வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்
- அரசியல் வியாபாரிகளுக்கு
மக்கள் திருப்பிக் கொடுப்பர்.
அரசியல்வாதிகள் அரசியலை முழுமையாக தமக்கான வர்த்தக மையமாக மாற்றியமைத்துக் கொண்டுள்ளனர். இந்த வர்த்தகத்தில் மக்களுக்கும் பங்கு உள்ளது. தமது வாக்குச் சீட்டைக் கைகளில் வைத்துக் கொண்டு தேர்தல் காலங்களில் சில்லறைகளுக்காகவும் தமது வாழ்வாதாரத்துக்கான எதிர்பாhப்புக்களுக்காகவும் விலை போய்விடுகின்றனர். இன்னும் பலர் ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்ற மனப்போக்கில் தேர்தல் காலங்களில் இருந்துவிடுகின்றனர். மொத்தத்தில் தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் எல்லாவற்றையும் தமக்கு சாதகமாக ஆக்கிக் கொள்கின்றனர்.
இந்த அரசியல் போக்குக்குள்ளும் மக்கள் அதிரடி மாற்றங்களையும் செய்துவிடுகின்றனர். மக்கள் எதைச் செய்து என்ன பயன் இறுதியில் அதிகாரம் சங்கீத நாற்காலிபோல் ஒரு பகுதியினரின் கைகளுக்குப் போய்ச் சேர்ந்துவிடுகின்றது. அதிகாரத்துக்காக பிரிந்து நின்று கயிறு இழுக்கும் அரசியல் சக்திகளில் ஒரு பகுதியினர் வெற்றி பெற்று ஆட்சிபீடம் ஏற மறு பகுதியினர் எதிர்க் கட்சி வரிசையில் அமர்கின்றனர்.
இதுதான் இலங்கை அரசியலின் போக்காக இருக்கின்றது.
மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படும்வரை மக்கள் தொண்டனாக மக்கள் சேவகனாக காட்டிக் கொள்ளும் பிரதிநிதிகள் நாடாளு மன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டபின் கறுப்புக் கண்ணாடிகள் அவர்களது கண்களை மறைத்துவிடுகின்றன. கறுப்புக் கண்ணாடிகளுடனான கார்கள் ஆளையே மறைத்துவிடும்.
இதற்குப் பின் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் எஜமான். வாக்களித்த மக்கள் சாதாரண சேவகர்கள்.எஜமானை நோக்கி சாதாரண சேவகர்கள் கேள்வி எழுப்ப இயலாது என்பதே இன்றைய அரசியல்வாதிகள் வகுத்துள்ள எழுதப்படாத சட்டம்.
கடந்த ஒரிரு வருடங்களுக்கு முன் கர்தினால் ரஞ்சித் மல்கம் ஆண்டகை இன்றைய அரசியல்வாதிகள்பற்றிக் குறிப்பிட்ட கூற்று இது.
கர்தினால் ரஞ்சித் மல்கம் ஆண்டகையை சந்திக்க வந்த ஒரு அரசியல்வாதி நான் அரசியலுக்கு வந்து தேவைக்கு அதிகமாகவே உழைத்துவிட்டேன்.இது போதும் இனி நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போகின்றேன்‘ என்று கூறியதாகக் குறிப்பிட்டார்.
பெரும்பாலான அரசியல்வாதிகள் எவ்வாறு மக்களையும் நாட்டையும் உறுஞ்சிக் கொண்டிருக்கின்றனர் என்பதற்கு இது தக்க சான்று.
அரசியல் அதிகார மட்டத்தில் மேல் இருந்து கீழ் நோக்கி படிமுறையாக அமைந்துள்ள இந்த ஊழல் மோசடிகள் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்தல் என்பன அளவில் வேறுபடுகின்றன. ஆனால் இந்த படிமுறைத் தட்டில் உள்ளவர்களது கொள்ளை ஊழல் மோசடிகள் மேல் இருந்து கீழ் நோக்கிய சங்கிலித் தொடராக இறுகப் பிணைக்கப்பட்டுள்ளன.
இந்த ஊழல் மோசடிக்குள் அரச அதிகாரிகளுக்குள்ளும் வியாபித்து அவர்களையும் உள்வாங்கியதாக உள்ளது.
மொத்தத்தில் அரசியல்வாதிகள் அரசியலையும் அரசியல் கட்டமைப்பையும் அரச இயந்திரத்தையும் தமது ஊழல் மோசடிகளுக்கேற்றவகையில் வடிவமைத்துக் கொண்டுள்ளனர்.
அண்மைக் காலமாக அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ‘கோடிகளில்‘ புரண்டதை நாடே அறியும். அந்தளவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலை போகின்றனர். குறிப்பாக தமிழ் பேசும் நாடாளு மன்ற உறுப்பினர்களும் இதற்குச் சளைத்தவர்கள் அல்ல. அவர்கள் இதனை வழக்கமான அரசியல் நடைமுறையாக எந்தவித கூச்சமும் இன்றி பின்பற்றுகின்றனர். அவர்கள் சார்ந்த கட்சிகளும் கண்டும் காணாததுபோல் இருந்துவிடுகின்றன. அல்லது விசாரணை செய்கின்றோம் என அறிக்கைவிடுவதுடன் கிடப்பில் போட்டுவிடுகின்றனர்.
இதற்கெதிரான மக்கள் எழுச்சியே காலிமுகத்திடலில் நூறு நாட்களைக் கடந்து வெற்றியை நோக்கிப் பயணித்தது.இதற்கு ஆதரவாக சமாந்தரமாக தென்னிலங்கை முழுவதும் மக்கள் போராட்டமாக வியாபித்தது.
இந்த மக்கள் எழுச்சி என்பது இலங்கையின் அரசியல்வாதிகள் தமக்காக மக்களின் ஆணை மீது கட்டி எழுப்பிக் கொண்ட பிரகடனப்படுத்தப்படாத கட்டமைப்புக்கு எதிரானதாகும்.
இலங்கை அரசியலில் 74 வருடங்களாக அரசியல்வாதிகளினால் கட்டிக்காத்த எழுதப்படாத அரசியல் மரபுக்கு எதிராகவே சிங்கள இளைஞர்கள் ஆயுதமேந்திய கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
இந்தக் கிளர்ச்சிகளை இலங்கையின் ஆளும் வர்க்கம் வெற்றிகரமாக முறியடித்து தமது இருப்பையும் அரசியல் நலன்களையும் தக்க வைத்துக் கொண்டன.
இதற்கும் அப்பால் காலத்துக்குக் காலம் தென்னிலங்கை மக்கள் தேர்தல் மூலம் முகங்களையும் நிறங்களையும் மாற்றி மாற்றி அமைத்துப் பார்த்தனர். அப்பொழுதும் அரசியல்வாதிகளே வென்றனர்.
அதாவது தென்னிலங்கை அரசியல் சக்திகள் பிரிந்து நின்று தேர்தல் மூலம் ஆட்சி அதிகாரத்திற்காகப் போராடி வென்றவர்கள் ஆட்சிபீடத்திலும் தோற்றவர்கள் எதிர்க் கட்சி வரிசையிலும் அமர்ந்தனர்.
மொத்தத்தில் கூறப்போனால் மக்களே ஊழல் பேர்வழிகள் மோசடிக்காரர்கள் கொள்ளையர்களை மாறி மாறி ஆட்சிபீடத்தில் அமர்த்தி தொடர் தோல்விகளைச் சந்தித்தனர். போதாக்குறைக்கு கடந்த இரண்டரை வருடங்களாக நாட்டின் கஜானாவே காலியாகும் நிலைக்குப் போய் நாடு வங்குரோத்து நிலைக்குள் தள்ளப்பட்டதுடன் நாட்டு மக்கள் உயிர்வாழ்வதே கேள்விக்குறியாகியது.
இந்த ஒரு நிலையில்தான் அரசியல் கட்டமைப்பில் மாற்றம் குறித்த சிந்தனை தென்னிலங்கை இளைஞர் யுவதிகளிடையேக் கருக் கொண்டது. இந்தச் சிந்தனைக் கரு தென்னிலங்கையின் பெரும்பாலான மக்களின் சிந்தனையிலும் ஆழப்பதியவே அது அகிம்சை வழிப் போராட்டமாக பீறிட்டுக் கிளம்பியது. நூறு நாட்களைக் கடந்த அந்தக் கரு குழந்தையாகப் பிரசவிப்பதற்கு முன்பே கரு கலைப்பு செய்யப்பட்டுவிட்டது.
இதுபற்றி நண்பர் ஒருவர் கூறுகையில் இது ஒரு முன்னுதாரணமாக இருந்துவிடக் கூடாது என்பதில் தென்னிலங்கை அரசியல் சக்திகள் மிகக் கவனமாக இருக்கின்றன என்று குறிப்பிட்டார்.
அதேவேளையில் தென்னிலங்கை இளைஞர் யுவதிகள் மற்றும் மக்கள் எதிர்பார்க்கும் System Change என்பது ஒட்டு மொத்த அரசியல்வாதிகளின் இருப்புக்கு ஆபத்தாக முடியும் என தென்னிலங்கை அரசியல் சக்திகள் கணக்கிட்டுள்ளன என்பதே உண்மையாகும்.
எனவேதான் தென்னிலங்கை எதிர்பார்த்து நின்ற System Change க்கு பயங்கரவாதம் என்றும் ஜனநாயகத்தை சீர்குலைக்க மேற் கொள்ளப்படும் சதித் திடடம் என்றும் தேசத்துரோகச் செயல் என்றும் ஆட்சியாளர்கள் முத்திரைகுத்தி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வேட்டையாடுகின்றனர்.
ஆனால் தென்னிலங்கை மக்கள் எதிர்பார்த்த அரசியல் முறையில் மாற்றம் கொண்டுவருவதுபற்றி பேசவில்லை.
ஊழல் அற்ற அரசியல் குறித்து பேசப்படவில்லை.
கொள்ளையடித்த பணத்தை நாட்டுக்குக் கொண்டு வருவதுபற்றி பேசப்படவில்லை
ஊழல்வாதிகளையும் கொள்ளையர்களையும் சட்டத்தின் முன் நிறுத்துவதுபற்றி பேசவில்லை.
ஆனால் ஜனாதிபதியின் வீட்டில் மதுப் போத்தலை தீருடியவர் என்று கூறப்படும் நபர்களில் இருந்து பலர் தொடராக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்படுகின்றனர்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் மக்கள் ஆணைபெற்றவர்களிடம் வாக்களித்த மக்களாக இருந்தாலும் கேள்வி கேட்க இயலாது என்பதுதான் ஆட்சியாளர்களின் வாதமாக சித்தாந்தமாக உள்ளது. அதனை மீறி கேள்வி கேட்பின் அது பயங்கரவாதமாகும் தேசத் துரோக குற்றச்சாட்டுக்கு ஒப்பானதாகும். ஆட்சியைக் கவிழ்க்கும் சதிக்கு ஒப்பானதாகும்.
மக்கள் ஆணை பெற்றவர்களிடம் ‘மாற்றத்தை‘ மக்கள் எதிர் பார்க்க முடியாது எனில் நாட்டில் நடைபெறுவது எந்த ஆட்சி?
மக்கள் ஆணை வழங்கியது நாட்டைக் கொள்ளையடிப்பதற்கோ அல்லது நாட்டை சூறையாடுவதற்கோ வழங்கப்பட்ட “ லைசன் “ அல்ல என்பதை மக்கள் நிரூபிப்பர்.