தவறுமேல் தவறிழைக்கும் பிரதேச செயலகம்!
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட பகுதிகளில் சேதன பசளை உற்பத்திக்காக மரியாம்பிள்ளை இக்னேசியஸ் என்பவரினால் குத்தகை அடிப்படையிலான முறையில் காணி பிரதேச செயலகத்திடம் கோரப்பட்டிருந்தது
இதேவேளை குறித்த செயற்றிட்டத்த்திற்காக பிரதேச செயலக மட்டத்திலான காணி பயன்பாட்டுகுழு கூட்டத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிபார்சுக்காக முன்வைக்கப்படாமல், மாவட்ட மட்ட காணிபயன்பாட்டு குழு கூட்டத்தில் சிறாட்டிகுளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் மாவட்ட அனுமதி பெறப்பட்டு கிராம மட்ட அமைப்புக்கு தெரியாமல் கரும்புள்ளியான் பகுதியில் குறித்த செயற்றிட்ட நடவடிக்கைக்காக 2021.10.12 ஆம் திகதி மற்றும் 2021.11.09 ஆம் திகதிகளில் இரு கடிதங்கள் மூலம் பிரதேச செயலகத்தினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது
குறித்த சம்பவம் பிரதேச மக்கள் வயற்காணி இல்லாமல் இருக்கும் சூழ்நிலையில் கிராம மட்ட அமைப்புக்களுக்கு தெரியாமல் கரும்புள்ளியான் பகுதியில் 49 ஏக்கர் காணி வழங்கப்படுகிறது என ஊடகங்களில் வெளியான செய்தியினை அடுத்து கரும்புள்ளியான் பகுதியில் பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட அனுமதி கடிதத்தை ரத்து செய்வதாகவும் சிறாட்டிக்குளம் கிராம உத்தியோகத்தர் பகுதியில் குறித்த செயற்றிட்டத்திற்காக அனுமதி வழங்கப்படுவதாகவும் மீளவும் ஒரு அனுமதி கடிதம் 2021.12.02 ஆம் திகதி சிறாட்டிக்குளம் பகுதியில் சேதன பசளை நடவடிக்கைக்கென வழங்கப்பட்டது
இதேவேளை தற்போது எந்த ஒரு நடவடிக்கையும் குறித்த பகுதிகளில் இடம்பெறாத சூழலில் மீளவும் ஒரு கடிதம் 2022.08.25ஆம் திகதி பொன்னகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் 49 ஏக்கர் காணி மரியாம்பிள்ளை இக்ன்சியஸ் என்பவருக்கு இயற்கை பசளை உற்பத்திக்காக நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு நில அளவை செய்து தருமாறு மாவட்ட நில அளவை திணைக்களத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
இதேவேளை மாந்தை கிழக்கில் வயற்காணிகளே இல்லாத நிலையில் பல குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் பிரதேச செயலகம் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தி பிரதேச மக்களுக்கான காணிகளை வழங்கி விட்டு மேலதிகமாக இருக்கும் அரச காணிகளை இவ்வாறானதொரு செயற்பாட்டிற்கு வழங்குவது நன்மை பயக்கும் என கிராம மட்ட விவசாய அமைப்புக்கள் கவலை தெரிவிக்கின்றன
இதேவேளை தனி நபர் ஒருவருக்கு மாந்தை கிழக்கின் குடியேற்ற உத்தியோகத்தரின் தனிப்பட்ட விருப்பின் பேரில் கரும்புள்ளியான் பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு அண்மையிலான காணி வழங்கப்பட்ட போதிலும் அவை முறையான அனுமதி பெறப்பட்டு வழங்கப்படவில்லை என்றும் ஏற்கனவே பிரதேச மட்ட காணி பயன்பாட்டு குழுவில் 02 ஏக்கருக்கான அனுமதி வழங்கப்பட்ட போதும் மாவட்ட மட்ட காணிப்பயன்பாட்டு குழுவில் களப்பரிசீலனை செய்து வழங்குவது குறித்து தீர்மானிக்கலாம் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்நது.
எனினும் கடந்த 2022.06.15 ஆம் திகதி வட மாகாண காணி ஆனையாளர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பங்கு பற்றி இருந்த பிரதேச மட்ட விசேட காணி குழு கூட்டத்தில் மீண்டும் அவற்றுக்கான அனுமதிக்காக 02 ஏக்கர் குடியேற்ற உத்தியோகத்தரால் காட்சி படுத்தப்பட்டது என்றும் இரு கூட்டங்களிலும் 02 ஏக்கர் வீதம் மொத்தமாக 04 ஏக்கரையும் வழங்குவதற்கான பிராயத்தனத்தில் ஈடுபட்டுள்ளார் என்றும் அனுமதி வழங்கப்படாமலே 2 வருடமாக குறித்த காணியில் மேற்குறித்த செய்கையாளர் பயிர்ச்செய்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் சொந்த வயல் காணியில் துப்பரவு செய்ய அனுமதி கேட்கும் குடியேற்ற உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு ஆதரவாக இயங்குவதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்த அமைப்பினர் மேற்குறித்த செய்கையாளர்கள் தன்னிச்சையாக அரச காணிகளை துப்பரவு செய்யும் போது கரும்புள்ளியான் கிராம சேவகரும் பாராமுகமாக இருந்து குறித்த செயற்பாட்டுக்கு உடந்தையாக இருப்பதாக தெரிவித்த கிராம அமைப்புக்கள் உரிய அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வயல் காணிகள் இன்றி இருக்கும் மக்களுக்கு காணிகளை குத்தகை அடிப்படையிலேனும் வழங்கிவிட்டு மேலதிகமாக இருக்கும் காணிகளை வெளி நபர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதற்கும் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்