மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட 14 பாடசாலைகளுக்கு அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO-USA)மற்றும் இரட்ணம் பவுண்டேசன்(Ratnam Foundation-UK) இணைந்து திறன் பலகைகளை வழங்கியது மட்டுமன்றி அப்பாடசாலை ஆசிரியர்களையும் அக்கல்வி வலய மேற்பார்வை ஆளணியினரையும் பயிற்றுவிக்கும் செயலமர்வு இம்மாதம் 27,28 ஆம் திகதிகளில் சிறப்பாக நடைபெற்றது.
மட்/மமே/ முனைக்காடு விவேகானந்த தேசிய பாடசாலை மற்றும் ம/மமே/முதலிக்குடா மகாவித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளிலும் இருபிரிவுகளாக நடைபெற்ற இச் செயலமர்வில் 48 பேர்வரையில் கலந்து கொண்டிருந்தனர்.
கல்விஅமைச்சின் ஈதக்சலாவ கல்வி பிரிவு மற்றும் வடமராட்சி கணனி வள நிலைய வளவாளர்களினால் நடாத்தப்பட்ட இச்செயலமர்வு ஆரம்பம் முதல் இறுதி வரை ஒவ்வொரு பங்குபற்றுநரும் செயற்பட்டு, அனுபவத்தை பெற்றுக்கொண்ட வகையில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்வி பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம், வடக்கு மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களின் முந்நாள் பிரதிமாகாணக் கல்வி செயலாளரும்,சிரேஷ்ட உதவிக்கல்வி செயலாளருமாகிய ஓய்வுபெற்ற திரு.திசவீரசிங்கம் பொன்னம்பலம், IMHO-USA அமைப்பின் இலங்கைக்கான வதிவிட பணிப்பாளரும் ஓய்வுபெற்ற வலயககல்வி பணிப்பாளருமாகிய திரு.சு.கிருஷ்ணகுமார் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இச்செயலமர்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.ஆசிரியர்களுக்கான விரலிகளும் பாடசாலைக்குரிய பெயர் பலகைகளும் விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டன.