கதிரோட்டம் 19-08-2022
இலங்கையின் ஜனாதிபதியாக இதுவரை பணியாற்றியவர்களில் மிகவும்; மோசமான ஒரு ‘நபராக’க் கணிக்கப்பெற்ற காரணத்தால் பதவியை விட்டும் தான் வாழ்ந்து வந்து ‘சொகுசு’ மாளிகையையும் விட்டும் இறுதியில் நாட்டை விட்டும் அகற்றப்பட்ட கோட்டாபாய ராஜபக்ச மீண்டும் ‘துளிர்ப்பதற்காய்’ துடிப்பது தெளிவாகவே தெரிகின்றது.
நன்கு திட்டமிட்ட வகையில் ஏற்பாடு செய்யப்பபெற்ற ‘கோ ஹோம் கோத்தா’ என்னும் போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுத்தவர்கள் தொழிலாளர்களும் விவசாயிகளும் அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுமே ஆவார்கள்.
இலங்கையில்உள்ள மத்திய தர வர்க்கத்தினரும் கடை நிலை வாசிகளும் ‘சொகுசு’ வாழ்க்கை அனுபவிக்கும் அரசியல்வாதிகளை எதிர்த்துக் குரல் எழுப்பி அந்த போராடத்தை செவ்வனே நடத்தி அதில் வெற்றி கண்டார்கள்.
இவ்வாறான வெற்றிகரமான போராட்டத்தின் இறுதியில் அவரது அரசியல் வாழ்க்கை அஸ்த்தனமாகியது என்ற மகிழ்ச்சியூட்டும் செய்திகள் உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களை அடைந்த வேளையில் நாட்டின் அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் அதிர்ச்சியடைந்தனர். அதற்கு காரணம், அவர்கள் இத்தனை ஆண்டுகள் அனுபவித்த சுக போகங்கள், அரசியல் அதிகாரங்கள் மற்றும் சலுகைகள் ஆகியவற்றை நாம் இழந்துவிடுவோமோ என்று நடுக்கம் கொண்டார்கள்.
இதனால் ரணில் போன்ற ஒரு குள்ள நரியை நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் அமரவைக்க இலங்கை அரசியல்வாதிகளும் ஏனையோரும் ‘கபடம்’ நிறைந்த காரியங்களை ஆற்றினார்கள்.
இதனால் ரணில் முதலில் இலங்கையின் பிரதமராகவும் தொடர்ந்து ஜனதிபதியாகவும் அந்த அதிகாரங்கள் நிறைந்த ஆசனங்களில் அமரக்கூடியதாக இருந்து. ஆனால் முன்வைத்த காலை பின்னால் எடுக்கும் எண்ணங்கள் இல்லாத போராட்டக்காரர்கள் தொடர்ந்து கோசங்களை எழுப்பியும் கூட்டமாய்க் கூடி தங்கள் எழுச்சியைக் காட்டிய வண்ணம் இருந்தார்கள்.
ஆனால் கோட்டாபாயவை விரட்டியடித்த போராட்டக்காரர்களின் பலத்த நடவடிக்கைகள் தொடரும் வகையில் அங்கு ‘பலம் குன்றிவிட்டதோ என்று ஏங்கும் அளவிற்கு தலைநகரில் சம்பங்கள் இடம்பெறுகின்றன.
மக்களுக்கு பிரயோசமற்ற அரசியல் தலைவர்களும் அதிகாரங்களைக் கையில் எடுத்து ஆளும் தரப்பிற்கு ஆபத்துக்கள் வராமல் கண்காணிக்கும் செயற்பாடுகள் அங்கு காணப்படுவதை உணரக்கூடியதாக உள்ளது..
இவ்வாறிருக்க ரணிலின் அரசுக்கு எதிராகத் தயாரிப்புகளை மேற்கொண்டு போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திய தென்னிலங்கை பல்கலைக் கழக மாணவர்கள் சிலர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ரணில் அரசின் இரும்புக்கரங்கள் அந்த துணிச்சலான போராட்டக்காரர்களை நோக்கி நீளுகின்றதை நாம் அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது
கொழும்பில் தொடர்ச்சியக போராடி வந்த இலங்கையின் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்புச் செயலாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட நால்வர் நேற்று வியாழக்ககிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவருக்கு எதிராக இதற்கு முன்னர் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியின் போது ஏற்பட்ட அமைதியின்மையையடுத்து அவர் உள்ளிட்ட நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளுது. ஆனால் கொடியவர்களின் கைகள் ஓங்குவதும் போராட்டக்காரர்களின் எழுச்சி மங்கிப் போவதை அரச பெருச்சாளிகள் விமர்சிப்பதையும் அவதானிக்கும் போது இலங்கையில் போர்க்குணம் கொண்ட மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றே எண்ணத் தோன்றுகின்றது
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் நேற்றைய தினம் நடாத்தப்பட்ட போராட்டத்தை ஒடுக்குவதற்கு ஆயிரக்கணக்கான விசேட அதிரடிப்படையினரை பயன்படுத்தியமை தொடர்பில் சரத் பொன்சேகா ஆட்சேபனை தெரிவித்துள்ளார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது
சரத் பொன்சேக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். “நிராயுதபாணிகளாகவும் அமைதியான முறையிலும் போராட்டத்தை நடத்திய பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தாக்கி விரட்டுவதற்கு ஆயிரக்கணக்கான ஆயுதம் தாங்கிய பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை வீரர்களை ஈடுபடுத்துவது ஒரு நாட்டின் ஜனநாயகம் வேலை செய்யவில்லை என்பதற்கு சரியான எடுத்துக்காட்டு. என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் சுகபோகங்கள் சரிந்து விடக்கூடாது என்பதிலேயே கவனமாக உள்ளார்கள். எனவே அவர்கள் கூட ரணில் என்னும் குள்ள நரியின் இருப்பை தக்கவைக்கும் எண்ணங்கள் கொண்டவர்களே என்பது எப்போதோ அறிந்து கொண்ட உண்மை.
அவுஸ்த்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இன்று 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூவின மக்களும் இணையும் ஒன்றுகூடல் அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் இலங்கையைச் சேர்ந்த மூவினத்தவர்களும் இணைந்து, தமது தாயகத்தில் சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு உதவவும் அங்குள்ள மக்களின் மருத்துவ தேவைகளை கவனிக்கவும் முன்வந்துள்ளனர்.
முன்னர் நீடித்த கொவிட் தொற்று பரவிய காலத்திலும் அவுஸ்த்திரேலியாவில் உள்ள இலங்கையர்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஊடாக பல்வேறு உதவிகளை வழங்கி வந்தனர்.
இன்று 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மெல்பனில் கிளேய்டன் சமூக மண்டபத்தில் இரவு 7-.30 மணி முதல் 11.-30 மணிவரையில் நடைபெறவிருக்கும் ஒன்றுகூடல் மற்றும் கலைநிகழ்ச்சிகளின் மூலம் திரட்டப்படும் நிதி, இலங்கையில் குழந்தைகளின் மருத்துவ தேவைக்கான உபகரணங்கள், கருவிகள் ஆகியனவற்றை பெற்றுக் கொள்வதற்காக ரோட்டரிக் கழகம் ஊடாக வழங்கப்படவிருக்கிறது.
எதிர்காலக் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கும் திட்டத்தின் கீழ் அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் வசிக்கும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மூவினத்தவர்களும் இணைந்து இந்நிகழ்ச்சியை முன்னெடுத்துள்ளனர்.
விக்ரோரியா மாநில இலங்கைக்கான துணைத்தூதுவர் கித்சிறி கேரத் மற்றும் கிறீன் கட்சியின் பிரதிநிதியும் எம். பியுமான திருமதி சமந்தா ரட்ணம், மாநில எம். பிக்கள், பல்லின கலாசார ஆணையாளர் ஆகியோர் உட்பட பல பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர் என எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்