கனடா, நோவா ஸ்கொசியா-வில் 65-ஆவது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு:
மு. ரவி, ஜசெக குணா உள்ளிட்ட மலேசியா இந்திய பேராளர்களுக்கு
கனட உதயன் சார்பில் வரவேற்பு
-நக்கீரன்
கோலாலம்பூர், ஆக.25:
ஐநா மன்றத்தை அடுத்து பாரிய பன்னாட்டு அமைப்பான காமன்வெல்த் அமைப்பின் 65-ஆவது நாடாளுமன்ற மாநாடு கனடா, நோவா ஸ்கொட்டியா-வில் கடந்த திங்கட்கிழமை ஆகஸ்ட் 22-இல் தொடங்கியது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த இந்த மாநாடு, இந்த ஆண்டு எழுச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
காமன்வெல்த் அமைப்பில் உறுப்பியம் பெற்றுள்ள நாடுகளின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என ஏறக்குறைய 600 பேராளர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டை கனடா ஏற்று நடத்துகிறது.
மலேசியாவில் இருந்தும் நாடாளுமன்ற பிரதிநிதிகள், அனைத்து சட்டமன்றங்களின் சார்பில் மக்கள் பிரதிநிதிகள் என ஏராளமான பேராளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இருந்து சட்டமன்ற சபாநாயகர் டத்தோ சுல்கிஃப்ளி முகமட் பின் ஓமார், துணை சபாநாயகர் ரவி முனுசாமி, ஆட்சிக் குழு உறுப்பினர்கள் நிக்கோல் தான், சூ கென் வா, ஜனநாயக செயல் கட்சி(ஜசெக) சட்டமன்ற உறுப்பினர் குணா, சட்டமன்ற செயலாளர் அமீன், துணைச் செயலாளர் நூருள் ஃபித்ரா மூடா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஆகஸ்ட் 26-வரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டை கனடாவின் கவர்னர்-ஜெனரல் சீமாட்டி மேரி சைமன் தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் மலேசியாவில் இருந்து கலந்து கொண்டிருக்கும் மக்கள் பிரதிநிதிகள் மு.ரவி, குணா உள்ளிட்ட தமிழ் மக்கள் பிரதிநிதிகளுக்கு கனடாவின் உதயன் பத்திரிகை சார்பில் அதன் தலைமை ஆசிரியர் என்.லோகேந்திர லிங்கன் வரவேற்பு தெரிவித்தார்.
LJI- ARJUNE