந்த பொதுத் தேர்தலில், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்தான் பிரதமர் என்பதை கருத்தில் கொண்டு மக்கள் நம்பிக்கைக் கூட்டணியை ஆதரித்தனர்; மாற்றத்தையும் விரும்பினர்.
அரசியல் சகுனி துன் மகாதீர் இழைத்த துரோகத்தினால், நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி 22 மாதங்களிலேயே கவிழ்க்கப்பட்டு, கொல்லைப்புற ஆட்சி என்னும் அத்தியாயங்கள் உருவாயின. இதில் இரண்டாவது அத்தியாயத்தின் மூலம் பிரதமராகியுள்ள இஸ்மாயிலுக்கு, இன்னொரு முறை பிரதமர் வாய்ப்பு வாய்க்குமா என்பது ஐயமே.
15-ஆவது பொதுத் தேர்தலில் இஸ்மாயில்தான் பிரதமர் வேட்பாளர் என்று ஜாஹிட் ஹமிடி அறிவித்ததை இஸ்மாயில் நம்பத் தயாராக இல்லை. அண்மையில் ஜோகூர் சட்டமன்றத் தேர்தலின்போது வாக்கு வேட்டைக்காக மந்திரி பெசார்(மாநில முதல்வர்) வேட்பாளர் என்று காட்டிய முகம்வேறு; வென்றபின் மந்திரி பெசார் நாற்காலியில் அமரவைத்த முகம் வேறு.
பிரதமருக்கு இதுவெல்லாம் தெரியாதா என்ன?
முதலில், 15-ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்குமா என்பதே கேள்விக்குறி; அப்படியேக் கிடைத்தாலும் அம்னோவின் உதவித் தலைவர்களில் ஒருவரான இஸ்மாயில் சப்ரியை மீண்டும் பிரதமர் நாற்காலியில் அமரவைக்க ஜாஹிட் அமிடியும் முகமட் ஹசானும் ஒப்புக்கொள்வார்களா என்பதும் ஐயத்திற்கு இடமானது.
எனவே, யார் என்ன சொன்னாலும் சொல்லிக் கொள்ளட்டும்; ‘நமக்கென்ன’ என்னும் மனநிலையில் எல்லாத் தரப்பினருக்கும் எல்லாச் சூழலுக்கும் எற்றபடி ‘ஆமாம்சாமி’ போட்டுவிட்டு, தற்போதைய நாடாளுமன்ற ஆயுட்காலம் வரை பிரதமராகத் தொடர்வது என்ற தீர்மானத்துடன் கணகச்சிதமாக செயல்படுகிறார் பிரதமர் இஸ்மாயில்.
இதன் வெளிப்பாடாகத்தான், கடந்த அக்டோபர் 10-ஆம் நாளில் அவரின் அண்ணன் கமாருசமான் யாக்கோப் ‘குவாசா ராயாட்’ என்ற பெயரில் தொடங்கிய பல இனக் கட்சியும் கிடப்பில் உள்ளது.
வரும் அக்டோபர் 8-இல் 15-ஆவது பொதுத் தேர்தல் என்ற தகவல், வதந்திதான் என்று அம்னோ பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான் தெரிவித்த கருத்துகூட, அம்னோ இப்போது பின்வாங்குவதைத்தான் காட்டுகிறது. மொத்தத்தில் நடைபெறுகின்ற சம்பவங்கள் யாவும் பிரதமருக்கு சாதகமாகவே அமைகின்றன. 15-ஆவது பொதுத் தேர்தல் வரும் மே மாதத்தை நோக்கித்தான் நகர்கின்றது என்பதை இன்றைய அரசியல் களம் புலப்படுத்துகிறது.