-நக்கீரன்
கோலாலம்பூர், ஆக.26:
தமிழீழ சுதந்திரப் போராட்ட களம், இரு தலைமுறைக் காலத்திற்கு தொடர்ந்தது. முதல் 30 ஆண்டு போராட்டம், தந்தை செல்வா போன்ற பெருமக்களின் தலைமையில் ஜனநாயகத் தன்மையில் அமைந்தது.
சிங்கள இனவாத காடையரிடம் ஜனநாயகக் கூறுகள் அடியோடு இன்மையால், ஜனநாயக முறையிலான அந்தப் போராட்டம் கடுகளவும், எள்முனையளவும் பயனற்றுப் போனது; அதன் விளைவாக, தமிழீழ மக்களின் உரிமைப் போர் மறுவடிவத்தை எட்டியது.
எந்த இடத்தில் நியாயம் இல்லையோ, அந்த இடத்தில் வன்முறை வெடிக்கும் என்னும் உலக நியதிக்கு ஏற்ப தமிழீழ விடுதலைப் போராட்டமும் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்தது.
அப்பொழுது, எதிரிகளிடம் சிக்கினால், சித்திரவதைக்கு உள்ளாவதைத் தவிர்க்கவும் தன்மூலம் எந்தத் தகவலும் எதிரிக்கு தெரிந்துவிடக் கூடாதென்ற சிந்தனையிலும் போராட்ட களத்தில் நின்றாடிய இளைஞர்கள் அனைவரும் தங்களின் கழுத்தில் மெதில் ஐசோ சயனைட் என்னும் கொடிய நஞ்சை நிரப்பிய குப்பியை அணிந்து கொள்வது வழக்காக இருந்தது.
அந்த வகையில், ஈழ மண்ணில் முதல் முதலாக சயனைட் நஞ்சுண்டு, பிறந்த மண்ணுக்காகவும் சார்ந்த சமுதாயத்திற்காகவும் உயிர்நீத்த தமிழ் மறவன், இளம் மாணவன், அன்னலெக்குமி என்னும் வீரத்தாயின் மடியில் பால்குடித்து வளர்ந்த வீரக் கொழுந்து பொன்னுத்துரை சிவக்குமாரன்.
கால் நூற்றாண்டுகூட இந்த மண்ணில் வாழாத அந்த மறவன், நெஞ்சைப் பிளந்து இதயத்தைத் தானே எடுத்து எதிரியிடம் கொடுப்பதைப் போல தமிழ்க் குல நலம் விழைந்து உயிர் துறந்தார்.
அவர் பிறந்த நாள் ஆகஸ்ட் 26, 1950.
உரும்பிராயில் பிறந்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்கல்வி கற்ற வேளையில், உயர்க்கல்வி நிலையங்களில் சிங்கள அரசு கடைப்பிடித்த இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிராக வெகுண்டெழுந்தவர் பொன்.சிவகுமாரன். அதன் பின்னர், அவரின் வாழ்க்கை தமிழீழ மண்-மக்களுக்கான போராட்டத்தின் பக்கம் திரும்பியது.
1970-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் சிறிமாவோ பண்டார நாயகே அமைச்சரவை உறுப்பினரான சோமவீர சந்திரஸ்ரீ-யின் வாகனத்துக்கு குண்டு வைத்தவர் சிவகுமாரன் என்று குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
விடுதலையான நிலையில், 1971 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு வெடிகுண்டு தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டார் பொன்.சிவகுமாரன்; ஈழ விடுதலைப் போராட்டத்தில் முதல் தாக்குதல் இதுவென கருதப்படுகிறது.
யாழ்ப்பாண நகரத் தந்தையாகவும் அப்போது சிறிமா கட்சியின் அமைப்பாளராகவும் இருந்த அல்ஃபிரட் துரையப்பாவுக்கு குறிவைத்து அவரின் வாகனத்தில் குண்டு பொருத்தினார்.
குண்டும் வெடித்தது; வாகனமும் சிதறியது; ஆனால், துரையப்பாதான் தப்பினார். துரையப்பா வருவதற்கு முன்னரே குண்டு வெடித்ததால், நூலிழையில் தப்பினார் துரையப்பா.
1973 இல் மாணவர் பேரவையின் பொறுப்பாளராக இருந்த சத்தியசீலன் போன்றவர்கள் கைதாவதற்கு முன்பே, சிங்கள காவல்துறையினரால் வளைக்கப்பட்டு அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொன்.சிவகுமாருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது.
அதற்குமுன்னம், யாழ்ப்பானம் சிறையில் இருந்த அவரை, தப்பி விடுவார் என்ற ஐயத்தினாலும் அங்கு ஏற்கெனவே ஏராளமான தமிழ் இளைஞர்கள் கைதிகளாக இருந்ததாலும், அனுராதபுரம் சிறைச்சாலைக்கு பொன் சிவகுமாரனை மாற்றினர்.
ஒரு நாள் கொழும்பிலிருந்து யாழ்பபாணம் சென்ற ரயிலில் நீதி மன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பொன் சிவகுமாரன் அவர்கள் ரயில் பயணத்தின் போது ஒரு தமிழரை சந்திக்க நேர்ந்தது. பொன்.சிவகுமாரன், ஒரு கடிதத்தை அவரிடம் கொடுத்து, அம்மடலை தன் பெற்றோரின் விலாசத்திற்கு தபாலில் சேர்ப்பிக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் அந்த கடிதத்தை உரும்பிராயில் உள்ள அவர்களது இல்லத்திற்கு நேரடியாகச் சென்று கையளித்தார்
அன்று ரயிலில் பொன்.சிவகுமாரனை பொலிசாரின் பாதுகாப்புக்கு மத்தியில் சந்தித்த அந்தத தமிழர், இன்று கனடாவில் உதயன் என்னும் அச்சு ஊடகத்தையும் இணைய ஊடகத்தையும் ஒருசேர நடத்திவரும் மூத்த ஊடகவியலாரும் சமூகவியலாளருமான நாகமணி. லோகேந்திரலிங்கம் அவர்கள்தான்.
அந்த வேளையில், திரு. லோகேந்திரலிங்கம் பத்திரிகைத் துறையில் எழுத்தாளனாக அறிமுகம் கொண்டிருந்த நேரம். அதை அடையாளம் கண்டுகொண்ட பொன்.சிவகுமாரன் மிகுந்த நம்பிக்கையுடன் தன் எண்ணங்களை பதிவு செய்த எழுத்தோலையை இவரிடம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தமிழினத்தில், சொந்த இனத்திற்கே கோடரிக்காம்புகளாகவும் எதிரியிடம் காட்டிக் கொடுப்பவர்களாகவும் சிலர் செயல்பட்டனர். சந்திரசேகரன், உரும்பிராய் நடராஜா போன்றவர்கள் அவ்வாறு துரோக நடவடிக்கையில் ஈடுபட்டதை அறிந்து, அவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் பொன்.சிவகுமார் ஈடுபட்டார்.
அப்படியான வேளையில், பொன். சிவகுமாரனை கோப்பாயில் காவல் துறையினர் சுற்றிவளைத்தபோது சிங்கள காவலரிடம் அகப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சயனைட் அருந்தி இறந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் சயனைட் அருந்தி 1974, ஜூன் 5-ஆம் நாளில் தன்னுயிரைத் துறந்த இவரின் புகழ், தமிழீழ வரலாற்றில் காலமெல்லாம் நிலைத்திருக்கும்.
வாழ்க பொன்.சுகுமாறனின் பெயர்; வெல்க தமிழீழம்.