யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன்
இலங்கையில் புகழ்பெற்ற ஈஸ்வரத் தலங்களில் ஒன்றான திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை வெளியார் ஆக்கிரமிப்பைத் தடுக்கவும் அதை எதிர்க்கவும் அகில இலங்கை இந்து மாமன்றத்தால் மூன்று முக்கிய தீர்மானங்கள் யாழ்ப்பாணத்தில் நிறைவேற்றப்பட்டது.
சைவசமய அமைப்புக்கள் ஒன்றுகூடி ஆராய்ந்து இந்த 3 தீர்மானங்கள் நிறைவேற்றின.
”தமிழர்களின் பூர்வீகச் சொத்தாக விளங்கும் திருகோணமலை திருக்கோனேஸ்வர ஆலயம் அமைந்துள்ள பகுதியில் திட்டமிட்டு சிங்கள வாணிப நிலையங்களை நிரந்தரமாக அமைப்பதற்கு அவசர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது” என்று அந்த மாமன்றம் கூறுகிறது.
வலிந்த இந்த முன்னெடுப்பு குறித்து பலரும் அரசாங்கத்திடம் தமது எதிர்ப்பைத் தெரிவித்த போதிலும், திட்டமிட்டு அரசின் ஆதரவோடு திருகோனேஸ்வரச் சூழல் பறிக்கப்பட்டு வருகிறது என்றும், ஆலயத்திற்கு உரித்தான 18 ஏக்கர் நிலப்பரப்புக் காணிக்குள் தொல்லியல் திணைக்களமும், கிழக்கு மாகாண ஆளுநரும் கோவில் நிலத்தை அபகரிக்கும் செயற்பாட்டில் இறங்கியிருப்பதைtஹ் தடுக்க அனைவரும் ஒன்றுபட்டு எதிர்பினை தெரிவிக்க வேண்டுமென்று கோரி அகில இலங்கை இந்து மாமன்றம் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று தீர்மானங்கள்:
1) வடக்கு கிழக்கு உட்பட அணைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக திருகோணமலை மாவட்டத்தின் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் இருப்பை பாதுகாத்து அதன் நெருக்கடிகளைக் களைய ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி ஆவண செய்ய வேண்டும்.
2) திருக்கோணஸ்வர் ஆலயத்தில் இந்தியத் தூதரகத்தின் உதவியுடன் இராஜகோபுரம் அமைத்து அதைக் காத்தல் உள்ளிட்ட விடயங்களை உடனடியாக தூதரகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வது.
3) திருக்கோணேச்சரத்திற்கான யாத்திரையை ஊக்குவிப்பது.
சைவப் பெரியவர்கள், குருமார்கள், சிவில் சமூகத்தினர், ஆலய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்ட இந்த கூட்டம் நல்லை ஆதீன குருமுதல்வர் தலைமையில் இடம்பெற்றது.
தொல்லியல் திணைக்களம் திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்திற்கு அளிக்கும் இடையூறுகளையும் அதையடுத்து ஆலயத்திற்கு எழுந்துள்ள நெருக்கடிகளும் அதற்கான தீர்வுகளும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
இந்த கலந்துரையாடலில் உரையாற்றிய கலாநிதி ஆர்.திருமுருகன் தனது உரையில் திருகோஸ்ணேஸ்வரத்தை பாதுகாக்க அனைவரும் உடனடியாக செயற்பாட்டில் இறங்க வேண்டும் என்று அகில இலங்கை இந்து மாமன்றத்தின் கலாநிதி ஆறு. திருமுருகன் வலியுறுத்தினார்.
”திருகோணமலைக்கு என்ன பதில் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் குரல் எழுப்புவதனைத் தவிர இன்று வேறு மார்க்கம் இல்லை. இதுவே திருக்கேதீஸ்வரத்திலும் இடம்பெற்றது. அதன்போது அந்த மாவட்ட மக்கள் பிரதிநிதிகள்கூட வாய் திறக்கவில்லை. இது மதம் மட்டுமன்றி இனம் சார்ந்த அழிவிற்கும் இட்டுச் செல்லப்போகின்றது. திருக்கோணேஸ்வரச் செய்தி மூலம் திருமலையை அபகரிக்க எடுத்த சதிகள் அம்பலமாகியுள்ளது. நாம் எல்லாவற்றையும் ஜெனிவாவிற்கு கொண்டு போகின்றோம் என்பதும் யதார்த்தத்திற்குப் பொருத்தம் அற்றது. அதேநேரம் தொல்லியல் திணைக்களத்தின் அநியாயமும் சொல்லி மாளாத அளவிற்கு உள்ளது” என்று உருக்கமாக கூறினார்.
முக்கியமானதாகக் கருதப்படும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய கோணேச்சர ஆலய நிர்வாகத்தின் உப செயலாளர் அருண் “ஆலயத்தின் 1971-01-20 ஆம் திகதி வரைபடத்தின் பிரகாரம் தொல்லியல் திணைக்களமே வர்த்தமாணியில் 18 ஏக்கர் உண்டு , அதேபோன்று தீர்த்தக் கேணியில் 3 ¼ ஏக்கர் உண்டு என்றும் 2009 ஆம் ஆண்டின் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றும் 12 அடி அகலக் கோட்டை வாசல் ஊடாக பாதுகாப்புப் படையின் அனுமதி பெற்றே ஆலயத்திற்குச் செல்ல முடியும்” எனச் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்ற மாதாந்த கூட்டத்தில் மாவட்ட செயலக தீர்மானத்தின் அடிப்படையில் ஆலய சூழலில் உள்ள கடைகளில் 56 கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற நிதி இன்மை காரணம் காட்டப்பட்டது, அதேநேரம் புதிய கோபுரம் அமைக்கவும் தீர்மானித்தோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆலயத்தில் அண்மையில் இடம்பெற்ற கும்பாபிசேகத்தின் பிரதம குரு மகாலிங்கசிவ குருக்களும் இந்த கலந்துரையாடலில் பங்குபெற்று உரையாற்ரினார்.
”கும்பாபிசேக காலத்தில் ஒரு பக்கேற் சீமேந்து கொண்டு செல்வதானால்கூட இராணுவ அனுமதி பெற வேண்டும். இது நான் கண்ணால் கண்ட செய்தி. எந்தப் பொருளிற்கும் விளக்கம் வேண்டும் அதற்கு அவர்களிற்கு திருப்தி இருந்தால் மட்டுமே அனுமதி கிடைக்கும். பாடல்பெற்ற தலத்தின் இன்றைய நிலையிது. பழம்பெரும் பொக்கிசத்தின் அவலம் இது” என்று மிகவும் வருத்தப்பட்டு மனம் கலங்கினார்.
சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனும் அகில இலங்கை இந்து மாமன்றம் ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தில் பங்குபெற்றார். திருகோணேஸ்வரத்திற்காக பாடுபட்ட ஒரே அரசியல்வாதி திருச்செல்வம் மட்டுமே என்று கூறி, மற்றவர்களை மறைமுகமாகச் சாடினார்.
திருகோணேஸ்வரர் ஆலயம், அதன் சுற்றாடல் மற்றும் ஆலயத்திற்குச் சொந்தமான காணிகள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்க இந்தியாவின் உதவியை தன்னால் பெற்றுத்தர முடியும் என்று அவர் தெரிவித்தார்.
”கோணேச்சர இருப்பிற்கு நாம் நான்கு வழிகளில் முயல வேண்டும். நல்லூர் இன்று திகழ அன்று வழி ஏற்படுத்திய மாப்பாண் முதலியார் கொடி பிடித்துப் போராடவில்லை பேசியே அதனைச் சாதித்தார்”. இலங்கையில் மற்ற சமயத்தினர் இந்துமத கோவில்கள் இடிக்கப்பட்டத்தை பற்றி வெளிப்படையாகப் பேசிக் கொண்டிருந்த போது இந்துக்கள் மௌனமாக இருந்தார்கள் என்று கூறிய அவர், இலங்கையில் இந்துக்களும் அவர்களது ஆலயங்களும் பாதுகாக்கப்பட இந்தியாவின் உதவியை நாட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்தியாவில் சுமார் 100 கோடி இந்துக்கள் உள்ளனர், அவர்களின் உதவியை இந்த விடயத்திலும் பெற முடியும் என்று மறவன்புலவு சச்சிதானந்தம் கூறினார். இந்தியாவில் தமிழர்கள் என்றால் பிரிவினை கோருபவர்கள் அல்லது ராஜீவ் காந்தியை கொன்றவர்கள் என்கிற எண்ணம் உள்ளது, ஆகவே இந்தியாவுடன் பேசும் போது இந்துக்கள் என்கிற வகையில் பேசி தமது கோவில்கள், அதனுடைய சொத்துக்கள், கலாச்சார மரபுகளைப் பாதுகாக்க உதவி கோர வேண்டும் என்றும் கூறிய அவர், அனைவரும் இணங்கினால் அதற்கான முயற்சியை இந்தியாவில் தன்னால் முன்னெடுக்க முடியுமென்றார்.
அவரை உரையாற்றிக் கொண்டிருக்கும் போது இடைமறித்த நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசு அன்பாகப் பேசுவதில்லையே என்று விசனம் வெளியிட்டார்.
இலங்கையில் தொடர்ச்சியாக தமிழர்களின் பிரதேசங்களும், ஆலயச் சூழல்களும் தொல்லியல் பூமி என்ற போர்வையின் கீழ் வலிந்து பறிக்கப்படுகின்றன.
அண்மையில் முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர் மலையிலுள்ள ஆதி சிவன் கோவில் மற்றும் அதன் சுற்றாடல்களை தொல்லியல் பூமி என்றும் அங்கு பௌத்தச் சின்னங்கள் காணப்படுகின்றன என்று கூறிய இலங்கை அரசு அங்கு இந்து பக்தர்கள் சென்று வழிபடுவதற்கு கடும் நிபந்தனைகளை விதித்து வருகிறது. கடந்த ஆண்டு அங்கு இராணுவத்தின் உதவியுடன் அகழ்வாராய்ச்சி பணிகள் வலிந்து முன்னெடுக்கப்பட்டு அங்கு பௌத்த விகாரை ஒன்று நிறுவப்பட்டது.
அதேபோன்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிவராத்திரியன்று முல்லைத்தீவு மூங்கிலாறு பகுதியிலுள்ள சிவன் கோவின் குருக்களை பொது முடக்கம் என்ற காரணம் காட்டி மிரட்டி பூசைகளைச் செய்யவிடாமல் தடுத்த சம்பவம் இடம்பெற்றது. புதிதாகக் கட்டப்பட்ட அந்த கோவிலின் இரண்டு குருமார்கள் மற்றும் அறங்காவலர் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு நான்கு மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயம் கடந்த பல ஆண்டுகளாகவே அழுத்தங்களை சந்தித்து வருகிறது என்றும், ஆலயச் சூழல் போர்க்காலத்தில் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதி போன்றுள்ளது என்று உள்ளூர் பக்தர் குமாரசாமி சிவனருள் கனடா உதயனிடம் தெரிவித்தார். ஆலையத்தை அண்மித்த பகுதியில் நீண்ட காலமாக கடைவைத்து அதன் மூலம் தனது வாழ்வாதாரத்தை முன்னெடுத்த செல்வராணி, இலங்கை பாதுகாப்பு படையினரால் அண்மையில் தான் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகவும், தமக்கு மாற்று இடத்தில் வாழ்வாதாரத்தை முன்னெடுக்க எந்த உத்தரவாதமும் அரச தரப்பால் வழங்கப்படவில்லை என்றார்.
திருகோணமலை கோவிலை பாதுகாப்பது குறித்த இந்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறீதரன் ஆகியோரும், மாகாண சபை உறுப்பினர்களும் பங்குபெற்றனர்.