ஐநா மனித உரிமைகள் பேரவை எனப்படுவது ஒரு நாட்டுக்கு எதிராகத் தீர்மானத்தை நிறைவேற்றலாம். ஆனால் அதை நடைமுறைப்படுத்தும் ஆணை அந்தப் பேரவையிடம் கிடையாது. அதை நடைமுறைப்படுத்தும் உபகரணம் எதுவும் அந்தப் பேரவையிடம் கிடையாது. ஒரு நாட்டுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பதற்கோ,பயன் பொருத்தமான அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கோ பேரவையால் முடியாது. மாறாக குறிப்பிட்ட ஒரு நாடு பேரவையோடு இணங்கிச் சென்றால் அந்த நாட்டுடன் இணைந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அந்த நாட்டின் இணையனுசரணையோடு ஐநா அலுவலர்கள் தொழிற்பட முடியும்.அதன்மூலம் ஒரு தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடியும்.
ராஜபக்சக்கள் ஆட்சியில் இருந்தவரை, ஐநா தீர்மானங்கள் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவே நிறைவேற்றப்பட்டன. அவை ஒருவிதத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான மேற்கத்திய வியூகங்களின் பகுதியாக காணப்பட்டன.அவை தமிழ்மக்களுக்கு ஆதரவானவை என்ற வெளித்தோற்றத்தை கொண்டிருந்தாலும், அவற்றுக்குப் பின்னால் இருந்த ராஜதந்திர இலக்கு என்னவென்றால், சீனாவை நோக்கிச் சாயும் இலங்கை அரசாங்கத்தை கட்டுப்படுத்துவதுதான். இந்த அடிப்படையில் ராஜபக்சக்களின் காலத்தில் ஐநா தீர்மானங்கள் அரசாங்கத்திற்கு எதிரானவை.ஆனால் ரணிலுடைய காலத்தில் 2015ல் ஐநாவுடன் அவர் இணக்கத்துக்கு வந்தார். அவ்வாறு இணை அனுசரணை வழங்கி உருவாக்கப்பட்டதுதான் நிலைமாறு கால நீதிக்கான 30/1 தீர்மானம்.
ஆனால் ரணில் விக்கிரமசிங்க இணை அனுசரணை வழங்கி உருவாக்கிய தீர்மானத்தின் பிரகாரம் கட்டமைப்புசார் மாற்றங்களை செய்யவில்லை. அதனால் நிலைமாறு கால நீதி இலங்கைத தீவில் ஓரழகிய பொய்யாக மாறியது. நாங்கள் ஒரு பரிசோதனை செய்தோம் அதில் தோற்று விட்டோம் என்று சுமந்திரன் வவுனியாவில் வைத்து தெரிவித்தார். ஏனெனில் கூட்டமைப்பு நிலைமாறுகால நீதியின் பங்காளியாகக் காணப்பட்டது.
இது 2015 ஆட்சி மாற்றத்தின் பின் நிகழ்ந்தது. அதன்பின் ராஜபக்சங்கள் மறுபடியும் வந்தார்கள். அவர்களுடைய காலத்தில் அரசாங்கத்திற்கு எதிராக ஐநா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு 46/1 தீர்மானத்தின் மூலம் சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கான ஒரு அலுவலகம் பரிந்துரைக்கப்பட்டது.
இப்பொழுது ரணில் வந்து விட்டார்.தர்க்கத்தின்படி பார்த்தால் இந்த முறை வரக்கூடிய தீர்மானம் ரணில் விக்ரமசிங்கவின் இணை அனுசரணையோடு நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கான வாய்ப்புகள் உண்டா?
இல்லை.ஏனெனில் ரணில் இப்பொழுது ராஜபக்சக்களின் முன்தடுப்பாக காணப்படுகிறார். அவருடைய வெளிவிவகார அமைச்சர் யார் என்றால், ராஜபக்சக்களின் தனிப்பட்ட வழக்கறிஞரான அலி சப்ரி. கடந்த திங்கட்கிழமை அலி சப்ரி பின்வருமாறு தெரிவித்தார்… “இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் குற்றச்சாட்டுக்களின் உண்மையை கண்டறிவதற்காக உள்ளக பொறிமுறை ஒன்று எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படும்“. ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் பேச்சுவார்த்தைமூலம் இணக்கமொன்றை ஏற்படுத்திக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அலிசப்ரி கொழும்பில் வைத்து கடந்த திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.
“இந்த உள்ளக பொறிமுறை ஊடாக மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இறுதி நிலைப்பாட்டை எட்டவுள்ளோம். இந்த விடயத்தில் இராணுவத்தின் மீது அநீதியான வகையில் பாரிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.எனவே, அவர்களுக்கும் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படும். அதேநேரம் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும். இலங்கையின் சட்டம் மற்றும் யாப்பு என்பவற்றுக்கு உட்பட்டு இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இலங்கையின் சட்டம் மற்றும் யாப்புக்கு அப்பால் சென்று எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது” எனவும் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
ஆனால்,2015ஆம் ஆண்டுபோல இம்முறை அரசாங்கத்தின் இணை அனுசரணையோடு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படக்கூடிய வாய்ப்புகள் உண்டா? குறிப்பாக முன்னைய தீர்மானத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட சாட்சிகளையும் சான்றுகளையும் திரட்டுவதற்கான அலுவலகத்தை ஒரு உள்நாட்டுப் பொறிமுறை மூலம் பதிலீடு செய்யவே முடியாது. ஏனென்றால் அந்த அலுவலகம் ஏற்கனவே இயங்கத் தொடங்கிவிட்டது.
அது ஒரு பலமான அலுவலகம் அல்ல. அது,கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் தேதி மூன்று தமிழ்த் தேசிய கட்சிகளும் ஜெனிவாவுக்கு கூட்டாக எழுதிய கடிதத்தில் கேட்டிருந்த பொறிமுறையும் அல்ல. அது மனித உரிமைகள் பேரவைக்கு கீழ்தான் இயங்கும்.கடந்த 13 ஆண்டுகளாக மனித உரிமைகள் பேரவை தமிழ் மக்களுக்கு எப்படிப்பட்ட நீதியைப் பெற்றுத்தந்தது என்பது எல்லாருக்கும் தெரியும்.
ஆனால் அப்பலவீனமான அலுவலகத்தைக்கூட சீனா மேலும் பலமிழக்கச் செய்ததாக புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. அந்த அலுவலகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை சீனா தலையிட்டு குறைத்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்கட்டமைப்புக்கு முதலில் பிரித்தானியாவும் நோர்வேயும் நிதிஉதவி வழங்குவதாக கூறப்பட்டது.ஆனால் அவ்வாறு விசேஷ நிதியை ஒதுக்காமல், ஐநாவின் பொதுநிதி ஒதுக்கீட்டுக்கூடாக அந்த அலுவலகத்தை இயக்கவேண்டும் என்று சீனா வலியுறுத்தியதாக தெரிய வருகிறது.
இது கடந்த ஆண்டு நடந்தது. ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு ஏற்கனவே நிதிப்பற்றாக்குறை உண்டு. அப்பற்றாக்குறை இந்த அலுவலகத்திலும் பிரதிபலித்தது. கடந்த ஆண்டு ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தன்னுடைய அறிக்கையில் இந்நிதிப் பற்றாக்குறை தொடர்பாக சுட்டிப்பாகக் கூறியுள்ளார். நிதி போதாமையால்தான் அவ்வலுவலகம் முழு வேகத்தோடும் முழுப்பலத்தோடும் இயங்க முடியவில்லை என்று சுட்டிக் காட்டப்படுகிறது. நிதி போதாமையால் அவ்வலுவகத்தின் ஆளணி 13 இல் இருந்து 8ஆகக் குறைக்கப்பட்டது. எனினும் அவ்வலுவலகம் இப்பொழுது இயங்குகின்றது. அது சாட்சியங்களைச் சேகரித்து வருகிறது. அந்த அலுவலகத்தை பலவீனப்படுத்தும் நோக்கத்தோடு அல்லது அதற்குரிய காரணங்களை வழுவிழக்கச் செய்யும் நோக்கத்தோடு அலி சப்ரி உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றைக் குறித்து பேசுகிறார்.
ஆனால் உள்நாட்டுப் பொறிமுறை, உள்நாட்டுச் சட்டங்கள், உள்நாட்டின் யாப்பு என்பவை தமிழ் மக்களுக்கு நீதியை வழங்க முடியாதவை என்ற கருதுகோளின் அடிப்படையில்தான் நிலைமாறு கால நீதி என்பது 2015 ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது. உள்நாட்டு நீதியானது போதுமானதாக இருந்தால் ஏன் நிலை மாறுகால நீதி என்ற ஐநா ஏற்பாட்டை குறித்து சிந்தித்திருக்க வேண்டும்? எனவே உள்நாட்டு நீதியின் போதாமை காரணமாகத்தான் ஐநாவின் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதன் அடுத்த கட்டமாக 46/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் எல்லாவற்றுக்குப் பிறகும் இலங்கை அரசாங்கம் இப்பொழுதும் உள்நாட்டுப் பொறிமுறை குறித்து கனவு காண்கிறது என்றால் அந்த கனவுக்கான துணிச்சல் எங்கிருந்து வருகிறது? ரணில் விக்கிரமசிங்கவை மேற்கு நாடுகள் கைவிடாது என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தானே ? அந்த நம்பிக்கை காலப் பொருத்தமுடையது அல்ல என்பதனை மேற்கு நாடுகள் நிரூபித்தால்தான் தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கலாம்.
சீனா கடந்த இரு ஆண்டுகளாக ஐநாவில் வெளிப்படையாக அரசாங்கத்தை ஆதரித்து வருகிறது. அண்மையில் சீனத் தூதுவர் ருவிற்றரில் இட்ட ஒரு பதிவு இம்முறையும் சீனா இலங்கை அரசாங்கத்தை கைவிடாது என்பதனை காட்டுகின்றது. ஏற்கனவே விசாரணைக் கட்டமைப்புக்குரிய நிதியை தந்திரமாக குறைத்தது சீனாதான் என்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு. இப்பொழுது சீனா வெளிப்படையாகவே இலங்கை அரசாங்கத்தின் பக்கம் நிற்கின்றது. இப்படிப்பட்ட ஒரு ஜெனிவாக் களத்தில் இந்தியா என்ன நிலைப்பாட்டை எடுக்கும்?
கடந்த ஆண்டு இந்தியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஒரு நாட்டுக்கு எதிராக தீர்மானம் வரும்பொழுது வாக்கெடுப்பைத் தவிர்ப்பது என்பது மறைமுகமாக அந்த நாட்டுக்கு எதிரானதுதான். ஆனால் தமிழ் மக்கள் அதைவிட வெளிப்படையாக இந்தியா தங்கள் பக்கம் நிற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். கடந்த 9 மாதங்களாக இலங்கைக்கு அதிகம் உதவிய நாடு இந்தியா. அந்த உதவியை ரணில் விக்கிரமசிங்க உயிர் மூச்சு என்று வர்ணித்தார். சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்புக்கு உயிர் மூச்சை வழங்கிய இந்தியா தமிழ் மக்களின் விடயத்தில் தெளிவான வெளிப்படையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். ஜெனிவாவில் இலங்கை பொறுத்து ஒருவித நிழல் போர் நிலைமையை சீனா தோற்றுவிக்கின்றது. இதில் மேற்கு நாடுகளும் இந்தியாவும் தமிழ்மக்களின் பக்கம் தெளிவான வெளிப்படையான நிலைப்பாட்டை எடுப்பார்களா?