கனடா- ஸ்காபுறோ கலை இலக்கிய அன்பர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் டென்மார்க் வாழ் எழுத்தாளர் முல்லை நாச்சியார் பெருமிதம்
தமிழ்ப் பணியையும் இலக்கியப் பங்களிப்பையும் எமது சமூகத்திற்கும் வருங்கால சந்ததிக்கும் வழங்க வேண்டும் என்ற வேட்கை நீண்ட காலமாக என்னோடு இணைந்து பயணிக்கின்றது. அதேவேளை. இந்த இரண்டு துறை சார்ந்த பங்களிப்பை நான் ஆத்ம திருப்தியோடு ஆற்றிவருகின்றேன் என்ற அசையாத நம்பிக்கையும் எனக்கு என்றும் உண்டு
இவ்வாறு நேற்று வியாழக்கிழமை மாலை கனடா- ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள புரண்ட்லைன் சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்ற கலை இலக்கிய அன்பர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட டென்மார்க் வாழ் எழுத்தாளர் முல்லை நாச்சியார் அவர்கள் பெருமிதத்தோடு தெரிவித்தார்.
கனடா கவிஞர் கழகம் மற்றும் தமிழ் இலக்கியப் பட்டறை ஆகியவை இணைந்து நடத்திய இந்த சந்திப்புக் கூட்டத்தை தற்போதைய கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் அகணி சுரேஷ் அவர்களும் கல்வியாளரும் பேச்சாளருமான வாசுகி நகுலராஜா அவர்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அறிமுக உரையை வாசுகி நகுலராஜா அவர்கள் வழங்கி கூட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அவர் தனது உரையில் தற்போது. உலகத் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் மொழிசார்ந்த தளத்தில் நன்கு அறியப்பட்டவராக தமிழ் மக்கள் வாழும் நாடுகள் அனைத்திலும் விளங்கிவரும் முல்லை நாச்சியார் அவர்களை கனடா தமிழ் இலக்கிய நண்பர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோர் இணைந்து சந்தித்து அவருக்கு வரவேற்பு அளிக்கும் இந்த நிகழ்வு இவ்வாரம் பேசப்படும் ஒரு சந்திப்பாக விளங்கும் என்று புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து முல்லை நாச்சியார் அவர்களை அறிமுக உரையாற்றும் வண்ணம் அவர் அழைக்க அவர் ஒலி வாங்கியைப் பெற்றுக்கொண்ட நிதானமாகவும் நேர்மையாகவும் தன் கருத்துக்களையும் தனது கலை இலக்கிய மற்றும் தமிழ் மொழி சார்ந்த பங்களிப்புக்களையும் விபரமாக எடுத்துரைத்தார்.
தொடர்ந்து அவர் தனது உரையில் டென்மார்க்கை தளமாகக் கொண்டு தான் உலக நாடுகளில் வாழும் பல இலக்கியவாதிகளை இணைத்துக் கொண்ட செயற்பட்டு வந்ததன் பயனாக தமிழ் மொழி மீது பற்றுக்கொண்ட நூற்றுக்கணக்கானவர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தாலும் டென்மார்க் தேசத்தை தளமாகக் கொண்டு ‘டென்மார்க் கலை இலக்கியப் பேரவை’ என்னும் அமைப்பை நிறுவுவது என்ற அந்த அறிவிப்பை கனடாவில் இன்றைய தினம் விடுப்பதில் பெருமையடைகின்றேன்” என்று தெரிவித்து அதற்கு கனடா வாழ் கலை இலக்கிய நண்பர்களின் ஒத்துழைப்பையும் வேண்டிக்கொண்டு உரையை நிறைவு செய்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான அகணி சுரேஷ் அவர்கள் தனது உரையில் முல்லை நாச்சியார் அவர்களின் தமிழ் மொழி சார்ந்த மற்றும் கலை இலக்கிய பங்களிப்பு மற்றும் அவரது தனித்துவமான ஆளுமை ஆகியவற்றை பற்றி எடுத்துரைத்தார்.
தொடர்ந்து பேராசிரியர் இ. பாலசுந்தரம். முன்னாள் அதிபர் சின்னையா சிவனேசன். ‘உதயன்’ லோகேந்திரலிங்கம். கவிஞர் கழகத்தின் தலைவர் பஞ்சஶ்ரீநாதன், ஆசிரியர் த. சிவபாலு விருது பெற்ற கவிஞர் மாவிலி மைந்தன் சண்முகராஜா உட்பட பலரும் உரையாற்றினார்கள். அத்துடன் இணையவழி ஊடாகவும வெளிநாடுகளிலிருந்து அதிகாலை வேளையிலும் ஆர்வத்தோடு தொடர்பு கொண்ட முல்லை நாச்சியார் அவர்களின் பன்முகத் தன்மை சார்ந்த பணிகளைப் பாராட்டிப் பேசினார்கள்.
LJI Ganesh and Arjune