அதிருப்தியாளர்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டு வரும் அடக்குமுறையை விபரிக்கும் அறிக்கை ஒன்றை, இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு (JDS) ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்ப்பித்துள்ளது.
பாரிய கொடூரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நாட்டின் இராணுவம் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்திற்கு வழக்குத் தொடரவும் பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் ஆவணங்களுடன் அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
கோட்டாபய ராஜபக்சவை வெகுஜனப் போராட்டத்தின் மூலம் பதவியில் இருந்து அகற்றிய பின்னர், ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க ஒரு மாத காலத்துக்கும் மேலாக பல கடுமையான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுள்ளதாக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பப்பட்ட 11 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, அனைத்துப் பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் களனிப் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானப் பிரிவின் மாணவர் செயற்பாட்டாளர் ஹஷான் ஜீவந்த குணதிலக்க ஆகியோர் பயங்கரவாதச் சட்டத்தைப் பயன்படுத்தி 90 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதோடு, பிணையில் விடுதலையாகியுள்ள கவிஞர் அஹ்னாப் ஜசீம், பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் 3 வருடங்களுக்கு மேலாக விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பலாலி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சின்னையா சிவரூபனின் பெயர் பயங்கரவாதிகள் பட்டியல் இடம் பெற்றுள்ளமை ஜேடிஎஸ் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு வாரத்தில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில் இலங்கையின் மனித உரிமை நடத்தைகள் தொடர்பான அறிக்கையை உயர்ஸ்தானிகர் முன்வைக்க உள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் அரசாங்கத்திற்கு பதிலளிக்க ஜெனீவா சென்றுள்ளனர்.
நாட்டை விட்டு வெளியேறும் முன் கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்த வெளிவிவகார அமைச்சர், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்க சர்வதேச தலையீட்டை ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் அனுமதிக்காது என தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபைக்கு ஜேடிஎஸ் வழங்கிய முழு அறிக்கை கீழே இணைப்பில்;